லூக்கா 18:2-43
லூக்கா 18:2-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள். “கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட, இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார். பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்! அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார். தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல. நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான். “ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள். இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார். அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே. ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார். அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான். இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார். இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார். அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான். அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால், அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார். சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான். முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார். உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.
லூக்கா 18:2-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
லூக்கா 18:2-43 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான். “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார். தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான். “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.” இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார். ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’” என்றார். ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான். இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான். அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள். பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார். பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான். இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார். பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான். மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள். குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான். அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான். இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார். குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான். இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார். அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.
லூக்கா 18:2-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.