லூக்கா 18:18-27

லூக்கா 18:18-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே. ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார். அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான். இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார். இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார்.

லூக்கா 18:18-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

லூக்கா 18:18-27 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். ஆனால் நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வேன். உனக்கு தேவனுடைய பிரமாணங்கள் தெரியும். ‘நீ தீய ஒழுக்கமாகிய பாவத்தைச் செய்யக்கூடாது. நீ ஒருவரையும் கொலை செய்யக்கூடாது. நீ எந்தப் பொருளையும் திருடக் கூடாது. பிறரைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. உனது தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும்’” என்றார். ஆனால் அந்த அதிகாரி, “சிறுவனாக இருந்தபோதே இக்கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன்” என்றான். இதைக் கேட்டதும் இயேசு அதிகாரியை நோக்கி, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது. உன் பொருட்கள் எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடு. பரலோகத்தில் உனக்கு பலன் கிடைக்கும். பின்பு என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அம்மனிதன் இதைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தான். அவன் பெரிய பணக்காரன், எல்லாப் பணத்தையும் தானே வைத்துக்கொள்ள விரும்பினான். அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள். பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.

லூக்கா 18:18-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்