லூக்கா 15:20-24

லூக்கா 15:20-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். “மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான். “ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள். மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

லூக்கா 15:20-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

லூக்கா 15:20-24 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே அந்த குமாரன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான். “அந்த குமாரன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த குமாரனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். குமாரனை அரவணைத்து முத்தமிட்டார். குமாரன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் குமாரன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான். “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். என்னுடைய இந்த குமாரன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.

லூக்கா 15:20-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.