லூக்கா 14:7-14
லூக்கா 14:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவதுபண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
லூக்கா 14:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சாப்பாட்டு பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை இயேசு கவனித்து, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்: “யாராவது உங்களை திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை, இவருக்குக் கொடு’ என்று உனக்குச் சொல்லக்கூடும். அப்பொழுது நீ வெட்கமடைந்தவனாய், கடைசி இடத்திற்கு போய் உட்கார நேரிடும். ஆகவே, உங்களை யாராவது அழைக்கும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவன் உன்னிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீ மதிப்பைப் பெறுவாய். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார். பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மத்தியான உணவையோ, இரவு உணவையோ கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்கவேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய், அவர்கள் உனக்குப் பதில் உதவி செய்துவிடுவார்கள். எனவே, நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக; அப்பொழுது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால், அதற்கான பதில் உதவி எதையும் உனக்குச் செய்யமுடியாது. ஆனால், நீ நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் அதற்கான பதில் உதவியைப் பெற்றுக்கொள்வாய்” என்றார்.
லூக்கா 14:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
லூக்கா 14:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)
விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார். “ஒருவன் உங்களை ஒரு திருமணத்திற்காக அழைக்கும்போது, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள். அந்த மனிதன் உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் ஒருவரை அழைத்திருக்கக் கூடும். நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும். “எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள். தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்றார். பின்பு இயேசு தன்னை அழைத்த பரிசேயனை நோக்கி, “நீ பகலுணவோ, இரவுணவோ அளிக்கையில், உன் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வந்தர்களாகிய அக்கம் பக்கத்தார் ஆகியோரை மட்டும் அழைக்காதே. மற்றொரு முறை அவர்கள் உன்னைத் தம்மோடு உண்ணுவதற்காக அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு உன் பலன் கிடைத்துவிடும். அதற்கு மாறாக, நீ விருந்தளிக்கும் போது, ஏழைகளையும், முடமானவர்களையும், நொண்டிகளையும், குருடர்களையும் அழைத்துக்கொள். அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்றார்.