லூக்கா 12:49-59

லூக்கா 12:49-59 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன். இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார். மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது. தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது. வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி? “சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்? நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும். உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

லூக்கா 12:49-59 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன். ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார். பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும். தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும். மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன? நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன? உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான். நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 12:49-59 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன். நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன். இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள். மகன் தந்தையை எதிர்த்து நிற்பான். தந்தை மகனை எதிர்த்து நிற்பான். தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள். மகள் தாயை எதிர்த்து நிற்பாள். தாய் மகளை எதிர்த்து நிற்பாள். மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள். மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள். மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.” பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார். “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை? ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும். அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.

லூக்கா 12:49-59 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும். மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான். நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.