லூக்கா 12:32-59

லூக்கா 12:32-59 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார். உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை. ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். “பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள். திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும். எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான். அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது. இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே. நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார். அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான். கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான். தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான். ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான். “வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும். “பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன். இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார். மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது. தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது. வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி? “சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்? நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும். உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

லூக்கா 12:32-59 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார். உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை. உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும், தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள். திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்? எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால், அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான். தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள். பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன். ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார். பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும். தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும். மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன? நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன? உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான். நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 12:32-59 பரிசுத்த பைபிள் (TAERV)

“சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.” “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார். “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார். “ஆண்டவரே நீங்கள் இந்த உவமையை எங்களுக்காக மட்டுமா அல்லது எல்லா மக்களுக்காகவுமா கூறினீர்கள்?” என்று பேதுரு கேட்டான். அவனுக்குப் பதிலாகக் கர்த்தர், “யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார். “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார். “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார். இயேசு தொடர்ந்து சொன்னார், “உலகத்தில் அக்கினியைக் கொண்டு வருவதற்காக நான் வந்தேன். அது ஏற்கெனவே எரியத் தொடங்கி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இன்னொரு ஞானஸ்நானத்தைப் பெறவேண்டும். அது முடியும்வரைக்கும் நான் தொல்லைக்குள்ளானதாக உணர்கிறேன். நான் உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. நான் உலகில் பிரிவை ஏற்படுத்த வந்தேன். இப்போதிலிருந்து, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். “தந்தையும் மகனும் பிரிந்திருப்பார்கள். மகன் தந்தையை எதிர்த்து நிற்பான். தந்தை மகனை எதிர்த்து நிற்பான். தாயும் மகளும் பிரிந்திருப்பார்கள். மகள் தாயை எதிர்த்து நிற்பாள். தாய் மகளை எதிர்த்து நிற்பாள். மாமியாரும் மருமகளும் பிரிந்திருப்பார்கள். மருமகள் மாமியாரை எதிர்த்து நிற்பாள். மாமியார் மருமகளை எதிர்த்து நிற்பாள்.” பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்று உடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்று வெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின் மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார். “சரியான ஒன்றைக் குறித்து ஏன் உங்களால் முடிவெடுக்க முடியவில்லை? ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடுக்கும்போது அதைத் தீர்க்கும்பொருட்டு அவனோடு நீதிமன்றத்துக்குப் போகும்போது, வழியிலேயே அதைத் தீர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அந்த வழக்கைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் நியாயாதிபதியிடம் உங்களை அழைத்துச் செல்லக் கூடும். நியாதிபதி உங்களை ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்க, அவன் உங்களைச் சிறையில் தள்ளக் கூடும். அவர்கள் உங்களிடமிருக்கும் கடைசிக் காசுவரை அனைத்தையும் எடுக்கிறவரைக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியே வரப்போவதில்லை” என்றார்.

லூக்கா 12:32-59 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப் படியுமாகும். மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான். நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.