லூக்கா 12:13-21

லூக்கா 12:13-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார். பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார். மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். “பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து. பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான். “அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார். “தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.

லூக்கா 12:13-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார். தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

லூக்கா 12:13-21 பரிசுத்த பைபிள் (TAERV)

கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார். பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான். “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான். “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார். “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.

லூக்கா 12:13-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்