லூக்கா 12:1-15

லூக்கா 12:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள். மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும். “என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது. “நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள். ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார். கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார். பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.

லூக்கா 12:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள். நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

லூக்கா 12:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார். பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே. “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது. “நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன். “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான். “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார். கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.

லூக்கா 12:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய்விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.