லூக்கா 11:5-13

லூக்கா 11:5-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குப் பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது, “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். இவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு. பயணம் செய்துகொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு உணவு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால், அப்பொழுது உள்ளே இருக்கிற அவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டுவிட்டது. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் நிமித்தம் எழுந்து அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும், வெட்கப்படாமல் அவன் கேட்டுக்கொண்டிருப்பதன் நிமித்தமாவது எழுந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான். “ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவர்கள் கண்டடைகின்றனர்; தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது. “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடம் மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? அல்லது அவன் ஒரு முட்டையைக் கேட்டால், யாராவது அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!”

லூக்கா 11:5-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே, என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

லூக்கா 11:5-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள். வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான். உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும். உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள். உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை. நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார்.

லூக்கா 11:5-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.