லூக்கா 10:30-35

லூக்கா 10:30-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான். அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.”

லூக்கா 10:30-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி, அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

லூக்கா 10:30-35 பரிசுத்த பைபிள் (TAERV)

அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான். “ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான். சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான். மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான்.

லூக்கா 10:30-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.