லூக்கா 1:30-38
லூக்கா 1:30-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள். அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான். அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
லூக்கா 1:30-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
லூக்கா 1:30-38 பரிசுத்த பைபிள் (TAERV)
தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான். மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள். தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு குமாரனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான். மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.
லூக்கா 1:30-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.