லூக்கா 1:14-64
லூக்கா 1:14-64 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்; அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான். அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான். அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான். அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான். அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள். அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான். அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள். அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள். ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை, ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான். தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள். ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள். அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான். அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான். அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்; அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது! என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன். உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள். அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது. ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்; வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர். அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார். அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார். ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார். அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார். அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார். நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள். எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள். அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள். அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான். உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
லூக்கா 1:14-64 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான். தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான். மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான். அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான். அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள். எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான். அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள். வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார். ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார். நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள். மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள். எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள். அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி, சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
லூக்கா 1:14-64 பரிசுத்த பைபிள் (TAERV)
நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான். “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான். சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான். தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான். வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான். பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத், “தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார்” என்று கூறினாள். எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள். தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான். தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். “இதன் பொருள் என்ன?” என்று மரியாள் அதிசயித்தாள். தூதன் அவளிடம், “பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார். கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார். சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான். மரியாள் தூதனை நோக்கி, “இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள். தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு குமாரனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான். மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான். மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது. எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள். அப்போது மரியாள், “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது. நான் முக்கியமற்றவள், ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார். இப்போது தொடங்கி, எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர். ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார். அவர் பெயர் மிகத் தூய்மையானது. தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார். தேவனின் கைகள் பலமானவை. செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார். சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார். தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார். நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார். செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார். தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார். அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார். நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்” என்று சொன்னாள். மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள். குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள். மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர். சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான்.
லூக்கா 1:14-64 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத் திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான். அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள். ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள். எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.