லூக்கா 1:1-23
லூக்கா 1:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள். துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள். நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன். இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம். ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள். அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள். ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள். ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான். ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான். தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும். அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்; அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான். அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான். அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான். அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான். அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள். அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான். அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
லூக்கா 1:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை, ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர். ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று, அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள். எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள். அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான். தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான். மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான். அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
லூக்கா 1:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)
அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன். ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர். தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான். “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான். சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான். தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான். வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது. சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.
லூக்கா 1:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். அப்படியிருக்க, அவன் தன் ஆசாரியவகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான். தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத் திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான். அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.