லேவியராகமம் 7:1-10

லேவியராகமம் 7:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘குற்றநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகா பரிசுத்தமானது. தகன காணிக்கை மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே, குற்றநிவாரண காணிக்கைக்கான மிருகமும் வெட்டிக் கொல்லப்படவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கப்படவேண்டும். அதன் கொழுப்பு முழுவதும் காணிக்கையாகச் செலுத்தப்பட வேண்டும். கொழுப்பான வாலும், உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அகற்றப்பட வேண்டிய ஈரலை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது குற்றநிவாரண காணிக்கை. ஆசாரியனின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. “ ‘பாவநிவாரண காணிக்கையும், குற்றநிவாரண காணிக்கையும் ஒரே விதிமுறைப்படியே செய்யப்படவேண்டும். அவற்றைக் கொண்டு பாவநிவிர்த்தி செய்யும் ஆசாரியனுக்கே அவை சொந்தமாகும். யாருக்காகிலும் தகன காணிக்கையைச் செலுத்தும் ஆசாரியன் அதன் தோலை தனக்காக எடுத்துக்கொள்ளலாம். அடுப்பில் தயாரிக்கப்பட்டதும், சட்டியில் சமைக்கப்பட்டதும், இரும்பு வலைத்தட்டியில் சுடப்பட்டதுமான தானியக் காணிக்கைகள் எல்லாம், அவற்றைச் செலுத்தும் ஆசாரியருக்கே உரியன. எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும், எல்லா தானியக் காணிக்கையும் ஆரோனின் மகன்கள் எல்லோருக்கும் சமமாக உரியதாகும்.

லேவியராகமம் 7:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும். ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும். எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.

லேவியராகமம் 7:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

“குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது. தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே ஆசாரியன் குற்ற பரிகார பலியையும் கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி ஆசாரியன் தெளிக்க வேண்டும். “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் கொழுப்பு முழுவதையும், செலுத்தவேண்டும். அவன் அதன் வாலையும் குடல்களை மூடியிருக்கிற கொழுப்பையும் அளிக்க வேண்டும். ஆசாரியன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பையும் எடுத்து அளிக்க வேண்டும். மேலும் கல்லீரலின் கொழுப்பு பகுதியையும் சிறு நீரகங்களோடு எடுத்து செலுத்த வேண்டும். இவற்றைப் பலிபீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்க வேண்டும். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது குற்ற பரிகார பலியாகும். “இக்குற்ற பரிகார பலியை ஆசாரியனின் குடும்பத்தில் உள்ள எந்த ஆண் மகனாயினும் உண்ணலாம். இது மிகவும் பரிசுத்தமானது. எனவே அது ஒரு பரிசுத்தமான இடத்தில் உண்ணப்பட வேண்டும். இக்குற்ற பரிகார பலியானது பாவப் பரிகார பலியைப் போன்றதாகும். இரண்டுக்கும் ஒரேவிதமான விதிமுறைகளே உள்ளன. எனவே பலியைக் கொடுத்த ஆசாரியனே அப்பலியின் இறைச்சியைப் பெறுவான். ஒருவனது தகன பலியைச் செலுத்திய ஆசாரியன் தான் செலுத்திய பலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளலாம். எல்லா தானியக் காணிக்கைகளும் அதை முன்னின்று வழங்கும் ஆசாரியனுக்கே உரியதாகும். அடுப்பில் சமைக்கப்பட்டதாகவோ, அல்லது சட்டியிலும், தட்டையான சட்டியிலும் சமைக்கப்பட்டதாகவோ இருக்கும் காணிக்கையானது ஆசாரியனுக்கே சேரும். ஆரோனின் குமாரர்களுக்கு தானியக் காணிக்கைப் பொருள்கள் சேரும். அவை உலர்ந்ததா அல்லது எண்ணெயில் கலக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரோனின் குமாரர்கள் அதனைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

லேவியராகமம் 7:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. பாவநிவாரணபலி எப்படியோ குற்ற நிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும். ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும். எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.