லேவியராகமம் 6:1-6
லேவியராகமம் 6:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “யாராவது ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளையோ அல்லது அவனுடைய கவனிப்பில் விடப்பட்ட பொருளையோ வஞ்சிப்பதினாலாவது, திருடுவதினாலாவது, அவனை ஏமாற்றுவதினாலாவது தன் அயலானுக்கு எதிராகப் பாவஞ்செய்து, யெகோவாவுக்கு உண்மையற்றவனாயிருக்கக்கூடும். அல்லது அவன் தொலைந்த பொருட்களைக் கண்டெடுத்தும் அதைக் குறித்துப் பொய் சொல்வதினாலாவது, பொய்யாய் சத்தியம் செய்வதினாலாவது, மக்கள் செய்யக்கூடிய இப்படியான எந்த ஒரு பாவத்தையும் அவன் செய்வதினால் யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருக்கக்கூடும். இவ்வாறு அவன் பாவங்களைச் செய்து குற்றவாளியாகிறான். அவன் தான் திருடியதையோ அல்லது பலவந்தமாய் எடுத்துக்கொண்டதையோ அல்லது தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதையோ அல்லது தான் கண்டெடுத்த தொலைந்த பொருளையோ அல்லது அவன் பொய்யாய் சத்தியம் செய்துகொண்ட எதையுமோ அவன் கட்டாயமாக திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும், அதனுடன் சேர்த்துத் தன் குற்றநிவாரண பலியைச் செலுத்தும் நாளில், அதன் சொந்தக்காரனுக்கு அது முழுவதையும் ஒப்படைக்கவேண்டும். தனக்கான தண்டனையாக தன் குற்றநிவாரண காணிக்கையை ஆசாரியனிடத்தில், அதாவது யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் செம்மறியாட்டுக் கடா உரிய மதிப்பு உடையதாகவும் குறைபாடு அற்றதாகவும் இருக்கவேண்டும்.
லேவியராகமம் 6:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானை ஏமாற்றி, அல்லது ஒரு பொருளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடையூறுசெய்து, அல்லது காணாமற்போனதைக் கண்டுபிடித்து அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாக சத்தியம் செய்து, மனிதர்கள் செய்யும் இதைப்போல யாதொரு காரியத்தில் பாவம்செய்தான் என்றால், அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானதால், தான் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டதையும், இடையூறுசெய்து பெற்றுக்கொண்டதையும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், பொய்யாக சத்தியம் செய்து சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் சேர்த்து, அதைத் தான் குற்றநிவாரணபலியை செலுத்தும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் யெகோவாவுக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
லேவியராகமம் 6:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயிடம், “கர்த்தர் சொன்னவற்றுக்கு எதிராக ஒருவன் இந்தப் பாவங்களில் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒருவன் தான் பெற்ற தொகையைப்பற்றிப் பொய் சொல்லலாம். ஒருவன் சிலவற்றைத் திருடியிருக்கலாம். அல்லது ஒருவன் இன்னொருவனை ஏமாற்றியிருக்கலாம். அல்லது ஒருவன் காணாமல் போனதைக் கண்டுபிடித்து விட்டு பின் அதுபற்றி பொய் சொல்லலாம்; அல்லது ஒருவன் ஒன்றைச் செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டு சத்தியத்தின்படி செய்யாமல் இருக்கலாம். அல்லது ஒருவன் வேறுவிதமான தவறுகள் செய்யலாம். ஒருவன் மேற்கூறியபடி ஏதேனும் ஒன்றைச் செய்வானேயானால் அவன் பாவியாகக் கருதப்படுகிறான். அவன் எதைத் திருடியிருந்தாலும் திரும்பிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். ஏமாற்றிப் பொருளை எடுத்திருந்தாலும், பாதுகாப்புக்காக இன்னொருவன் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை எடுத்திருந்தாலும், எதையாவது கண்டுபிடித்து பொய் சொல்லியிருந்தாலும் அல்லது சத்தியம் செய்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்தாலும் சரிசெய்துகொள்ள வேண்டும். அவன் அதற்குரிய முழுமையான விலையைக் கொடுக்க வேண்டும். அதோடு அவற்றில் மதிப்பில் ஐந்தில் ஒரு பாகத்தை அதிகமாகக் கொடுக்க வேண்டும். அத்தொகையை அதன் உண்மையான சொந்தக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். அவன் இவற்றையெல்லாம் கொண்டுவந்து தரும் நாளிலேயே குற்ற நிவாரண பலியைச் செலுத்த வேண்டும். அவன் தன் குற்றபரிகாரப் பலியை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். அது மந்தையிலிருந்து தேர்ந்தெடுத்த ஆடாயிருக்க வேண்டும். எல்லாவிதத்திலும் குறையற்றதாக இருக்கவேண்டும். ஆசாரியன் சொல்லும் விலைக்கு ஏற்றதாக அது இருக்கவேண்டும். அது கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய குற்ற பரிகாரப் பலியாகும்.
லேவியராகமம் 6:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து, அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில், அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.