லேவியராகமம் 3:1-5
லேவியராகமம் 3:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ ‘யாராவது ஒருவனுடைய காணிக்கை சமாதான காணிக்கையாக இருந்து, அவன் மாட்டு மந்தையிலிருந்து காளையையோ அல்லது பசுவையோ செலுத்துவதானால், அவன் யெகோவாவுக்கு முன்பாக குறைபாடற்ற ஒரு மிருகத்தை ஒப்படைக்கவேண்டும். அந்த பலி மிருகத்தின் தலையின்மேல் அவன் தன் கையை வைத்து, சபைக்கூடார வாசலில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள். சமாதான காணிக்கையிலிருந்து நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் பலியாக அவன் கொண்டுவர வேண்டியன: உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பு முழுவதும், அவற்றை இணைக்கிற கொழுப்பு, விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும். ஆரோனின் மகன்கள் இவற்றைப் பலிபீடத்தில் எரிகிற விறகின் மேலேயுள்ள தகன காணிக்கையின்மேல் வைத்து எரிப்பார்கள். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
லேவியராகமம் 3:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
லேவியராகமம் 3:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஒருவன் சமாதானப் பலியைப் படைக்க விரும்பினால் அந்த மிருகம் காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக படைக்கப்படுகிற அம்மிருகம் எவ்விதமான குறையுமற்றதாக இருக்க வேண்டும். அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து ஆசாரிப்புக் கூடார வாசலில் அதனைக் கொல்ல வேண்டும். அப்போது ஆரோனின் குமாரர்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை பலிபீடத்தைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். சமாதான பலி கர்த்தருக்காக செய்யப்படும் தகனபலியாகும். பிறகு ஆசாரியன் மிருகத்தின் உள்பாகங்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும் காணிக்கையாக அளிக்கவேண்டும். அந்த மனிதன் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் சிறு குடல்களிலுள்ள கொழுப்பையும் முதுகின் கீழ் தசையின் மேலுள்ள கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள கொழுப்பையும் செலுத்த வேண்டும். அவற்றை சிறுநீரகங்களோடு நீக்க வேண்டும். பிறகு அதனை ஆரோனின் குமாரர்கள் பலிபீடத்தில் வைத்து எரிக்கும்படி நெருப்பின் நடுவில் இருக்கும் தகனபலியின் கட்டைகளின் மேல் இதை வைப்பார்கள். இது ஒருவகை தகன காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாகும்.
லேவியராகமம் 3:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு சமாதான பலியிலே குடல்களைமூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.