லேவியராகமம் 27:1-15

லேவியராகமம் 27:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள். இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக. ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும், ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும், அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய். உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைபண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன். ஒருவன் பொருத்தனைபண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக. அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக. அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன். ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது. அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன். ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும்தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது. தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

லேவியராகமம் 27:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மீண்டும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஒருவன் ஆட்களுக்குரிய சரியான மதிப்பைச் செலுத்துவதின்மூலம், அவர்களை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதற்காக, ஒரு விசேஷ நேர்த்திக்கடனை செய்தால், கொடுக்கவேண்டிய மதிப்பாவது: இருபது வயதிற்கும் அறுபது வயதிற்கும் இடைப்பட்ட, ஆணுக்குரிய மதிப்பு பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும். அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும். ஐந்து வயதிற்கும் இருபது வயதிற்கும் இடைப்பட்ட ஒரு நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு இருபது சேக்கலும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கலும் ஆகும். ஒரு மாதத்திற்கும், ஐந்து வருடத்திற்கும் இடைப்பட்ட ஆண் பிள்ளைக்குரிய மதிப்பு ஐந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண் பிள்ளைக்குரிய மதிப்பு மூன்று சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும். அறுபது வயதிற்கும் அதற்கும் மேற்பட்ட நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு பதினைந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும். நேர்த்திக்கடனை செய்கிறவன் குறிப்பிடப்பட்ட தொகையைச் செலுத்தமுடியாத அளவு ஏழையாயிருந்தால், அவன் அந்த நபரை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். நேர்த்திக்கடனைச் செய்கிற மனிதனின் தகுதிக்கேற்ப அவனுடைய மதிப்பை ஆசாரியன் நிர்ணயிப்பான். “ ‘ஒருவன் நேர்த்திக்கடன் செய்தது யெகோவாவுக்குக் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மிருகமானால், யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மிருகம் பரிசுத்தமாயிருக்கிறது. அவன் அதை மாற்றி எடுக்கக்கூடாது. கெட்டவைக்காக நல்லதையோ, நல்லவைக்காக கெட்டதையோ பதிலீடு செய்யக்கூடாது. ஒரு மிருகத்திற்காக வேறொரு மிருகத்தை பதிலீடு செய்தால், அதுவும் பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமாகின்றன. ஆனாலும், யெகோவாவுக்குக் காணிக்கையாக நேர்த்திக்கடன் செய்யப்பட்ட மிருகம் ஏற்றுக்கொள்ளத் தகாததானால், சம்பிரதாயப்படி அசுத்தமான அது, அவனால் ஆசாரியன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படவேண்டும். ஆசாரியன் அது நல்லதோ, கெட்டதோ என்று அதன் தன்மையை மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும். அதன் உரிமையாளன் அந்த மிருகத்தை மீட்டுக்கொள்ள விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். “ ‘ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணித்தால், அது நல்லதோ, கெட்டதோ என அதன் தரத்தை ஆசாரியன் மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும். தன் வீட்டை அர்ப்பணிக்கிற மனிதன் அதை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வீடு திரும்பவும் அவனுக்குரியதாகும்.

லேவியராகமம் 27:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை செய்திருந்தால், பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி யெகோவாவுக்கு உரியவர்கள். இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும், பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக. ஐந்து வயதுமுதல் இருபது வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும், ஒரு மாதம்முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும், அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்களைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய். உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன். “ஒருவன் பொருத்தனைசெய்தது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் யெகோவாவுக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக. அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக. அது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன். ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருப்பதாக. அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன். “ஒருவன் தன் வீட்டைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்திற்கும், நிலைமைக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருப்பதாக. தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

லேவியராகமம் 27:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த நபர் கர்த்தருக்குச் சிறப்பான ஊழியம் செய்வான். ஆசாரியன் அவனுக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நபரைத் திரும்பப் பெற வேண்டுமானால் அவனுக்குரிய மீட்பின் தொகையைக் கொடுக்க வேண்டும். இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு ஆணின் விலை ஐம்பது வெள்ளிச் சேக்கலாகும். (நீங்கள் இதற்கு அதிகாரப்பூர்வமான பரிசுத்த இடத்தின் சேக்கலின் அளவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.) இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும். ஐந்து வயது முதல் இருபது வயதுவரை உடைய ஒரு ஆண்மகனின் விலை இருபது வெள்ளிச் சேக்கலாகும். ஐந்து முதல் வயது இருபது வயதுவரை உடைய ஒரு பெண்ணின் விலை பத்து வெள்ளிச் சேக்கலாகும். ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள ஆண் குழந்தையின் விலை ஐந்து சேக்கலாகும். ஒரு பெண் குழந்தையின் விலை மூன்று சேக்கலாகும். அறுபதும் அதற்கும் மேலும் ஆன ஒரு முதியவனின் விலை பதினைந்து சேக்கலாகும். இது போன்ற முதிய பெண்ணின் விலை பத்து சேக்கலாகும். “ஒருவேளை அவன் அப்பணத்தைச் செலுத்த முடியாத அளவிற்கு ஏழையாக இருந்தால் அவனை ஆசாரியனிடம் அழைத்துவர வேண்டும். அவன் செலுத்த வேண்டிய தொகையைப்பற்றி ஆசாரியனே முடிவு செய்வான். “கர்த்தருக்கான பலிகளாக சில மிருகங்களைப் பயன்படுத்தலாம். ஒருவன் இத்தகைய மிருகங்களைக் கொண்டுவந்தால் அவை பரிசுத்தமடைந்துவிடும். அவன் அந்த மிருகத்தை கர்த்தருக்கு தருவதாக வாக்களித்திருக்கலாம். எனவே அவன் அதற்குப் பதிலாக வேறு மிருகத்தைக் கொண்டுவர முயலக்கூடாது. மோசமான மிருகத்துக்குப் பதிலாக நல்ல மிருகத்தையோ, நல்ல மிருகத்துக்குப் பதில் மோசமான மிருகத்தையோ, கொண்டுவர முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு ஒருவன் செய்தால் அந்த இரண்டு மிருகங்களுமே பரிசுத்தமாகி விடுவதால், இரண்டுமே கர்த்தருக்குரியதாகிவிடும். “சில மிருகங்களை கர்த்தருக்கு பலியாகத் தர இயலாது. இத்தகைய தீட்டுள்ள மிருகத்தை ஒருவன் கர்த்தருக்குக் கொண்டு வந்தால், அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். அம்மிருகம் நல்லதா, கெட்டதா என்பதைப்பற்றி வேறுபாடு எதுவும் இல்லை. எனவே ஆசாரியன் முடிவு செய்வதே அம்மிருகத்தின் விலையாகும். ஒருவேளை அவன் அந்த மிருகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விலையோடு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும். “ஒருவன் தனது வீட்டை கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அர்ப்பணித்தால், அதன் விலையை ஆசாரியன் முடிவு செய்ய வேண்டும். அவ்வீடு நல்லது, கெட்டது என்பது பற்றி வேறுபாடு இல்லை. ஆசாரியன் தீர்மானிப்பதே அவ்வீட்டின் விலையாகும். ஆனால் வீட்டுக்காரன் அவ்வீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் வீட்டின் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு வீடு அவனுக்குரியதாகும்.