லேவியராகமம் 26:1-13

லேவியராகமம் 26:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘நீங்கள் விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். உருவச்சிலையையோ, உங்களுக்காக புனிதக் கல்லையோ அமைக்கவேண்டாம். உங்கள் நாட்டில் தலைகுனிந்து வணங்குவதற்காக ஒரு செதுக்கப்பட்ட கல்லை வைக்கக்கூடாது. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா. “ ‘நீங்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றி, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருந்தால், மழையை அதன் பருவகாலத்தில் அனுப்புவேன். பூமி தனது விளைச்சலையும், வயல்களின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும். உங்கள் சூடுமிதிக்கும் காலம், திராட்சைப்பழம் பறிக்குங்காலம்வரை நீடிக்கும். திராட்சைப்பழம் பறிக்குங்காலம், நடுகைக்காலம்வரை நீடிக்கும். ஆகையால் நீங்கள் விரும்பிய எல்லா உணவையும் சாப்பிட்டு உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள். “ ‘நாட்டில் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் பயமில்லாமல் படுத்திருப்பீர்கள். உங்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். நாட்டிலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்திவிடுவேன். உங்கள் நாட்டை வாள் கடந்துவராது. நீங்கள் உங்கள் பகைவர்களைப் பின்தொடர்ந்து துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன்பாக வாளால் வெட்டுண்டு விழுவார்கள். உங்களில் ஐந்துபேர், நூறுபேரைத் துரத்துவீர்கள். நூறுபேர், பத்தாயிரம்பேரைத் துரத்துவீர்கள். இவ்விதம் உங்கள் பகைவர்கள் வாளினால் உங்கள்முன் விழுவார்கள். “ ‘நான் உங்களைத் தயவுடன் பார்த்து, உங்களை வளம்பெறச்செய்து பலுகிப் பெருகப்பண்ணுவேன். நான் உங்களோடு பண்ணின உடன்படிக்கையைக் காத்துக்கொள்வேன். நீங்கள் இன்னும் கடந்த வருட விளைச்சலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே புதிய விளைச்சலுக்கு இடம் ஒதுக்கும்படியாக பழையதை அகற்றவேண்டியதாயிருக்கும். நான் என் வசிப்பிடத்தை உங்கள் மத்தியில் வைப்பேன். உங்களைப் புறக்கணிக்கமாட்டேன். நான் உங்கள் மத்தியில் நடந்து, உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்களும் என் மக்களாயிருப்பீர்கள். இனிமேலும் நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. உங்கள் நுகத்தின் தடிகளை முறித்து உங்களைத் தலைநிமிர்ந்து நடக்கும்படிச் செய்தேன்.

லேவியராகமம் 26:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நீங்கள் உங்களுக்கு சிலைகளையும் உருவங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம்வடித்த கல்லை வணங்குவதற்காக உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா. “நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும். திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள். தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன்; தத்தளிக்கச் செய்பவர்கள் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாமல் ஒழியச்செய்வேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை. உங்கள் எதிரிகளைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக, பழையதை அகற்றுவீர்கள். உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை நிறுவுவேன்; என் ஆத்துமா உங்களை வெறுப்பதில்லை. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாக இருப்பேன், நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள். நீங்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக இல்லாமல், நான் அவர்களுடைய தேசத்திலிருந்து உங்களைப் புறப்படச்செய்து, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 26:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

“உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! “எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்! “எனது சட்டங்களையும் கட்டளைகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள்! நீங்கள் இவற்றைச் செய்தால் நான் உரிய பருவத்தில் மழையைத் தருவேன். நிலம் நன்றாக விளையும். மரங்கள் நல்ல பழங்களைத் தரும். திராட்சைப் பழம் பறிக்கும் காலம்வரை உங்கள் போரடிப்புக் காலம் இருக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு உங்கள் நாட்டில் சுகமாய் குடியிருப்பீர்கள். உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது. “நீங்கள் உங்களது பகைவர்களைத் துரத்தி சென்று தோற்கடிப்பீர்கள். உங்கள் வாளால் அவர்களைக் கொல்வீர்கள். ஐந்து பேரான நீங்கள் நூறு பேரை விரட்டிச் செல்வீர்கள், நூறு பேராக இருந்தாலும் நீங்கள் பத்தாயிரம் பேரை விரட்டிச்சென்று அவர்களை வாளால் வெட்டிக் கொல்லுவீர்கள். “நான் உங்கள்மேல் கவனமாயிருந்து நிறைய குழந்தைகளை நீங்கள் பெறும்படி செய்வேன். நான் எனது உடன்படிக்கையை பாதுகாப்பேன். நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள். உங்கள் நடுவே எனது ஆராதனைக் கூடாரத்தை அமைப்பேன். நான் உங்களிடமிருந்து விலகிச் செல்லமாட்டேன். நான் உங்களோடு நடந்து உங்கள் தேவனாக இருப்பேன். நீங்களே எனது ஜனங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்!

லேவியராகமம் 26:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர். நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். திராட்சப்பழம் பறிக்குங் காலம் வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை. உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன். போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள். உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.