லேவியராகமம் 25:8-55

லேவியராகமம் 25:8-55 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள். ஏழுமுறை ஏழு வருடங்களாக நாற்பத்தொன்பது வருடங்கள் வரும்வரை ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள். பின்பு ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, நாடெங்கிலும் எக்காளம் ஊதுங்கள். பாவநிவிர்த்தி நாளிலே, எக்காளத்தை நாடெங்கும் ஊதுங்கள். ஐம்பதாம் வருடத்தை அர்ப்பணம் செய்து, நாட்டு மக்கள் அனைவருக்கும், விடுதலையைப் பிரசித்தப்படுத்துங்கள். அது உங்களுக்கான யூபிலி வருடமாயிருக்கும். உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் குடும்பச் சொத்து உரிமைக்கும், தன்தன் கோத்திரத்திற்கும் திரும்பிச் செல்லவேண்டும். ஐம்பதாம் வருடம் உங்களுக்கு ஒரு யூபிலி வருடம். நீங்கள் விதைக்கவோ, தானாய் விளைந்த தானியத்தையாகிலும் திராட்சைப் பழங்களையாகிலும் அறுவடை செய்யவோ வேண்டாம். ஏனெனில் அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அந்த வருடம் வயல்களில் தானாய் விளைந்தவற்றை மட்டுமே சாப்பிடுங்கள். “ ‘இந்த யூபிலி வருடத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முற்பிதாக்களின் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவேண்டும். “ ‘நீங்கள் உங்கள் நாட்டவனுக்கு ஒரு நிலத்தை விற்றாலோ அல்லது அவனிடமிருந்து வாங்கினாலோ ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. நீங்கள் உங்கள் நாட்டினரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, சென்ற யூபிலி வருடத்திலிருந்து கழிந்த வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாங்கவேண்டும். அவன் உங்களுக்கு விற்கும்போது விளைச்சலை அறுவடை செய்யவேண்டிய வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதை விற்கவேண்டும். அறுவடை வருடங்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் விலையையும் அதிகரிக்கவேண்டும். வருடங்கள் குறைவாக இருந்தால் விலையையும் குறைக்கவேண்டும். ஏனெனில், அவன் உங்களுக்கு உண்மையாக விற்பது அறுவடையின் எண்ணிக்கையின் மதிப்பையே. ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘நீங்கள் என்னுடைய விதிமுறைகளைப் பின்பற்றி, என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள். அப்பொழுது நாடு தன் பலனைக் கொடுக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் பாதுகாப்புடன் வாழ்வீர்கள். நீங்கள் ஏழாம் வருடத்தில் விதையாமலும், அறுவடை செய்யாமலும் இருந்து, எதைச் சாப்பிடுவோம் என்று கேட்பீர்களானால், ஆறாம் வருடத்தில் நான் உங்களுக்கு அதிக விளைச்சலுள்ள ஆசீர்வாதத்தை அனுப்புவேன். அவ்வருடத்தில் மூன்று வருடங்களுக்கு போதுமான பலனை அந்நிலம் தரும். நீங்கள் எட்டாம் வருடத்தில் விதைக்கும் காலத்தில் பழைய விளைச்சலிலிருந்து சாப்பிடுவீர்கள். ஒன்பதாம் வருடத்தில் அறுவடை செய்யும்வரை நீங்கள் அதில் தொடர்ந்து சாப்பிடுவீர்கள். “ ‘நிலம் நிரந்தரமாய் விற்கப்படக்கூடாது. நிலம் என்னுடையது. நீங்களோ, பிறநாட்டினரும் குத்தகைக்காரருமாக இருக்கிறீர்கள். நீங்கள் சொத்துரிமையாகக் கொண்டிருக்கும் நாடெங்கும் அந்த நிலங்களை மீட்டுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும். “ ‘உன் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி தன் சொத்து நிலத்தில் கொஞ்சத்தை விற்றால், அவனுடைய நெருங்கிய உறவினன் முன்வந்து, தன் நாட்டினன் விற்றுப்போட்டதை மீட்டுக்கொள்ள வேண்டும். ஆனாலும், ஒருவனுக்கு அவ்வாறு மீட்கக்கூடிய நெருங்கிய உறவினன் இல்லாமல் இருந்து, அவன் தானே செல்வந்தனாகி, அதை மீட்கத்தக்க வசதியைப் பெற்றிருந்தால், அவன் விற்றதிலிருந்து கழிந்த வருடங்களுக்கான மதிப்பை நிர்ணயித்து, தான் ஏற்கெனவே விற்ற விலையிலிருந்து அதைக் கழித்து, மிகுதியை தன்னிடம் வாங்கியவனிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் சொத்து நிலத்திற்குத் திரும்பிப்போகலாம். ஆனால் தான் விற்றதைத் திருப்பிவாங்க வசதி இல்லாதுபோனால், யூபிலி வருடம் மட்டும் அது வாங்கியவனுக்கு உரிமையாயிருக்கும். ஆனால், யூபிலி வருடத்தில் அது விற்றவனுக்குத் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். “ ‘ஒருவன் மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள ஒரு வீட்டை விற்றால், அதை விற்றபின் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் அதை மீட்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தக் காலத்திற்குள் அவன் அதை மீட்கலாம். ஒரு வருடம் நிறைவடையுமுன் அவன் அதைத் திருப்பி மீட்காவிட்டால், மதில் சூழ்ந்த பட்டணத்தில் இருக்கும் அவ்வீடு வாங்கியவனுக்கும், அவன் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர உரிமையாகும். அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் மதில் சூழப்படாத கிராமப் பகுதிகளிலுள்ள வீடுகள், நாட்டின் நிலங்களைப்போல் கருதப்படும். அவை மீட்கப்படலாம். யூபிலி வருடத்தில் அவை திருப்பி கொடுக்கப்படவேண்டும். “ ‘ஆனால் லேவியர்களோ, லேவியருடைய நகரங்களிலிருக்கிற தங்களுடைய வீடுகளை மீட்க எப்பொழுதும் உரிமையுடையவர்களாய் இருக்கிறார்கள். அவை அவர்களுடைய உரிமைச்சொத்துக்கள். எனவே லேவியருடைய சொத்து மீட்கக்கூடியது. அதாவது அவர்களுக்குரிய எந்தப் பட்டணத்திலாவது ஒரு வீடு விற்கப்பட்டால், அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இஸ்ரயேலர் மத்தியில் லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் மட்டுமே அவர்களுடைய சொத்தாகும். ஆனால் அவர்களுடைய பட்டணங்களுக்குரிய மேய்ச்சல் நிலமோ, விற்கப்படக்கூடாது. ஏனெனில், அவை அவர்களின் நிரந்தர சொத்துரிமை. “ ‘உங்கள் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி, தன்னைத்தானே பராமரிக்க இயலாத வேளையில், ஒரு பிறநாட்டினனுக்கோ, தற்காலிக குடியிருப்பாளனுக்கோ உதவுவதுபோல் நீங்கள் அவனுக்கு உதவிசெய்யுங்கள். அவ்வாறு உங்கள் மத்தியில் அவன் தொடர்ந்து வாழலாம். அவனிடம் எவ்வித வட்டியையும் வாங்கவேண்டாம். ஆனால் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். இப்படியாக உங்கள் நாட்டினன் உங்கள் மத்தியில் தொடர்ந்து வாழலாம். நீங்கள் அவனுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கக்கூடாது. இலாபத்திற்கு அவனுக்கு உணவும் விற்கக்கூடாது. உங்களுக்குக் கானான் நாட்டைக் கொடுக்கவும், உங்கள் இறைவனாயிருக்கவும் உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. “ ‘உங்கள் நாட்டவரில் ஒருவன் உங்களுக்குள் ஏழையாகி தன்னை விற்றால், அவனை அடிமையாக வேலைசெய்ய வைக்கவேண்டாம். அவன் ஒரு கூலிக்காரனைப் போலவும், உங்களிடம் வந்த தற்காலிக குடியிருப்பாளனைப் போலவும் நடத்தப்படவேண்டும். யூபிலி வருடம்வரை அவன் உங்களுக்குப் பணிசெய்ய வேண்டும். அதன்பின் அவனும் அவன் பிள்ளைகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவன் தன் சொந்தக் கோத்திரத்திற்கும் முற்பிதாக்களின் சொத்து நிலத்திற்கும் திரும்பிப் போகவேண்டும். எகிப்து நாட்டிலிருந்து நான் வெளியே கொண்டுவந்த இஸ்ரயேலர் என் பணியாட்களாய் இருப்பதால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது. அவர்களை நீங்கள் கொடூரமாய் ஆளுகை செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். “ ‘உங்களைச் சுற்றியிருக்கிற நாடுகளிடமிருந்தே உங்களுக்கு ஆண் அடிமைகளும், பெண் அடிமைகளும் வரவேண்டும். அவர்களிடமிருந்தே நீங்கள் அடிமைகளை வாங்கலாம். உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களில் சிலரை அடிமைகளாக வாங்கலாம். உங்கள் நாட்டில் பிறந்த அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களையும் வாங்கலாம். அவர்கள் உங்கள் சொத்துக்களாவார்கள். நீங்கள் அவர்களை உங்கள் பிள்ளைகளுக்கு உரிமைச்சொத்தாக எழுதிக்கொடுத்து, அவர்களை ஆயுட்கால அடிமைகளாக்கலாம். ஆனால் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேலரைக் கொடூரமாய் ஆளுகை செய்யக்கூடாது. “ ‘உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ அல்லது தற்காலிக குடியிருப்பாளனோ செல்வந்தனாயிருக்கையில் உங்கள் நாட்டவரில் ஒருவன் ஏழையாகி, அந்த பிறநாட்டினனுக்கோ அல்லது பிற நாட்டு வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினருக்கோ தன்னை விற்றால், தன்னை விற்றுவிட்ட பின்பும் தன்னை மீட்டுக்கொள்ளும் உரிமையுடையவனாய் இருக்கிறான். அவனுடைய உறவினருக்குள் ஒருவன் அவனை மீட்கலாம்: அவனுடைய சிறிய தகப்பனோ அல்லது சிறிய தகப்பனுடைய மகனோ அல்லது அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த இரத்த உறவினனோ அவனை மீட்டுக்கொள்ளலாம். அல்லது அவன் செழிப்படையும்போது தன்னைத்தானே மீட்டுக்கொள்ளவும் முடியும். அவனும், அவனை வாங்கியவனும் அவன் தன்னை விற்ற வருடத்திலிருந்து யூபிலி வருடம் வரையுள்ள காலத்தைக் கணக்கிடவேண்டும். ஒரு கூலியாளுக்குச் செலுத்தப்படுகின்ற கூலி அளவை அடிப்படையாகக்கொண்டு அவனுக்குரிய விடுதலைக்கான விலை அமையவேண்டும். இன்னும் அநேக வருடங்கள் இருக்குமானால், தனக்காகச் செலுத்தப்பட்ட விலைமதிப்பின் ஒரு பெரிய பங்கை அவன் தன்னுடைய மீட்புக்காகச் செலுத்தவேண்டும். யூபிலி வருடத்திற்கு இன்னும் சில வருடங்கள் மட்டுமே இருக்குமானால், அவன் அதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப தன் மீட்புக்கான பணத்தைக் கொடுக்கலாம். அவன் வருடத்திற்கு வருடம் கூலிக்கு அமர்த்தப்பட்டவன்போல் நடத்தப்படவேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாய் நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். “ ‘இவ்விதமாக, எந்த வழிகளிலாவது அவன் மீட்கப்படாவிட்டாலும், அவனும் அவனுடைய பிள்ளைகளும், யூபிலி வருடத்தில் விடுதலையாக்கப்பட வேண்டும். ஏனெனில், இஸ்ரயேலர் என் பணியாட்களாக எனக்கு சொந்தமாயிருக்கிறார்கள். அவர்கள் நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த பணியாட்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.

லேவியராகமம் 25:8-55 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு ஏழு வருடங்களைக் கணக்கிடுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது வருடங்களாகும். அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கச்செய்யவேண்டும். “50 வது வருடத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன். அந்த ஐம்பதாம் வருடம் உங்களுக்கு யூபிலி வருடமாக இருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல் விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்; அந்த வருடத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் சாப்பிடவேண்டும். “அந்த யூபிலி வருடத்தில் உங்களில் அவனவன் தன்தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போகக்கடவன். ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது விலைகொடுத்து வாங்கினாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. யூபிலி வருடத்திற்குப் பின்வரும் வருடங்களின் எண்ணிக்கைக்கேற்ப பிறனிடத்தில் வாங்குவாயாக; பலனுள்ள வருடங்களின் தொகைக்கேற்ப அவன் உனக்கு விற்பானாக. பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால், வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால் விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை குறைந்தால், விலை குறையவும் வேண்டும். உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள். பூமி தன் பலனைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக் குடியிருப்பீர்கள். ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்; அது உங்களுக்கு மூன்று வருடங்களின் பலனைத் தரும். நீங்கள் எட்டாம் வருடத்திலே விதைத்து, ஒன்பதாம் வருடம்வரை பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரை பழைய பலனைச் சாப்பிடுவீர்கள். “தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள். உங்கள் சொந்தமான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். “உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன். அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான். “ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். ஒரு வருடத்திற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருடத்திலும் அது விடுதலையாகாது. மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும். லேவியர்களின் சொந்த இடமாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர்கள் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம். இஸ்ரவேல் மக்களுக்குள்ளே லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய சொந்தமாக இருப்பதால், லேவியர்களிடத்தில் அவனுடைய சொந்தமான பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு, யூபிலி வருடத்தில் விடுதலையாகும். அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படக்கூடாது; அது அவர்களுக்கு நிரந்தர சொந்தமாக இருக்கும். “உன் சகோதரன் ஏழ்மையடைந்து, வசதியில்லாமல் போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் அவன் உன்னோடே பிழைப்பானாக. நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தை லாபத்திற்கும் கொடுக்காதே. உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாக இருப்பதற்கு, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே. “உன் சகோதரன் ஏழ்மையடைந்து, உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல வேலைசெய்ய நெருக்கவேண்டாம். அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன் இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும். பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னைவிட்டு விலகி, தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும் திரும்பிப்போகக்கடவன். அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என்னுடைய வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது. நீ அவனைக் கடினமாக நடத்தாமல், உன் தேவனுக்குப் பயந்திரு. உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற அந்நியமக்களாக இருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம். உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம். அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சொந்தமாக்கும்படி நீங்கள் அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்கலாம்; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களோ ஒருவரையொருவர் கடினமாக நடத்தக்கூடாது. “உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வந்தனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விற்கப்பட்டுப்போனால், அவன் விற்கப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவனுடைய சகோதரர்களில் ஒருவன் அவனை மீட்கலாம். அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம். அவன் தான் விற்கப்பட்ட வருடம் துவங்கி, யூபிலி வருடம்வரைக்கும் உள்ள காலத்தைத் தன்னை விலைக்கு வாங்கியவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருடத்தொகைக்கு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன். யூபிலி வருடம்வரை மீதியாக இருக்கிற வருடங்கள் கொஞ்சமாக இருந்தால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருடங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும். இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது. இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள். இஸ்ரவேல் மக்கள் என் ஊழியக்காரர்கள்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என் ஊழியக்காரர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

லேவியராகமம் 25:8-55 பரிசுத்த பைபிள் (TAERV)

“மேலும் நீங்கள் ஏழு ஓய்வு ஆண்டுகள் கொண்ட ஏழு ஓய்வு ஆண்டுகளை எண்ணுங்கள். அது மொத்தம் 49 ஆண்டுகளாகும். அந்த 49 வருடங்களில் மொத்தத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பூமிக்கு ஓய்வு கிடைக்கும். பாவப்பரிகார நாளில் செம்மறியாட்டுக் கடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளத்தை ஊதவேண்டும். அது ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளாக இருக்கும். நாடு முழுவதும் எக்காளம் ஊதிக் கொண்டாட வேண்டும். நீங்கள் ஐம்பதாவது ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் விடுதலை என்று அறிவிக்க வேண்டும். இந்த விழாவை ‘யூபிலி’ என்று அழைப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த சொத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும் திரும்புவீர்கள். உங்களுக்கு ஐம்பதாவது ஆண்டு விழா மிகச் சிறப்பான யூபிலி விழாவாகும். அவ்வருடத்தில் விதைகளை விதைக்காதீர்கள். தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை செய்யாதீர்கள். கிளை கழிக்காத செடிகளில் உள்ள திராட்சைகளைப் பறிக்காதீர்கள். அது யூபிலி ஆண்டு, அது உங்களுக்குப் பரிசுத்தமான வருடமாகும். உங்கள் வயலில் விளைந்தவற்றை உண்ணுங்கள். யூபிலி ஆண்டில் ஒவ்வொருவனும் தன் சொந்த பூமிக்குச் செல்லவேண்டும். “உனது அயலானிடம் நிலம் விற்கும்போது ஏமாற்றாதே. அதுபோல் நீ நிலம் வாங்கும்போது அவன் உன்னை ஏமாற்றும்படி விடாதே. நீ அயலானின் நிலத்தை வாங்கும்போது அந்த நிலத்தின் யூபிலியைக் கணக்கிட்டு அதற்கேற்ற விலையை நிர்ணயித்துக்கொள். நிலத்தை விற்கும்போதும் அதனுடைய அறுவடைகளைக் கணக்கிட்டு அதன் மூலம் சரியான விலையை நிர்ணயித்துக்கொள். ஏனென்றால் அடுத்த யூபிலிவரை அறுவடை செய்யும் உரிமையை மட்டுமே விற்கிறான். யூபிலிக்கு முன் அதிகமான ஆண்டுகள் விளைந்த நிலம் அதிக விலையை உடையது. குறைந்த ஆண்டுகள் விளைந்த நிலத்தின் விலை குறையும். ஏனென்றால் உனது அயலான் உன்னிடம் அறுவடைகளின் எண்ணிக்கைகளையே விற்பனை செய்கிறான். அடுத்த யூபிலியில் அந்த நிலம் மீண்டும் அவனுக்கு உரியதாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது. உங்கள் தேவனை நீங்கள் பெருமைபடுத்த வேண்டும். நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர்! “எனது சட்டங்களையும், விதிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள், அப்போது உங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்போடு வாழலாம். நிலம் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். நீங்கள் அதிக விளைபொருட்களைப் பெற்று நாட்டில் வசதியோடு வாழலாம். “ஆனால் நீங்கள் ‘நான் விளைய வைத்துப் பொருட்களைச் சேர்த்து வைக்காவிட்டால் ஏழாவது ஆண்டில் வசதியாக உண்ண முடியாது’ என்று சொல்லலாம். கவலைப்படாதிருங்கள்! ஆறாவது ஆண்டில் என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி கட்டளையிடுவேன். தொடர்ந்து நிலம் மூன்று ஆண்டுகளுக்கு நன்கு விளையும். நீ எட்டாவது ஆண்டில் பயிர் செய்யும்போதும் பழைய விளைச்சலையே உண்டுகொண்டிருப்பாய். ஒன்பதாவது ஆண்டில் புதிய விளைச்சல் கிடைக்கும்வரை இவ்வாறு செய்வாய். “இந்த நிலம் உண்மையில் எனக்குரியது. எனவே இதனை நீங்கள் நிரந்தரமாக விற்கமுடியாது. அந்நியர்களாகவும் பயணிகளாகவுமே என் நிலத்தில் நீங்கள் அனைவரும் என்னோடு வாழ்கிறீர்கள். ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்றுவிடலாம். எனினும் அது அவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் வந்து சேரும். உங்களில் ஒருவன் மிகவும் வறியவனாகவோ, தன் சொத்துக்களை விற்கும் அளவுக்கு ஏழையாகவோ மாறலாம். அப்போது அவனுக்கு நெருக்கமான உறவினரில் எவராவது வந்து அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். அவனிடமிருந்து நிலத்தை திரும்ப வாங்குகிற அளவுக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லாமற் போகும்போது, அந்த நிலத்தைத்தானே திரும்ப வாங்குகிற அளவிற்கு அவன் பணத்தை சேகரித்திருக்கலாம். பிறகு அவன் நிலத்தை விற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கை மூலம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனைத் திரும்ப விலைக்கு வாங்கலாம். அதனால் அச்சொத்து அவனுக்கு மீண்டும் உரியதாகும். ஆனால் ஒருவேளை அவனுக்குத் தன் நிலத்தை திரும்ப வாங்குகிற அளவிற்குப் பணம் சேர்க்கமுடியாமல் போனால் அப்போது அந்த நிலம் யூபிலி ஆண்டுவரை வாங்கியவனிடமே இருக்கும். பிறகு சிறப்பான யூபிலி விழா நடக்கும்போது அந்நிலம் முதல் உரிமையாளனுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். எனவே, சரியான குடும்பத்துக்கு அந்த சொத்தானது மீண்டும் சொந்தமாகும். “ஒருவன், மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வீட்டை விற்றால் ஒரு ஆண்டு வரை மட்டுமே அவனுக்குத் திரும்ப வாங்கிக்கொள்கிற உரிமை உண்டு. ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரன் அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாவிட்டால் அது வாங்கியவனுக்கும் அவனது சந்ததிகளுக்கும் உரிமையாகிவிடும். வீடு யூபிலி ஆண்டில் நிலத்தைப் போன்று அதன் சொந்தக்காரனுக்குப் போய்ச் சேர்வதில்லை. மதில் இல்லாத பட்டணங்களாக இருந்தால் அது வயல் வெளியாக எண்ணப்படும். அதில் உள்ள வீடுகள் மட்டுமே யூபிலி ஆண்டின்போது உண்மையான சொந்தக்காரனுக்கு சேரும். “ஆனால் லேவியரின் நகரம்பற்றி வேறு விதிகள் உள்ளன. லேவியர்கள் நகரங்களில் தங்கள் வீடுகளை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வாங்கிக்கொள்ளலாம். லேவியர்களிடமிருந்து யாரவது ஒரு வீடு வாங்கினால் லேவியரின் நகரங்களிலுள்ள வீடுகளெல்லாம் யூபிலி ஆண்டில் மீண்டும் அவர்களுக்கே உரியதாகிவிடும். ஏனென்றால் லேவியரின் நகரங்கள் எல்லாம் லேவியின் கோத்திரங்களுக்கு சொந்தம். இஸ்ரவேல் ஜனங்கள் இதனை லேவியர்களுக்குக் கொடுத்துவிட்டனர். அதோடு லேவியரின் நகரங்களைச் சுற்றியிருக்கிற வெளி நிலங்களை விற்கமுடியாது. அது எப்போதும் லேவியர்களுக்கே உரியதாகும். “உன் சகோதரரில் ஒருவன் மிகவும் வறுமையனாகிவிட்டால் அவன் அயல் நாட்டுக்காரனைப் போன்று உன்னோடு பிழைக்கும்படி அனுமதிக்க வேண்டும். நீ அவனுக்குக் கடன் கொடுத்து அவனிடம் வட்டி வாங்காமல் இருப்பாயாக. தேவனுக்குரிய மதிப்பைக் கொடுத்து, உன் சகோதரனை வாழவிடுவாயாக. அவனிடம் நீ கொடுத்த கடனுக்காக வட்டி வாங்காதே. நீ விற்கிற உணவிற்கு மிகுதியாக லாபம் வரும்படி செய்யாதே. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். உன்னை எகிப்தில் இருந்து அழைத்து வந்து கானான் நாட்டைக் கொடுத்து, உனது தேவனாக ஆனேன். “உனது சகோதரன் ஒருவன் ஏழ்மை காரணமாக உன்னிடம் அடிமையாக இருக்கலாம். நீ அடிமைபோன்று அவனை வேலை வாங்கக்கூடாது. யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான். பிறகு அவன் உன்னைவிட்டுச் செல்லலாம். அவன் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன் குடும்பத்துக்குத் திரும்பமுடியும். அவன் தனது முற்பிதாக்களின் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வான். ஏனென்றால் அவர்கள் எனது ஊழியர்கள். அவர்களை நான் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் மீண்டும் அடிமையாகக் கூடாது. இவர்களுக்குக் கொடூரமான எஜமானனாக நீங்கள் இருக்கக் கூடாது. நீங்கள் தேவனுக்கு பயப்பட வேண்டும். “உங்கள் ஆணும் பெண்ணுமான அடிமைகளைப்பற்றிய காரியங்களாவன: உங்களைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து அடிமைகளை அழைத்து வரலாம். உங்கள் தேசத்தில் வசிக்கும் அயல் நாட்டவர்கள் குடும்பங்களில் இருந்து நீங்கள் அடிமைகளாக சிறுவர்களையும் அழைத்து வந்திருக்கலாம். அந்த அடிமைச் சிறுவர்கள் உனக்கு உரியவர்கள். உங்கள் இறப்பிற்குப் பின் உங்களது பிள்ளைகளின் வசத்தில் அவர்கள் இருப்பார்கள். என்றென்றும் அவர்கள் உங்களது அடிமைகளாக இருக்கலாம். இந்த அயல் நாட்டுக்காரர்களை உங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சொந்தச் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடுமையான எஜமானனாக நீ இருக்கக்கூடாது. “அயல் நாட்டுக்காரரோ பயணிகளோ செல்வந்தர் ஆகலாம். உன் சொந்த நாட்டுக்காரன் ஏழையாக இருப்பதினால் அவர்கள் அயல் நாட்டுக்காரர் ஒருவருக்கு அடிமையாகலாம். அவன் திரும்பவும் சுதந்திரமானவனாக முடியும். அவனது சகோதரரில் ஒருவன் அவனை விலை கொடுத்து மீட்டுவிடலாம். அவனது சித்தப்பாவோ, பங்காளிகளோ, அவனைத் திரும்ப வாங்கலாம். ஆனால் அவனுக்குப் போதுமான பணம் இருந்தால் தானே அதனைக் கொடுத்துவிட்டு சுதந்திரம் பெற்றுவிடலாம். “அவன் தன்னை விற்றுக்கொண்ட ஆண்டு முதல் அடுத்த யூபிலி வரை எண்ணிக்கொள்ள வேண்டும். ஆண்டுகளின் எண்ணிக்கையை வைத்து விலையை முடிவு செய்யலாம். ஏனென்றால் அவன் சில ஆண்டுகளே தன்னை ‘வாடகையாகத்’ தந்திருக்கிறான். யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும். யூபிலி ஆண்டு வர இன்னும் கொஞ்சம் ஆண்டுகளே இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை குறைவாக இருக்கும். ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும். “அவனை யாரும் திரும்பி வாங்காவிட்டாலும் யூபிலி ஆண்டில் அவனும் அவனது பிள்ளைகளும் விடுதலை பெறுவார்கள். ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் எனது ஊழியர்கள். நான் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!

லேவியராகமம் 25:8-55 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும். அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும். ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன். அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும். அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன்தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்ப அவன் உனக்கு விற்பானாக. பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும் வேண்டும். உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள். பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும். நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள். தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள். உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான். ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது. மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும். லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம். இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும். அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும். உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால் அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக. நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம். அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன். பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன். அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது. நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு. உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம். உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம். அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக் கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது. உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால், அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம். அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம். அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும். இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன். யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும். இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப் போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது. இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள். இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.