லேவியராகமம் 25:23-28

லேவியராகமம் 25:23-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘நிலம் நிரந்தரமாய் விற்கப்படக்கூடாது. நிலம் என்னுடையது. நீங்களோ, பிறநாட்டினரும் குத்தகைக்காரருமாக இருக்கிறீர்கள். நீங்கள் சொத்துரிமையாகக் கொண்டிருக்கும் நாடெங்கும் அந்த நிலங்களை மீட்டுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும். “ ‘உன் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி தன் சொத்து நிலத்தில் கொஞ்சத்தை விற்றால், அவனுடைய நெருங்கிய உறவினன் முன்வந்து, தன் நாட்டினன் விற்றுப்போட்டதை மீட்டுக்கொள்ள வேண்டும். ஆனாலும், ஒருவனுக்கு அவ்வாறு மீட்கக்கூடிய நெருங்கிய உறவினன் இல்லாமல் இருந்து, அவன் தானே செல்வந்தனாகி, அதை மீட்கத்தக்க வசதியைப் பெற்றிருந்தால், அவன் விற்றதிலிருந்து கழிந்த வருடங்களுக்கான மதிப்பை நிர்ணயித்து, தான் ஏற்கெனவே விற்ற விலையிலிருந்து அதைக் கழித்து, மிகுதியை தன்னிடம் வாங்கியவனிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் சொத்து நிலத்திற்குத் திரும்பிப்போகலாம். ஆனால் தான் விற்றதைத் திருப்பிவாங்க வசதி இல்லாதுபோனால், யூபிலி வருடம் மட்டும் அது வாங்கியவனுக்கு உரிமையாயிருக்கும். ஆனால், யூபிலி வருடத்தில் அது விற்றவனுக்குத் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும்.

லேவியராகமம் 25:23-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள். உங்கள் சொந்தமான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். “உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன். அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.

லேவியராகமம் 25:23-28 பரிசுத்த பைபிள் (TAERV)

“இந்த நிலம் உண்மையில் எனக்குரியது. எனவே இதனை நீங்கள் நிரந்தரமாக விற்கமுடியாது. அந்நியர்களாகவும் பயணிகளாகவுமே என் நிலத்தில் நீங்கள் அனைவரும் என்னோடு வாழ்கிறீர்கள். ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்றுவிடலாம். எனினும் அது அவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் வந்து சேரும். உங்களில் ஒருவன் மிகவும் வறியவனாகவோ, தன் சொத்துக்களை விற்கும் அளவுக்கு ஏழையாகவோ மாறலாம். அப்போது அவனுக்கு நெருக்கமான உறவினரில் எவராவது வந்து அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். அவனிடமிருந்து நிலத்தை திரும்ப வாங்குகிற அளவுக்கு நெருக்கமான உறவினர்கள் இல்லாமற் போகும்போது, அந்த நிலத்தைத்தானே திரும்ப வாங்குகிற அளவிற்கு அவன் பணத்தை சேகரித்திருக்கலாம். பிறகு அவன் நிலத்தை விற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கை மூலம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனைத் திரும்ப விலைக்கு வாங்கலாம். அதனால் அச்சொத்து அவனுக்கு மீண்டும் உரியதாகும். ஆனால் ஒருவேளை அவனுக்குத் தன் நிலத்தை திரும்ப வாங்குகிற அளவிற்குப் பணம் சேர்க்கமுடியாமல் போனால் அப்போது அந்த நிலம் யூபிலி ஆண்டுவரை வாங்கியவனிடமே இருக்கும். பிறகு சிறப்பான யூபிலி விழா நடக்கும்போது அந்நிலம் முதல் உரிமையாளனுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். எனவே, சரியான குடும்பத்துக்கு அந்த சொத்தானது மீண்டும் சொந்தமாகும்.

லேவியராகமம் 25:23-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள். உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.