லேவியராகமம் 25:1-7

லேவியராகமம் 25:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சீனாய் மலையில் மோசேயுடன் பேசினார், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அந்த நாடும் யெகோவாவுக்காக ஓய்வை கடைபிடிக்க வேண்டும். ஆறு வருடங்கள் உங்கள் வயல்களை விதைத்து, ஆறு வருடங்கள் திராட்சைத் தோட்டத்தின் கொடிகளின் கிளைகளைத்தரித்து சுத்தம்செய்து, அவற்றின் பலனை அறுவடை செய்யுங்கள். ஆனால் ஏழாம் வருடத்தில், நிலம் ஓய்வு பெறவேண்டும். அது யெகோவாவுக்கான ஓய்வு. அந்த வருடத்தில் நீங்கள் வயலை விதைக்கவும், திராட்சைத்தோட்டத்து கிளைகளைத் தரிக்கவும் வேண்டாம். தானாய் முளைத்து விளையும் பயிரை, அறுவடை செய்யவும் வேண்டாம். பராமரிக்கப்படாத திராட்சைக் கொடியிலிருந்து பழங்களைப் பறிக்கவும் வேண்டாம். நிலத்திற்கு ஓய்வு வருடம் இருக்கவேண்டும். நாட்டின் ஓய்வு வருடத்தில் விளைகிறது உனக்கு உணவாகும். அது உனக்கும், உன் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலியாளுக்கும், உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளனுக்கும் உணவாகும், உன் வீட்டு மிருகங்களுக்கும், வயல்களிலுள்ள மிருகங்களுக்கும் அது உணவாயிருக்கும். நிலத்தின் விளைச்சல் எதையும் சாப்பிடலாம்.

லேவியராகமம் 25:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சீனாய்மலையில் மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, தேசம் யெகோவாவுக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும். ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக. ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும், தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக. தேசத்தின் ஓய்விலே விளைகிறது உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; உன்னுடைய வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும், உன் நாட்டு மிருகத்திற்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்திற்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாக இருப்பதாக.

லேவியராகமம் 25:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம், “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது; நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் சென்ற பின்னர் ஓய்வுக்கென சிறப்பான காலத்தை அந்நாடு கொண்டிருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற ஓய்வுக்காலம் ஆகும். ஆறு ஆண்டுகளுக்கு, உங்கள் வயல்களில் விதைகளை விதையுங்கள், உங்கள் திராட்சைத் தோட்டத்தில் கிளை கழியுங்கள். அதன் பழங்களைக் கொண்டு வாருங்கள். ஆனால் ஏழாவது ஆண்டில் அந்நிலத்துக்கு ஓய்வு அளியுங்கள். இது கர்த்தரைப் பெருமைப்படுத்துகிற சிறப்பான ஓய்வுக் காலமாகும். அப்போது வயலில் விதை விதைக்காமலும், திராட்சை தோட்டத்தில் பயிர் செய்யாமலுமிருங்கள். அறுவடைக்குப் பிறகு வயலில் தானாக வளர்ந்து விளைந்தவற்றை அறுவடை செய்யவோ, கிளை கழிக்காத கொடிகளில் உள்ள திராட்சைப் பழங்களைப் பறிக்கவோ கூடாது. பூமி ஒரு வருடம் ஓய்வு கொள்ளட்டும். “நிலம் ஒரு வருடம் ஓய்வாக விடப்பட்டாலும் உங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்களுக்கும், உங்கள் ஆண், பெண், வேலையாட்களுக்கும், உங்கள் நாட்டிலுள்ள கூலி வேலைக்காரர்களுக்கும், அயல்நாட்டுக்காரர்களுக்கும்கூட போதுமான உணவுப் பொருட்கள் இருக்கும். உங்கள் பசுக்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும்கூட போதுமான உணவு இருக்கும்.

லேவியராகமம் 25:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும். ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக. ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது. தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும், உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.