லேவியராகமம் 23:33-43
லேவியராகமம் 23:33-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் கூடாரப்பண்டிகை ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும். முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது. “ ‘யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளைக் கொண்டுவருவதற்காக, பரிசுத்த சபைக்கூடுதல்களாக நீங்கள் பிரசித்தப்படுத்தும்படி யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இப்பண்டிகைகளில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தகன காணிக்கைகளும், தானியக் காணிக்கைகளும், பலிகளும், பான காணிக்கைகளும் கொண்டுவரப்பட வேண்டும். இக்காணிக்கைகள் யாவும், யெகோவாவின் ஓய்வுநாள் காணிக்கைகளோடு கூடுதலாகக் கொடுக்க வேண்டியவையாகும். இவை உங்கள் கொடைகளோடும். நீங்கள் நேர்ந்துகொண்ட எதனோடும், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகள் அனைத்தோடும் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். “ ‘ஆகவே நீங்கள் நாட்டின் விளைச்சலைத் சேர்த்தபின், ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் தொடங்கி, ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கான இப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதலாம் நாள் ஓய்வுநாளாகும். எட்டாம் நாளும் ஓய்வுநாளாகும். முதலாம் நாளிலே உங்கள் மரங்களிலிருந்து சிறந்த பழங்களையும், ஓலைகளையும், இலைகளுள்ள கொப்புகளையும், ஆற்றலறியையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாட்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில் களிகூருங்கள். ஒவ்வொரு வருடமும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்குரிய பண்டிகையாக இதைக் கொண்டாடுங்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாக இருக்கும். ஏழாம் மாதத்தில் இதைக் கொண்டாடுங்கள். நீங்கள் ஏழுநாட்களுக்குக் கூடாரங்களில் வசியுங்கள். ஊரில் பிறந்த இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களில் வசிக்கவேண்டும். இவ்விதமாய் நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவர்களைக் கூடாரங்களில் வசிக்கச்செய்தேன் என்று உங்கள் சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
லேவியராகமம் 23:33-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் ஏழுநாட்களும் யெகோவாவுக்கு அனுசரிக்கும் கூடாரப்பண்டிகையாக இருப்பதாக. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது. ஏழுநாட்களும் யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது அனுசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். “நீங்கள் யெகோவாவுடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் யெகோவாவுக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய யெகோவாவுடைய பண்டிகைகள் இவைகளே. “நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் யெகோவாவுக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிப்பீர்களாக; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு. முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள். வருடந்தோறும் ஏழுநாட்கள் யெகோவாவுக்கு இந்தப் பண்டிகையை அனுசரிப்பீர்களாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும். நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச்செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாட்கள் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.
லேவியராகமம் 23:33-43 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
லேவியராகமம் 23:33-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே. நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு. முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள். வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும். நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.