லேவியராகமம் 23:12-44

லேவியராகமம் 23:12-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் அந்நாளிலே ஒரு வயதுடைய குறைபாடற்ற செம்மறியாட்டுக் குட்டியை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும். அதனுடன் அதற்குரிய தானியக் காணிக்கையாக, ஒரு எப்பாவின் பத்தில் இரண்டு பங்கு அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த சிறந்த மாவாக அதைச் செலுத்தவேண்டும். அது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அத்துடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான திராட்சை இரசத்தை, அதற்குரிய பானகாணிக்கையாகவும் செலுத்தவேண்டும். நீங்கள் உங்கள் இறைவனுக்கு முதற்பலனில் இக்காணிக்கையைக் கொண்டுவரும் அந்த நாள்வரை, அதிலிருந்து எந்தவொரு அப்பத்தையோ, வறுத்த தானியத்தையோ, பச்சைத் தானியத்தையோ சாப்பிடக்கூடாது. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும். “ ‘நீங்கள் அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டைக் கொண்டுவந்த நாளான ஓய்வுநாளுக்கு அடுத்த நாளிலிருந்து, முழுமையாக ஏழு வாரங்களை எண்ணுங்கள். ஏழாவது ஓய்வுநாளுக்கு அடுத்தநாளான ஐம்பதாவது நாள்வரை எண்ணுங்கள். அதன்பின் யெகோவாவுக்குப் புதிய தானியக் காணிக்கையைக் கொண்டுவாருங்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் பத்தில் இரண்டு எப்பா அளவான சிறந்த மாவினால் புளிப்பூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இரண்டு அப்பங்களை, யெகோவாவுக்கான முதற்பலன்களின் அசைவாட்டும் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள். இந்த அப்பத்துடன், ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதும், குறைபாடற்றதுமாய் இருக்கவேண்டும். அவற்றுடன் ஒரு காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவாருங்கள். இவை அவர்களுடைய தானியக் காணிக்கைகளோடும், பானகாணிக்கைகளோடும் யெகோவாவுக்குரிய தகன காணிக்கையாக இருக்கும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சமாதான காணிக்கையாக, ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதாயிருக்கிற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பலியிடுங்கள். ஆசாரியன் இந்த இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் முதற்பலன்களின் அப்பத்துடன் யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். யெகோவாவுக்குப் பரிசுத்தமான இந்தக் காணிக்கை பொருட்கள் ஆசாரியனுக்குச் சொந்தமாகும். அதே நாளில் பரிசுத்த சபைக்கூடுதலை நீங்கள் அறிவிக்கவேண்டும். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாயிருக்கவேண்டும். “ ‘நீங்கள் உங்கள் நிலத்தில் அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் உள்ளவைகளை அறுவடை செய்யாமலும், அறுவடையில் சிந்தியதைப் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். இவைகளை ஏழைகளுக்கும், பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார். யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஏழாம் மாதத்தின் முதலாம் நாள் உங்களுக்கு ஒரு ஓய்வுநாளாயிருக்க வேண்டும். அந்த நாள் எக்காளம் முழங்கி, நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பரிசுத்த சபைக்கூடுதலாக இருக்கவேண்டும். அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’ ” என்றார். யெகோவா மோசேயிடம், “ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பாவநிவிர்த்தி செய்யும் நாளாகும். அந்த நாளில் பரிசுத்த சபையைக் கூட்டி உபவாசித்து, உங்களை ஒடுக்கி, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவாருங்கள். அந்த நாளிலே எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். ஏனெனில், அதுவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவிர்த்தி நாள். அந்த நாளில் உபவாசித்து தன்னை ஒடுக்காத எவனும் தன் மக்களில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனையும், அவனுடைய மக்கள் மத்தியிலிருந்து நான் அழித்துப்போடுவேன். நீங்கள் எந்தவொரு வேலையுமே செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும். இந்நாள் உங்களுக்கான ஓய்வுநாள். அதில் உபவாசித்து உங்களையே நீங்கள் ஒடுக்கவேண்டும். மாதத்தின் ஒன்பதாம்நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை நீங்கள் உங்கள் ஓய்வுநாளை அனுசரிக்கவேண்டும்” என்றார். யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் கூடாரப்பண்டிகை ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும். முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது. “ ‘யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளைக் கொண்டுவருவதற்காக, பரிசுத்த சபைக்கூடுதல்களாக நீங்கள் பிரசித்தப்படுத்தும்படி யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இப்பண்டிகைகளில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தகன காணிக்கைகளும், தானியக் காணிக்கைகளும், பலிகளும், பான காணிக்கைகளும் கொண்டுவரப்பட வேண்டும். இக்காணிக்கைகள் யாவும், யெகோவாவின் ஓய்வுநாள் காணிக்கைகளோடு கூடுதலாகக் கொடுக்க வேண்டியவையாகும். இவை உங்கள் கொடைகளோடும். நீங்கள் நேர்ந்துகொண்ட எதனோடும், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகள் அனைத்தோடும் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். “ ‘ஆகவே நீங்கள் நாட்டின் விளைச்சலைத் சேர்த்தபின், ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் தொடங்கி, ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கான இப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதலாம் நாள் ஓய்வுநாளாகும். எட்டாம் நாளும் ஓய்வுநாளாகும். முதலாம் நாளிலே உங்கள் மரங்களிலிருந்து சிறந்த பழங்களையும், ஓலைகளையும், இலைகளுள்ள கொப்புகளையும், ஆற்றலறியையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாட்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில் களிகூருங்கள். ஒவ்வொரு வருடமும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்குரிய பண்டிகையாக இதைக் கொண்டாடுங்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாக இருக்கும். ஏழாம் மாதத்தில் இதைக் கொண்டாடுங்கள். நீங்கள் ஏழுநாட்களுக்குக் கூடாரங்களில் வசியுங்கள். ஊரில் பிறந்த இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களில் வசிக்கவேண்டும். இவ்விதமாய் நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவர்களைக் கூடாரங்களில் வசிக்கச்செய்தேன் என்று உங்கள் சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார். இவ்வாறு மோசே, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகளை இஸ்ரயேலருக்கு அறிவித்தான்.

லேவியராகமம் 23:12-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்தநாள்வரை, அப்பமும் வாட்டிய கதிரையும் பச்சைக்கதிரையும் சாப்பிடவேண்டாம்; இது உங்களுடைய குடியிருப்புகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை. “நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்வரை கணக்கிட்டு, யெகோவாவுக்குப் புதிய உணவுபலியைச் செலுத்தக்கடவீர்கள். நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாக வேகவைக்கப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாக இருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வீடுகளிலிருந்து யேகோவாக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து, அப்பத்தோடேகூடக் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக அவைகளுக்குரிய உணவுபலியையும், பானபலியையும் செலுத்தி, வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் செலுத்தக்கடவீர்கள். அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; யெகோவாவுக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும். அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது; இது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை. “உங்கள் தேசத்தின் விளைச்சலை நீங்கள் அறுக்கும்போது, வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் அந்நியனுக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாம்தேதி எக்காளச்சத்தத்தால் நினைவுகூறுதலாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாக இருப்பதாக. அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாக இருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள். அந்த நாள் உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாக இருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோவான். அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் மக்களின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன். அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாம்தேதி மாலை துவக்கி, மறுநாள் மாலைவரை உங்கள் ஓய்வை அனுசரிப்பீர்களாக” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் ஏழுநாட்களும் யெகோவாவுக்கு அனுசரிக்கும் கூடாரப்பண்டிகையாக இருப்பதாக. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது. ஏழுநாட்களும் யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது அனுசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். “நீங்கள் யெகோவாவுடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் யெகோவாவுக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய யெகோவாவுடைய பண்டிகைகள் இவைகளே. “நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் யெகோவாவுக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிப்பீர்களாக; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு. முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள். வருடந்தோறும் ஏழுநாட்கள் யெகோவாவுக்கு இந்தப் பண்டிகையை அனுசரிப்பீர்களாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும். நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச்செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாட்கள் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார். அப்படியே மோசே யெகோவாவுடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான்.

லேவியராகமம் 23:12-44 பரிசுத்த பைபிள் (TAERV)

“கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும். நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். புதிய தானியத்தையோ, பழங்களையோ, புதிய மாவால் செய்த அப்பத்தையோ உங்கள் தேவனுக்கு பலிகளை செலுத்துவதற்கு முன் உண்ணக் கூடாது. இது உங்கள் தலைமுறை தோறும் தொடர வேண்டிய சட்டமாகும். “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள். அன்று உங்கள் வீட்டிலிருந்து இரண்டு அப்பங்களைக் கொண்டு வாருங்கள். இவை அசைவாட்டும் பலிக்குரியவை. 16 கிண்ணங்கள் அளவுள்ள மாவைப் புளிப்பு சேர்த்து அந்த அப்பங்களைத் தயார் செய்யப் பயன்படுத்துங்கள். இது முதல் அறுவடையானதும் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கையாகும். “ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். மேலும் நீங்கள் பாவப்பரிகார பலியாக ஒரு ஆட்டுக் கடாவையும், சமாதான பலியாக ஒருவயதான இரண்டு ஆண் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டும். “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் ஆசாரியர்களுக்கு உரியவை. அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும். “நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார். மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஏழாவது மாதத்தில் முதல் நாள் உங்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாள் உண்டு. அன்று பரிசுத்த சபைக் கூட்டமும் உண்டு. அன்று எக்காளத்தை ஊதி சிறப்பு நேரத்தை நினைவூட்ட வேண்டும். அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார். கர்த்தர் மோசேயிடம், “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாவப்பரிகாரம் செய்யும் பண்டிகை வரும். அப்போது ஒரு பரிசுத்த சபைக் கூட்டம் உண்டு. அன்று வேலை எதையும் செய்யாமலும், சாப்பிடாமலும் இருக்க வேண்டும். கர்த்தருக்குரிய தகன பலியைக் கொண்டு வரவேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள். “அன்று எவனாவது உபவாசம் இருக்க மறுத்தால் அவன் தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படுவான். இந்நாளில் எவனாவது வேலை செய்தால் அவனை மற்ற ஜனங்களிடமிருந்து நான் அழித்துப் போடுவேன். நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும். அது உங்களுக்கு ஒரு சிறப்பான ஓய்வு நாளாகும். அந்நாளில் வேறு எதுவும் நீங்கள் செய்யாமல் தாழ்மையான மனதுடன் இருக்க வேண்டும். அந்த சிறப்பான பண்டிகை அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை தொடர்ந்திருக்கும்” என்று கூறினார். கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார். எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.

லேவியராகமம் 23:12-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து, அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலியையும் செலுத்தி, வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள். அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும். அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக. அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள். அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன். அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்தியகட்டளை. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடி வந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே. நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு. முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள். வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும். நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.