லேவியராகமம் 19:1-8
லேவியராகமம் 19:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள். நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது. அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
லேவியராகமம் 19:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘உங்கள் இறைவனாகிய யெகோவாவான நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். “ ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தகப்பனுக்கும், தாய்க்கும் மரியாதை கொடுக்கவேண்டும். என்னுடைய ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘நீங்கள் விக்கிரகங்களிடம் திரும்பவேண்டாம். வார்க்கப்படும் உலோகத்தினால் உங்களுக்காக தெய்வங்களைச் செய்யவும் வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. “ ‘நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான காணிக்கையைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். அது பலியிடப்படுகிற நாளிலும், அதற்கு அடுத்த நாளிலுமே அதைச் சாப்பிடவேண்டும். மூன்றாம் நாள்வரை மீதமிருக்கும் எதையும் எரித்துவிடவேண்டும். மூன்றாம் நாளில் அதில் எதையும் சாப்பிட்டால் அது அசுத்தமானது. அக்காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதைச் சாப்பிடுகிற எவனும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைத் தூய்மைக்கேடாக்கினபடியால், அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி. அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
லேவியராகமம் 19:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள். உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “நீங்கள் சமாதானபலியைக் யெகோவாவுக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள். நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது. மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது. அதைச் சாப்பிடுகிறவன் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
லேவியராகமம் 19:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயிடம், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். “உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்! “விக்கிரகங்களை வணங்காதீர்கள். வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உருவாக்காதீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். “நீங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொடுக்கும்போது அது அங்கீகரிக்கப்படத்தக்க சரியான வழியிலேயே செய்யவேண்டும். நீங்கள் பலிகொடுத்த நாளிலும், மறுநாளும் அதனை உண்ணலாம். ஆனால் அந்த உணவில் மீதியானது மூன்றாவது நாளும் இருந்தால் அதனை நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டும். மூன்றாவது நாள் பலியின் மீதியான எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. இது தீட்டானது, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இதனை எவராவது செய்தால் அது பாவமாயிருக்கும். ஏனென்றால் அவர்கள் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றை மதிக்கவில்லை. இத்தகைய மனிதர்கள் தம் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.