லேவியராகமம் 16:7-34

லேவியராகமம் 16:7-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி; பின்பு ஆரோன் தனக்காவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக்கொன்று, கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபக்கலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, தான் சாகாதபடிக்கு தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன். பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின் மேல் சுற்றிலும் பூசி, தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன், அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன். அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன். ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு, பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் ஜனங்களின் சர்வாங்கதகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள். அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

லேவியராகமம் 16:7-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் நிறுத்தவேண்டும். ஆரோன் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களின் மேலும் சீட்டுப்போட்டு ஒன்றை யெகோவாவுக்காகவும், இன்னொன்றைப் பாவச்சுமை ஆடாகவும் வேறுபிரிக்க வேண்டும். யெகோவாவுக்காக சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை ஆரோன் கொண்டுவந்து பாவநிவாரண காணிக்கையாகப் பலியிடவேண்டும். சீட்டின் மூலம் பாவச்சுமை ஆடாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளாட்டை, யெகோவா முன்னிலையில் உயிரோடே நிறுத்தவேண்டும். அது பாவநிவிர்த்தி செய்வதற்காக பாலைவனத்தில் தப்பிப்போக விடப்படவேண்டிய ஆடு. “பின்பு ஆரோன் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய சொந்த பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைக் கொண்டுவர வேண்டும். அவன் தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். அவன் யெகோவா முன்னிலையில் இருக்கும் பலிபீடத்திலிருந்து நெருப்புத்தணல் நிறைந்த ஒரு தூபகிண்ணத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு கைநிறைய நன்றாக அரைக்கப்பட்ட நறுமணத்தூளையும் எடுத்துக்கொண்டு திரைக்குப் பின்னால் வரவேண்டும். அவன் அந்த நறுமணத்தூளை யெகோவாவுக்கு முன்பாக நெருப்பில் போடவேண்டும். அந்த நறுமணப்புகை சாட்சிப்பெட்டியின் மேலிருக்கும் கிருபாசனத்தை மூடும். அப்பொழுது அவன் சாகமாட்டான். அவன் தனது விரலினால் அக்காளையின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, கிருபாசனத்தின் முன்பக்கத்தில் தெளிக்கவேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு எடுத்து கிருபாசனத்தின் முன்னால் ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கவேண்டும். “பின்பு மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையாக வெள்ளாட்டுக் கடாவைக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை திரைக்குப் பின்னால் எடுத்துச்சென்று, காளையின் இரத்தத்தைக்கொண்டு செய்ததுபோல, இதைக்கொண்டும் செய்யவேண்டும். அதாவது அந்த இரத்தத்தை கிருபாசனத்தின் மேலும், அதன் முன்பக்கத்திலும் தெளிக்கவேண்டும். இவ்வாறாக அவன் மகா பரிசுத்த இடத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இஸ்ரயேலரின் பாவம் எதுவாயினும், அவர்களுடைய அசுத்தத்திற்காகவும், கலகத்திற்காகவும் இவ்வாறு செய்யவேண்டும். அவர்களுடைய அசுத்தத்தின் மத்தியில் அவர்களிடையே இருக்கும் சபைக் கூடாரத்திற்காகவும், இவ்விதமாகவே செய்யவேண்டும். ஆரோன் பாவநிவிர்த்தி செய்யும்படி, மகா பரிசுத்த இடத்திற்குள் போகிற நேரந்தொடங்கி, அவன் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து வெளியே வரும்வரை, சபைக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது. “பின்பு அவன் வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக உள்ள பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் காளையின் இரத்தத்தில் கொஞ்சமும், வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சமும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா கொம்புகளின்மேலும் பூசவேண்டும். அவன் இஸ்ரயேலரின் அசுத்தத்திலிருந்து பலிபீடத்தைச் சுத்திகரித்து, அதை அர்ப்பணம் செய்யும்படி அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை தன் விரல்களினால் அதன்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும். “ஆரோன் மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து முடித்தபின், அவன் அந்த உயிருள்ள ஆட்டை முன்பாக கொண்டுவர வேண்டும். ஆரோன் தன் இரண்டு கைகளையும் அந்த உயிருள்ள ஆட்டின் தலையின்மேல் வைத்து, இஸ்ரயேலரின் எல்லா பாவங்களான எல்லா கொடுமையையும், கலகத்தையும் அந்த ஆட்டின் மேலாக அறிக்கையிட்டு, அவற்றை அந்த ஆட்டின் தலையின்மேல் சுமத்தவேண்டும். அவன் அந்த வெள்ளாட்டைப் பாலைவனத்திற்கு அனுப்பிவிடும்படி அதற்காக நியமிக்கப்பட்ட ஒருவனின் பொறுப்பில் அதைக்கொடுத்து அனுப்பிவிடவேண்டும். அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா பாவங்களையும் தன்மேல் சுமந்துகொண்டு, தனிமையான ஒரு இடத்திற்குப் போகும். அந்த மனிதன் அதை பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும். “பின்பு ஆரோன் சபைக் கூடாரத்திற்குப் போய், தான் மகா பரிசுத்த இடத்திற்குப் போகுமுன் உடுத்திக்கொண்ட மென்பட்டு உடைகளைக் களைந்து, அவற்றை அங்கே வைத்துவிடவேண்டும். அவன் ஒரு தூய்மையான இடத்திலே முழுகி, மீண்டும் தனது உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின் அவன் வெளியே வந்து, தனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தனக்கான தகன காணிக்கையையும், மக்களுக்கான தகன காணிக்கையையும் செலுத்தவேண்டும். பாவநிவாரண காணிக்கை பலியின் கொழுப்பையும் அவன் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். “பாவச்சுமை ஆடான வெள்ளாட்டைப் பாலைவனத்தில் போகவிடும் மனிதன், தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம். பாவநிவாரண காணிக்கையாக வெட்டப்பட்டதும், இரத்தம் பாவநிவிர்த்தி செய்யும்படி மகா பரிசுத்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டதுமான, காளையினுடைய, வெள்ளாட்டினுடைய மீதமுள்ள பாகங்கள் முகாமுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட வேண்டும். அவற்றின் தோல்களையும், இறைச்சியையும், குடல்களையும் எரிக்கவேண்டும். இவைகளை எரிக்கிறவன் தன் உடைகளைக் கழுவி, தானும் தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம். “இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளை. ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். நீங்கள் எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. தன் நாட்டினனானாலும், உங்கள் மத்தியில் வாழும் பிறநாட்டினனானாலும் வேலைசெய்யக்கூடாது. ஏனெனில் இந்த நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்படி உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். அப்பொழுது நீங்கள் யெகோவா முன்னிலையில் உங்கள் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு சுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள். இது உங்களுக்கு முழுமையாக இளைப்பாறும் ஓய்வுநாள். இந்நாளில், நீங்கள் உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். இது ஒரு நிரந்தர கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனின் இடத்துக்குத் தலைமை ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆசாரியனும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் பரிசுத்தமான மென்பட்டு உடைகளை உடுத்திக்கொண்டு, மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும், ஆசாரியருக்காகவும், சமுதாயத்தின் மக்கள் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். “இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது.

லேவியராகமம் 16:7-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் யேகோவாக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, யெகோவாக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும், யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி; “பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்திற்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று, யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, யெகோவாவுவுடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன். பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கக்கடவன். பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது. பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும். “அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக. அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன். “ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு, பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன். போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக. பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவைகளின் தோலையும், மாம்சத்தையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள். அவைகளைச் சுட்டெரித்தவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக. “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு, பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

லேவியராகமம் 16:7-34 பரிசுத்த பைபிள் (TAERV)

“பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும். பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது. “பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவை கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும். ஆனால் போக்காடாகச் சீட்டுள்ள கடாவையும் கர்த்தருக்கு முன் கொண்டு வர வேண்டும். பின் அந்தக் கடாவை உயிரோடு வனத்துக்குத் துரத்திவிட வேண்டும். இது ஜனங்களைச் சுத்திகரிப்புச் செய்யும். “பிறகு ஆரோன் காளையைத் தனக்குரிய பாவப்பரிகார பலியாகச் செலுத்தி, தன்னையும் தனது குடும்பத்தாரையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். அவனே தனக்கான பாவப்பரிகார பலியாக அக்காளையைக் கொல்ல வேண்டும். பிறகு கர்த்தரின் சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்புத் தணலினால் தூபகலசத்தை நிரப்ப வேண்டும். பொடியாக்கப்பட்ட நறுமணப் பொருட்களை தன் கைப்பிடி நிறைய எடுத்து திரைக்கு உட்புறமாகக் கொண்டு வர வேண்டும். அவன் கர்த்தரின் சந்நிதியில் நறுமணப் பொருட்களைப் போட வேண்டும். அப்புகையானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தை மூடும் அளவிற்கு போட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோன் மரிக்கமாட்டான். ஆரோன் கொல்லப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதனை விரலால் தொட்டுக் கீழ்ப்புறமாக நின்று கிருபாசனத்தின்மேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஏழுமுறை அவன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். “பிறகு ஆரோன் ஜனங்களின் பாவப் பரிகார பலிக்கான வெள்ளாட்டைக் கொன்று, அதன் இரத்தத்தைத் திரைக்குப் பின்னால் உள்ள அறைக்குக் கொண்டு வர வேண்டும். காளையின் இரத்தத்தைச் செய்தது போன்றே இதனையும் செய்ய வேண்டும். அவன் அந்த இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பும் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும். “அவர்களுடைய தீட்டுகளின் மத்தியிலிருக்கிற மிகப் பரிசுத்தமான இடத்தில் இச்சடங்குகளையெல்லாம் ஆரோன் செய்யும்போது எவரும் ஆசரிப்புக் கூடாரத்தில் நுழையக் கூடாது. ஆரோன் வெளியே வந்த பிறகுதான் எவரும் நுழைய வேண்டும். இவ்வாறு ஆரோன் தன்னையும், தன் குடும்பத்தாரையும், இஸ்ரேவேல் ஜனங்களையும் சுத்தம் செய்கிறான். பிறகு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின் அருகில் வரவேண்டும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் கொம்புகளில் தடவ வேண்டும். தன் விரலினால் அந்த இரத்தத்தைத் தொட்டு ஏழுமுறை அதன்மேல் தெளிக்க வேண்டும். அதனை இஸ்ரவேல் ஜனங்களின் தீட்டுகள் நீங்கும்படி சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த வேண்டும். “ஆரோன் மிகப் பரிசுத்தமான இடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவான். பிறகு ஆரோன் உயிருள்ள வெள்ளாட்டை கர்த்தருக்கு முன் கொண்டு வந்து தனது இரு கைகளையும் அதன் தலைமீது வைப்பான். பிறகு இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களையும் குற்றங்களையும் அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டின் தலையிலே சுமத்துவான். பின் அதனை அதற்கு நியமிக்கப்பட்ட ஆள் மூலம் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவான். அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான். “பிறகு ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவான். பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது அவன் அணிந்திருக்கும் மெல்லிய பஞ்சாடைகளை நீக்கி அவைகளை அங்கேயே வைத்துவிட வேண்டும். ஒரு பரிசுத்தமான இடத்தில் தனது உடல் முழுவதையும் தண்ணீரால் கழுவி, பிறகு வேறு சிறப்பு ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும். அதன்பின் வெளியே வந்து தனது மற்றும் ஜனங்களின் தகன பலிகளைச் செலுத்தி தன்னையும் ஜனங்களையும் பரிசுத்தமாக்க வேண்டும். பின் பாவப் பரிகார பலியின் கொழுப்பை பலிபீடத்தின் மேல் எரிப்பான். “போக்காடாகிய கடாவைக் கொண்டு போய் வனாந்திரத்திலே விட்டவன் ஆடைகளைத் துவைத்துக் குளித்துவிட்டு முகாமுக்குள் வரவேண்டும். “பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும். எரித்தவன் ஆடையைத் துவைத்து தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவிய பின்னரே கூடாரத்திற்குள் நுழைய வேண்டும். “இந்தச் சட்டங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்கும். ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் எவ்வுணவையும் நீங்கள் உண்ணவோ, ஒரு வேலையும் செய்யவோ கூடாது. உங்கள் தேசத்தில் வசிக்கும் உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் கூட எவ்வேலையும் செய்யக்கூடாது. ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள். இந்நாள் சிறப்பான ஓய்வு நாளாகும். அன்று உணவு எதையும் உட்கொள்ளாமல் உங்கள் மனதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறை என்றென்றும் இருக்கும். “தேவனுடைய அபிஷேகம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசாரியனே பாவப்பரிகாரம் செய்யத் தகுந்தவன். தனது தந்தைக்குப் பிறகு தலைமை ஆசாரியனாகப் பணி செய்யும் உரிமையைப் பெற்றவன் இவன். ஆசாரியன் பரிசுத்தமான சணல் நூல் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான். இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.