லேவியராகமம் 16:29-34
லேவியராகமம் 16:29-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்கூடாரத்துக்கும், பலிபீடத்துக்கும், பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
லேவியராகமம் 16:29-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளை. ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். நீங்கள் எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. தன் நாட்டினனானாலும், உங்கள் மத்தியில் வாழும் பிறநாட்டினனானாலும் வேலைசெய்யக்கூடாது. ஏனெனில் இந்த நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்படி உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். அப்பொழுது நீங்கள் யெகோவா முன்னிலையில் உங்கள் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு சுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள். இது உங்களுக்கு முழுமையாக இளைப்பாறும் ஓய்வுநாள். இந்நாளில், நீங்கள் உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். இது ஒரு நிரந்தர கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனின் இடத்துக்குத் தலைமை ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆசாரியனும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் பரிசுத்தமான மென்பட்டு உடைகளை உடுத்திக்கொண்டு, மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும், ஆசாரியருக்காகவும், சமுதாயத்தின் மக்கள் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். “இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது.
லேவியராகமம் 16:29-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நிரந்தரமான கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த உடைகளாகிய சணல்நூல் உடைகளை அணிந்துகொண்டு, பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
லேவியராகமம் 16:29-34 பரிசுத்த பைபிள் (TAERV)
“இந்தச் சட்டங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்கும். ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் எவ்வுணவையும் நீங்கள் உண்ணவோ, ஒரு வேலையும் செய்யவோ கூடாது. உங்கள் தேசத்தில் வசிக்கும் உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் கூட எவ்வேலையும் செய்யக்கூடாது. ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள். இந்நாள் சிறப்பான ஓய்வு நாளாகும். அன்று உணவு எதையும் உட்கொள்ளாமல் உங்கள் மனதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறை என்றென்றும் இருக்கும். “தேவனுடைய அபிஷேகம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசாரியனே பாவப்பரிகாரம் செய்யத் தகுந்தவன். தனது தந்தைக்குப் பிறகு தலைமை ஆசாரியனாகப் பணி செய்யும் உரிமையைப் பெற்றவன் இவன். ஆசாரியன் பரிசுத்தமான சணல் நூல் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான். இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.