லேவியராகமம் 15:19-33

லேவியராகமம் 15:19-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘ஒழுங்கான இரத்தப்போக்கு உள்ள பெண் மாதவிடாய் காலத்தில் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவளாய் இருப்பாள். அவளைத் தொடுகிற எவனும், மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான். “ ‘அந்நாட்களில் அவள் படுக்கின்ற படுக்கையும், அவள் உட்காரும் இடமும் அசுத்தமுள்ளதாயிருக்கும். யாராவது அவளின் படுக்கையைத் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவள் உட்காரும் எதையாவது யாராவது ஒருவன் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவள் படுக்கையை அல்லது, அவள் உட்கார்ந்த எதையாவது ஒருவன் தொட்டால், அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான். “ ‘அந்நாட்களில் ஒருவன் அவளுடன் உறவுகொள்வதினால், அவளுடைய மாதவிடாய் அவனில் படும்போது அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவன் பயன்படுத்தும் எந்தப் படுக்கையும் அசுத்தமாயிருக்கும். “ ‘ஒரு பெண்ணுக்கு உடலின் இரத்தப்போக்கு மாதவிடாயைவிட வழக்கத்திற்கு மாறாக வந்தால் அல்லது மாதவிடாய் காலம் நீடித்தால், அவள் அந்த மாதவிடாய் காலத்தில் இருந்ததுபோல், இரத்தப்போக்கு இருக்கும்வரைக்கும் அசுத்தமாயிருப்பாள். அவள் இந்த நாட்களில் படுக்கின்ற கட்டிலும், அவள் உட்காரும் எதுவும், முன்பு மாதவிடாய் நாட்களில் அசுத்தமுள்ளதாய் இருந்ததுபோல, இப்பொழுதும் அசுத்தமுள்ளதாய் இருக்கும். யாராவது ஒருவன் அவைகளைத் தொட்டால், அவன் அசுத்தமுள்ளவனாவான். அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாவான். “ ‘அவள் தன் மாதவிடாயிலிருந்து சுத்திகரிக்கப்படும்போது, அவள் ஏழு நாட்களை எண்ணவேண்டும். அதன்பின் சம்பிரதாய முறைப்படி அவள் சுத்தமாவாள். எட்டாம் நாள் அவள் இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அதில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவளுடைய இரத்தப்போக்கின் அசுத்தத்திற்காக யெகோவா முன்பாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். “ ‘நீ இஸ்ரயேலரை அவர்களை அசுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வேறுபடுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியில் இருக்கும் என் வசிப்பிடத்தை அசுத்தப்படுத்துவதால், இஸ்ரயேலர் தங்கள் அசுத்தத்தில் சாகாதபடி, இப்படிச் செய்யவேண்டும்.’ ” ஆகவே உடலில் கசிவு உள்ளவனுக்கும், விந்து கழிவதினால் அசுத்தமுள்ளவனுக்கும், மாதவிடாய் உள்ள பெண்ணுக்கும், உடல் கசிவுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிற பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.

லேவியராகமம் 15:19-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். “ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள். எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். “இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”. விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும், இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

லேவியராகமம் 15:19-33 பரிசுத்த பைபிள் (TAERV)

“இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான். அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான். “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும். “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார். இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.

லேவியராகமம் 15:19-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊரலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிறபடுக்கையும் தீட்டுப்படும். ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள். பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும், சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார்.