லேவியராகமம் 15:1-18

லேவியராகமம் 15:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் பேசி, “நீங்கள் இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘தன் உடலிலிருந்து ஒருவனுக்கு கசிவு ஏற்பட்டால் அது அசுத்தமானது. அக்கசிவு அவன் உடலிலிருந்து தொடர்ந்து வடிந்தாலும், தடைப்பட்டாலும், அது அவனை அசுத்தப்படுத்தும். அவனுடைய உடற்கசிவு அசுத்தத்தை உண்டாக்கும் விதமாவது: “ ‘அவன் படுக்கின்ற எந்தக் கட்டிலும், அவன் உட்காருகிற எந்த இடமும் அசுத்தமாகும். யாராவது ஒருவன் அந்தக் கட்டிலைத் தொட்டால் அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான். கசிவு உள்ள அந்த மனிதன் உட்கார்ந்த இடத்தில் யாராவது உட்கார்ந்தால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். “ ‘கசிவுள்ளவனைத் தொடுகிறவனும் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். “ ‘கசிவுள்ள அந்த மனிதன் சுத்தமுள்ள ஒருவன்மேல் துப்பினால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். “ ‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும். அவன் உட்கார்ந்த எந்தப் பொருளையும் தொடுகிறவன், மாலைவரை அசுத்தமாயிருப்பான். அப்படிப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். “ ‘கசிவு உள்ளவன், தன் கைகளைக் கழுவாமல் வேறொருவனைத் தொட்டால், தொடப்பட்டவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். “ ‘அவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொடுவானானால், அப்பாத்திரம் உடைக்கப்பட வேண்டும். மரப்பாத்திரங்களை எல்லாம் தண்ணீரால் அலசவேண்டும். “ ‘அந்தக் கசிவு அவனைவிட்டு நீங்கும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்தமாவதற்கு ஏழுநாள் பொறுத்து, ஏழாம்நாள் தன் உடைகளைக் கழுவி சுத்தமான தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். எட்டாம் நாளிலே, இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை அவன் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவற்றை சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொடுக்கவேண்டும். ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் யெகோவா முன்னிலையில் அந்தக் கசிவின் நிமித்தம் அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். “ ‘ஒருவனிலிருந்து விந்து வெளியேறினால், அவன் தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவி முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். விந்துபட்ட எந்த உடையும், தோல் பொருளும் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும். அது மாலைவரை அசுத்தமாயிருக்கும். ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு விந்து வெளிப்பட்டால், அவர்கள் இருவரும் தண்ணீரில் முழுகவேண்டும். அவர்கள் மாலைவரை அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்கள்.

லேவியராகமம் 15:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன். அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும். விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும். அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும். “விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான். எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன். ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். “ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக. விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

லேவியராகமம் 15:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து, “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும். இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. “உடற்கழிவு ஏற்பட்டவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும். அவன் எதன் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். அவனது படுக்கையைத் தொடுகிறவன் தனது ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். உடற்கழிவு ஏற்பட்டவன் உட்காருகிற இடத்தில் உட்காருகிறவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை இவனும் தீட்டு உள்ளவனாக இருப்பான். உடற்கழிவு ஏற்படுகிறவனைத் தொடுபவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை இவனுக்கும் தீட்டு இருக்கும். உடற்கழிவு உள்ளவனின் எச்சில் மேலேபட்டாலும் ஒருவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை அவனுக்குத் தீட்டு இருக்கும். இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும். இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான். சிற்சில இடங்களில் உடற்கழிவு உள்ளவன் தண்ணீரில் தன் கைகளைக் கழுவாமலே அடுத்தவனைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டாக இருப்பான். “உடற்கழிவு ஏற்பட்டவன் ஏதேனும் மண் பாண்டத்தைத் தொட்டால் அம்மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். மரத்தாலான பாத்திரத்தை அவன் தொடநேர்ந்தால், அதைத் தண்ணீரால் கழுவ வேண்டும். “உடற்கழிவு உள்ளவன் அது நீங்கி சுத்தமானதும் அதற்குச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்காக ஏழு நாட்கள் காத்திருந்து, தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் சுத்தமாவான். எட்டாவது நாள் அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவற்றை கர்த்தருக்கு முன் கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அவற்றுள் ஒன்று பாவப்பரிகார பலியாகவும் இன்னொன்று தகன பலியாகவும் ஆசாரியன் கர்த்தருக்கு செலுத்துவான். இம்முறையில் ஆசாரியன் கர்த்தருக்கு முன் அவனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். “ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும். விந்து கழிந்தவனோடு ஒரு பெண் படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.

லேவியராகமம் 15:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன். அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும். பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும். அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும், பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப்பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக. இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.