லேவியராகமம் 11:41-47

லேவியராகமம் 11:41-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘தரையில் ஊரும்பிராணிகள் எல்லாம் அருவருப்பானவை. அவற்றைச் சாப்பிடக்கூடாது. தரையில் ஊரும் எந்தப் பிராணியும் அவை வயிற்றினால் ஊர்ந்தாலும் சரி, நான்கு கால்களாலோ அநேகம் கால்களாலோ நகர்ந்தாலும் சரி, அவை அருவருப்பானவையே. அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது. இந்த ஊரும்பிராணிகளில் எதினாலாவது நீங்கள் உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் அவற்றினாலாவது அவற்றின் மூலமாவது உங்களை அசுத்தமாக்கிக்கொள்ள வேண்டாம். நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. ஆகையால் நீங்கள் உங்களை அர்ப்பணம் செய்து பரிசுத்தராயிருங்கள். ஏனெனில், நான் பரிசுத்தர். நீங்கள் தரையில் ஊர்ந்து திரியும் எந்தவித பிராணியாலும் உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். உங்கள் இறைவனாயிருக்கும்படி உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த யெகோவா நானே. ஆகையால் நீங்கள் பரிசுத்தமாயிருங்கள். ஏனெனில், நான் பரிசுத்தர். “ ‘மிருகங்கள், பறவைகள், நீரில் நீந்தும் உயிரினங்கள், தரையில் ஊரும்பிராணிகள் அனைத்தையும் பற்றிய ஒழுங்குவிதிகள் இவையே. அசுத்தமானதற்கும், சுத்தமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவும், சாப்பிடக்கூடிய உயிரினங்களுக்கும், சாப்பிடக்கூடாத உயிரினங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காட்டவுமே இந்த ஒழுங்குவிதிகள் கொடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.”

லேவியராகமம் 11:41-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது. தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள். ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள். நான் உங்கள் தேவனாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக. நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக. சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், சாப்பிடத்தக்க உயிரினங்களுக்கும் சாப்பிடத்தகாத உயிரினங்களுக்கும் வித்தியாசம் உண்டாக்குவதற்காக, மிருகத்திற்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

லேவியராகமம் 11:41-47 பரிசுத்த பைபிள் (TAERV)

“தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களை கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது. தரையில் ஊர்ந்து செல்லும் சகல மிருகங்களிலும் வயிற்றினால் நகர்ந்து செல்லுகின்றவற்றையும் நாலு கால்களால் நடமாடுகின்றவற்றையும் பற்பல கால்கள் உள்ளவற்றையும் உண்ண வேண்டாம். அவை தீட்டுள்ளவை. அவை உங்களைத் தீட்டுப் பண்ணாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர் நீங்களும் உங்களைப் பரிசுத்தமானவர்களாக வைத்துக்கொள்ளுங்கள். ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். நான் இதைச் செய்ததால் நீங்கள் சிறப்பான ஜனங்களாக விளங்குகிறீர்கள். உங்களது தேவனாகிய நான் பரிசுத்தமானவராக இருக்கிறேன். நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருங்கள்” என்றார். இவை அனைத்தும் மிருகம், பறவை, ஊர்வன பற்றிய விதிகள் ஆகும். இவை அனைத்தும் கடலிலும், தரையிலும் உள்ள மிருகங்களைப்பற்றியவை. இதன் மூலம் ஜனங்கள் தீட்டுள்ள மிருகங்களுக்கும் தீட்டில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறு பாட்டைக் கண்டுகொள்ளலாம். அதோடு உண்ணத் தக்க மிருகம் எது, உண்ணத்தகாத மிருகம் எது என்றும் அறிந்துகொள்ளலாம்.

லேவியராகமம் 11:41-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது. தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும் அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள். ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக. நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக. சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம் பண்ணும்பொருட்டு, மிருகத்துக்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.