லேவியராகமம் 10:6-20

லேவியராகமம் 10:6-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசே ஆரோனிடமும், அவனுடைய மகன்களான எலெயாசார், இத்தாமார் என்பவர்களிடமும், “நீங்கள் துக்கம் அநுசரிப்பதற்காக உங்கள் தலைமயிரைக் குலையவிடவும், உடைகளைக் கிழித்துக்கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். யெகோவா முழு சமுதாயத்தின்மேலும் கோபங்கொள்வார். ஆனால் உங்கள் உறவினரான இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவரும், யெகோவா நெருப்பினால் அழித்தவர்களுக்காக துக்கம் அநுசரிக்கலாம். நீங்கள் சபைக்கூடார வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். அப்படிப் புறப்பட்டால் யெகோவாவினுடைய அபிஷேக எண்ணெய் உங்கள்மேல் இருப்பதால் நீங்கள் சாவீர்கள்” என்றான். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். யெகோவா ஆரோனுக்குச் சொன்னதாவது: “நீயும் உன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்பொழுது, திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவேண்டாம். குடித்தால் நீங்கள் சாவீர்கள். தலைமுறைதோறும் இது ஒரு நிரந்தரமான நியமம். நீ பரிசுத்தமானதற்கும், சாதாரணமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் இடையிலும் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். அத்துடன் யெகோவா மோசேயின் மூலமாக இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கிற விதிமுறைகள் எல்லாவற்றையும் நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டும்” என்றார். அப்பொழுது மோசே, ஆரோனிடமும் அவனுடைய தப்பியிருந்த மகன்களான எலெயாசாரிடமும், இத்தாமாரிடமும் சொன்னதாவது: “யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கையிலிருந்து மீதியாய் விடப்பட்ட தானியக் காணிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பலிபீடத்திற்கு அருகே புளிப்பில்லாமல் தயாரித்துச் சாப்பிடுங்கள். ஏனெனில், அது மகா பரிசுத்தமானது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படுகிற காணிக்கைகளில் இது உனக்கும் உன் மகன்களுக்கும் உரிய பங்காக இருப்பதால், அதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடுங்கள். இப்படியாக நான் கட்டளை பெற்றிருக்கிறேன். ஆனாலும் அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், படைக்கப்பட்ட தொடையையும் நீயும் உன் மகன்களும், மகள்களும் சாப்பிடலாம். அவற்றை சம்பிரதாய முறைப்படி சுத்தமானது என எண்ணப்பட்ட இடத்திலேயே சாப்பிடலாம். இஸ்ரயேலரின் சமாதான காணிக்கைகளில் ஏற்படுத்தப்பட்ட உங்கள் பங்காக அவை உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. படைக்கப்பட்ட தொடையும், அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியும் நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளின் கொழுப்பான பாகங்களுடன், அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும்படி கொண்டுவர வேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இது உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் நிரந்தர பங்காயிருக்கும்” என்றான். பிறகு பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாட்டுக் கடாவைப்பற்றி மோசே தேடிப்பார்த்தபோது, அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அப்பொழுது அவன் ஆரோனின் மற்ற மகன்களான எலெயாசார்மேலும், இத்தாமார்மேலும் கோபங்கொண்டான். ஆகவே மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் பாவநிவாரண காணிக்கையை பரிசுத்த இடத்தில் சாப்பிடவில்லை? அது மகா பரிசுத்தமானது. யெகோவா முன்னிலையில் இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காக பாவநிவர்த்தி செய்வதின்மூலம் அவர்களுடைய குற்றத்தை நீக்கும்படி அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டதே. அதன் இரத்தம் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுவரப்படாதபடியால், உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி நீங்கள் அந்த வெள்ளாட்டைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட்டிருக்க வேண்டுமே” என்றான். அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்றுதானே அவர்கள் பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் யெகோவா முன்னிலையில் பலியிட்டார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட வேதனையான நிகழ்வுகள் எனக்கு நேரிட்டிருக்கிறதே. இன்று நான் பாவநிவாரண காணிக்கையைச் சாப்பிட்டிருந்தால் யெகோவா மகிழ்ச்சியடைந்திருப்பாரோ?” என்று கேட்டான். அந்தப் பதில் மோசேக்குத் திருப்தியைக் கொடுத்தது.

லேவியராகமம் 10:6-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவனுடைய மகன்களையும் நோக்கி: “நீங்கள் மரணமடையாமல் இருக்கவும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராமல் இருக்கவும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் உடைகளைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் யெகோவா கொளுத்தின இந்த நெருப்பிற்காகப் புலம்புவார்களாக. நீங்கள் சாகாமல் இருக்க ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; யெகோவாவுடைய அபிஷேகத்தைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள். யெகோவா ஆரோனை நோக்கி: நீயும் உன்னுடன் உன் மகன்களும் மரணமடையாமல் இருக்கவேண்டுமானால், ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைகிறபோது, திராட்சை ரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் உண்டாக்கும்படிக்கும், யெகோவா மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும்” என்றார். மோசே ஆரோனையும் மீதியாக இருந்த அவனுடைய மகன்களாகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: “நீங்கள் யெகோவாவுடைய தகனபலிகளில் மீதியான உணவுபலியை எடுத்து, பலிபீடத்தின் அருகில் புளிப்பில்லாததாக சாப்பிடுங்கள்; அது மகா பரிசுத்தமானது. அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய தகனபலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன். அசைவாட்டும் மார்புப்பகுதியையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் மகன்களும் மகள்களும் சுத்தமான இடத்திலே சாப்பிடுவீர்களாக; இஸ்ரவேல் மக்களுடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்புப்பகுதியையும் கொண்டுவருவார்கள்; அது யெகோவா கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தரமான கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” என்றான். பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது எரிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாக இருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்கள்மேல் அவன் கோபம்கொண்டு: பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே. அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டியதாக இருந்ததே என்றான். அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி சம்பவித்ததே; பாவநிவாரணபலியை இன்று நான் சாப்பிட்டேன் என்றால், அது யெகோவாவின் பார்வைக்கு ஏற்றதாக இருக்குமோ” என்றான். மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

லேவியராகமம் 10:6-20 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு மோசே ஆரோனின் வேறு இரு குமாரர்களான எலெயாசரிடமும், இத்தாமாரிடமும், “உங்கள் சோகத்தை வெளியே காண்பிக்கவோ, உங்கள் ஆடைகளை கிழிக்கவோ, உங்கள் தலை முடியை கலைக்கவோ வேண்டாம். அப்பொழுது நீங்கள் கொல்லப்படமாட்டீர்கள். கர்த்தர் நம் எல்லா ஜனங்கள் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உங்கள் உறவினர். எனவே அவர்கள் நாதாபும் அபியூவும் மரித்ததற்காக அழட்டும். ஆனால் நீங்கள் இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலை விட்டு கூட வெளியே போகக்கூடாது. நீங்கள் இதைவிட்டுப் போனால் மரித்துப்போவீர்கள். ஏனென்றால் கர்த்தரின் அபிஷேக எண்ணெய் உங்கள் மேல் உள்ளது” என்றான். ஆகவே ஆரோனும், எலெயாசரும், இத்தாமாரும், மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். பிறகு கர்த்தர் ஆரோனிடம், “நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை ரசத்தையோ அல்லது மதுவையோ அருந்திவிட்டு வரக்கூடாது. நீங்கள் அவற்றைக் குடித்தால் மரித்துப்போவீர்கள். இந்தச் சட்டமானது என்றென்றைக்கும் உங்கள் தலைமுறைகளுக்கெல்லாம் தொடரும். நீங்கள் பரிசுத்தமான பொருட்களுக்கும் பரிசுத்தமற்ற பொருட்களுக்கும், தீட்டுள்ள பொருட்களுக்கும், தீட்டில்லாத பொருட்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டினை உருவாக்க வேண்டும். கர்த்தர் தம் சட்டங்களை மோசேயிடம் கொடுத்தார். மோசே அந்த சட்டங்களை ஜனங்களிடம் கொடுத்தான். ஆரோனாகிய நீ ஜனங்களுக்கு அந்த சட்டங்களைக் கற்பிக்க வேண்டும்” என்றார். ஆரோனின் மற்ற இரண்டு குமாரர்களான எலெயாசரும், இத்தாமாரும் உயிரோடு இருந்தனர். மோசே ஆரோனிடமும் அவனது இரு குமாரர்களிடமும், “பலிக்காகக் கொண்டு வந்த பலியில் இன்னும் கொஞ்சம் தானியக் காணிக்கை மிஞ்சியுள்ளது. அதில் புளிப்பு எதுவும் சேர்க்காமல் பலிபீடத்தின் அருகில் இருந்து அதை உண்ண வேண்டும், ஏனென்றால், அக்காணிக்கையானது மிக பரிசுத்தமானதாகும். இது கர்த்தருக்காகச் செலுத்தப்பட்ட தகன பலியாகும். நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தின்படி இதன் ஒரு பகுதி உனக்கும் உன் குமாரர்களுக்கும் சொந்தமாகும். ஆனால் அவற்றைப் பரிசுத்தமான ஒரு இடத்தில் வைத்து உண்ண வேண்டும். “நீங்களும் உங்கள் குமாரர்களும் குமாரத்திகளும் அசைவாட்டும் பலியில் உள்ள மார்புக்கண்டத்தை உண்ண வேண்டும். நீங்கள் இதனைப் பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அவற்றைத் தீட்டில்லாத இடத்தில் வைத்து உண்ண வேண்டும். ஏனென்றால் இவை சமாதானப் பலியில் இருந்து பெறப்பட்டவை. இஸ்ரவேலின் ஜனங்கள் இதனை தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அந்த ஜனங்கள் அம்மிருகத்தின் ஒரு பாகத்தை உண்பார்கள். ஆனால் அதன் மார்புக்கண்டம் உங்களுக்கு உரியது. ஜனங்கள் தங்கள் மிருகங்களின் கொழுப்பைப் பலியின் ஒரு பாகமாகக் கொண்டு வந்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். அவர்கள் சமாதானப் பலிக்குரிய தொடையையும் அசைவாட்டும் பலிக்குரிய மார்புக்கண்டத்தையும் கொண்டு வர வேண்டும். அவை கர்த்தரின் சந்நிதானத்தில் அசைவாட்டப்படும். பின் அவை உங்களுக்கு உரிய பாகமாகக் கருதப்படும். கர்த்தர் சொன்னபடி பலியின் இப்பங்கானது என்றென்றைக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியதாகும்” என்றான். மோசே பாவப்பரிகார பலிக்காகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டைத் தேடினான். ஆனால் அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருந்தது. அதனால் மோசேக்கு ஆரோனின் குமாரர்கள் எலெயாசரிடமும், இத்தாமாரிடமும் மிகுந்த கோபம் ஏற்பட்டது. மோசே, “நீங்கள் அந்த வெள்ளாட்டை பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. ஏன் அதனை கர்த்தரின் சந்நிதானத்தில் வைத்து உண்ணாமற் போனீர்கள்? கர்த்தர் அதனை உங்களிடம், ஜனங்களின் குற்றங்களைப் போக்கி அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே கொடுத்துள்ளார். அந்த வெள்ளாட்டின் இரத்தமானது பரிசுத்தமான இடத்திற்குள் கொண்டுவரப்படவில்லையே. நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதனைப் பரிசுத்த இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும்!” என்றான். ஆனால் ஆரோன் மோசேயிடம், “இன்றைக்கு அவர்கள் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்தார்கள். ஆனால் எனக்கு இன்று என்ன ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்! பாவப்பரிகார பலிக்குரிய பாகத்தை நான் இன்று உண்டிருந்தால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எண்ணுகிறீரா?” என்றான். மோசே இவற்றைக் கேட்டதும் அமைதியாகிவிட்டான்.

லேவியராகமம் 10:6-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள். கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம் பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது. அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக்கட்டளை பெற்றிருக்கிறேன். அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான். பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு: பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்கு கொடுத்தாரே. அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான், அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான். மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.