லேவியராகமம் 10:1-5
லேவியராகமம் 10:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆரோனின் மகன்களான நாதாபும், அபியூவும் தங்கள் தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, நறுமணத்தூளை அதில் போட்டார்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைக்கு முரண்பாடாக, அங்கீகரிக்கப்படாத நெருப்பை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள். உடனே யெகோவாவின் முன்னிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து அவர்களை எரித்துப்போட்டது. அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் செத்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனிடம் சொன்னது: “ ‘என்னை நெருங்கி வருகிறவர்களிடையே நான் என்னைப் பரிசுத்தராகக் காண்பிப்பேன். எல்லா மக்களின் பார்வையிலும் நான் மகிமைப்படுவேன்’ என்று யெகோவா சொன்னபோது அவர் குறிப்பிட்டது இதுவே.” ஆரோனோ ஒன்றும் பேசாமல் இருந்தான். பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களான மீசயேலையும், எல்சாபானையும் அழைத்து, “இங்கே வாருங்கள்; உங்கள் சகோதரர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே பரிசுத்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள்” என்றான். மோசே உத்தரவிட்டபடியே அவர்கள் வந்து, இறந்தவர்களை அவர்களின் அங்கிகளுடன் தூக்கி, முகாமுக்கு வெளியே கொண்டுபோனார்கள்.
லேவியராகமம் 10:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் நெருப்பையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, யெகோவா தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நெருப்பை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது நெருப்பு யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களை எரித்துவிட்டது; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் மரணமடைந்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான். பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களாகிய மீசாயேலையும் எல்சாபானையும் அழைத்து: “நீங்கள் அருகில் வந்து, உங்கள் சகோதரர்களைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எடுத்து, முகாமிற்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றான். மோசே சொன்னபடி அவர்கள் அருகில் வந்து, அவர்களை அவர்கள் அணிந்திருந்த உடைகளோடும் எடுத்து முகாமிற்கு வெளியே கொண்டுபோனார்கள்.
லேவியராகமம் 10:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
பின் ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் பாவம் செய்தனர். ஒவ்வொருவனும் ஒரு நறுமண கலசத்தை எடுத்து, அதில் தேவன் அங்கீகரியாத நெருப்பைப் பயன்படுத்தி அதில் நறுமணப் பொருளைப் போட்டனர். மோசே கட்டளையிட்டுச் சொல்லியிருந்த நெருப்பை அவர்கள் பயன்படுத்தவில்லை. எனவே கர்த்தரின் சந்நிதியிலிருந்து நெருப்பு கிளம்பி நாதாபையும் அபியூவையும் அழித்தது. அவர்கள் கர்த்தரின் சந்நிதானத்திலேயே மரித்துப் போனார்கள். பிறகு மோசே ஆரோனிடம், “‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். ஆகையால் ஆரோன் தன் குமாரர்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆரோனின் சிறிய தந்தையான ஊசியேலுக்கு மிஷாயேல், எல்சாபான் என்று இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். மோசே அவர்களிடம், “பரிசுத்த இடத்தின் முற்பகுதிக்குப் போய் உங்கள் சகோதரர்களின் உடல்களை அங்கிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டு போங்கள்” என்றான். மிஷாயேலும் எல்சாபானும் மோசே சொன்னபடியே அவர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டு போனார்கள். நாதாப், அபியூவின் உடல்களில் ஆசாரியர்களுக்குரிய சிறப்பான உடைகள் இன்னும் இருந்தன.
லேவியராகமம் 10:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான். பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான். மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.