லேவியராகமம் 1:3-17

லேவியராகமம் 1:3-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி, அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன். குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன். அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

லேவியராகமம் 1:3-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும். அவன் அந்த தகன காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். யெகோவாவின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, சபைக்கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். பின்பு அந்தக் காணிக்கையைக் கொண்டுவந்தவன், தகன காணிக்கை மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்கவேண்டும். அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும். ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. “ ‘அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும். அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள். அவன் அதைத் துண்டுகளாக வெட்டவேண்டும். அந்தத் துண்டங்களை தலையும், கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் ஆசாரியர் அடுக்கவேண்டும். காணிக்கை கொண்டுவந்தவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர் அவற்றையெல்லாம் கொண்டுவந்து, பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. “ ‘யெகோவாவுக்கான தகன காணிக்கை பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப்புறாக் குஞ்சையோ செலுத்தவேண்டும். ஆசாரியர் அப்பறவையைப் பலிபீடத்திற்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிடவேண்டும். அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும். அதன்பின் ஆசாரியர் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதைப் பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மேல் போட்டு எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை, இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.

லேவியராகமம் 1:3-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து, தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி, அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக. அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. “அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக. குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. “அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன். அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு, அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

லேவியராகமம் 1:3-17 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஒருவன் தனக்குச் சொந்தமான மாடுகளில் ஒன்றைத் தகனபலியாகச் செலுத்த விரும்பினால் அது எவ்விதமான குறையுமற்ற காளையாக இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் ஆசாரிப்புக் கூடார வாசலுக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். அம்மிருகம் பலியிடப்படும்போது அவன் அதன் தலையில் தன் கைகளை வைக்க வேண்டும். அந்த மனிதன் பரிசுத்தம் அடைவதற்கான விலையாக கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். “அவன் அந்த இளம் காளையை கர்த்தருக்கு முன்பாகக் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் குமாரர்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின் மேலும், அதைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். அம்மிருகத்தின் தோலை வெட்டிய பிறகு ஆசாரியன் மிருகத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும். ஆரோனின் குமாரர்களாகிய ஆசாரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும். பின் அதன் கால்களையும் உட்பகுதிகளையும் தண்ணீரால் கழுவவேண்டும். அதன் அனைத்துப் பகுதிகளையும் பலிபீடத்தின் மேல் நெருப்பில் எரிக்க வேண்டும். இது நெருப்பாலான தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும். “ஒருவன் தன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையோ நெருப்பிலிட்டு தகன பலியிட விரும்பினால் அது ஆண் மிருகமாக இருக்க வேண்டும். அதில் எவ்விதக் குறைபாடும் இருக்கக் கூடாது. அதனை கர்த்தருக்கு முன்பு பலிபீடத்தின் வடக்குத் திசையில் வைத்துக் கொல்லவேண்டும். ஆரோனின் குமாரர்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும். பிறகு அம்மிருகத்தை ஆசாரியன் வெட்டித் துண்டாக்க வேண்டும். அவன் அந்தத் துண்டுகளை (தலை மற்றும் கொழுப்பு) பலிபீடத்திலுள்ள நெருப்பின் மேலுள்ள கட்டைகளின் மேல் வைக்க வேண்டும். அதன் கால்களையும், உட்பாகத்தையும் ஆசாரியர்கள் தண்ணீரால் கழுவ வேண்டும். பிறகு துண்டாக வெட்டப்பட்ட மிருகத்தின் எல்லா பாகங்களையும் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பால் செய்யப்படுகிற தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும். “எவராவது ஒரு பறவையை கர்த்தருக்குப் பலியிட விரும்பினால் புறாவையாவது, இளம் புறாக்குஞ்சையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசாரியன் அதனைப் பலிபீடத்திற்கு கொண்டு வந்து, அதன் தலையை கிள்ளி பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அப்பறவையின் இரத்தம் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த வேண்டும். ஆசாரியன் அப்பறவையின் இரைப்பையையும், முடிகளையும் அகற்றி பலிபீடத்தின் கிழக்குப் பக்கமாக எறிய வேண்டும். அங்கேதான் பலிபீடத்தின் சாம்பலைப் போடுவார்கள். ஆசாரியன் அதன் சிறகுகளை இரண்டாகப் பிளந்துவிடாமல் கவனமுடன் கிழிக்க வேண்டும். பிறகு அப்பறவையைப் பலிபீடத்தில் கட்டைகளின் மேல் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற தகன பலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.”