யூதா 1:4-6

யூதா 1:4-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்து இருக்கிறபடியினாலேயே நான் இப்படி எழுதுகிறேன். அவர்களுடைய அழிவு முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இறை பக்தியற்றவர்கள். அவர்கள் நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஒரே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார் என்பதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார்.

யூதா 1:4-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது. நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார். தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார்.

யூதா 1:4-6 பரிசுத்த பைபிள் (TAERV)

சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள். நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ளவற்றை நினைவுகூருவதற்கு உங்களுக்கு உதவ நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் எகிப்து நாட்டுக்கு வெளியே தம் மக்களை அழைத்து வந்ததன் மூலம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றியதை நினைவுகூருங்கள். பிற்காலத்தில் விசுவாசமற்ற எல்லா மக்களையும் கர்த்தர் அழித்தார். தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளாது தம் சொந்த இடத்திலிருந்து வெளியேறிய தேவதூதர்களைப் பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும், இதனால் அவர்களையெல்லாம் கர்த்தர் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் அறுக்கமுடியாத நிரந்தரமான சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். மிகப் பெரும் நாளில் நியாயந்தீர்க்கப்படுவதற்காக அவர் அவர்களை வைத்திருக்கிறார்.

யூதா 1:4-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.