யூதா 1:12-15

யூதா 1:12-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

யூதா 1:12-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவர்கள் உங்களுடன் அன்பின் விருந்துகளில் எந்தப் பயமுமின்றி கலந்துகொண்டு, அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் சுயநலனை மட்டுமே தேடுகிற மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் காற்றில் அடிபட்டுப்போகும் மழையற்ற மேகங்கள்; இவர்கள் பருவகாலத்திலும் கனிகொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டுமுறை செத்த மரங்கள். இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கு இவர்களைக்குறித்து இறைவாக்குரைத்தான்: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகிறார். அவர் உலக மக்கள் எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்க வருகிறார். இறை பக்தியற்றவர்கள் தீய வழிகளில் செய்த அநேக செயல்களுக்காகவும், இறை பக்தியற்றவர்கள் இறைவனுக்கெதிராகப் பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும், அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்காகவும் அவர் வருகிறார்.”

யூதா 1:12-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும், தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும், தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.

யூதா 1:12-15 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்கள் அன்பின் விருந்துகளில் உங்களோடு அச்சமின்றி விருந்துண்ணும் இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாறைகள்போல இருக்கிறார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மேய்ப்பர்களாவார்கள். அவர்கள் காற்றால் அடித்துச்செல்லப்படுகிற மழை பொழியாத மேகங்களைப் போன்றவர்கள். அவர்கள் அறுவடைக் காலத்தில் கனி கொடுக்காத மரங்களைப் போன்றவர்கள். எனவே பூமியில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இருமுறை மரணம் அடைகிறார்கள். அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆதாமின் ஏழாம் தலைமுறையினனான ஏனோக்கு இம்மக்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். “பாருங்கள், பல்லாயிரக்கணக்கான தம் தூய தேவதூதர்களோடு கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார். எல்லா மக்களையும் நியாயந்தீர்ப்பதற்காகவும், தம் தீய செயல்களாலும், பாவம் நிறைந்த இம்மக்கள் தேவனுக்கு எதிராகச் சொன்ன முரட்டுத்தனமான வார்த்தைகளாலும் தேவனை எதிர்த்தவர்களை தண்டிக்கவும் கர்த்தர் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினான்.