யோசுவா 9:1-18

யோசுவா 9:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஏவியரும், எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள். எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து, பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது. அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும், அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள். யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள். அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்று நாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள். சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

யோசுவா 9:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோர்தானுக்கு மேற்கேயிருந்த அரசர்கள் இச்செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இவர்கள் மலைநாட்டின் மேற்கேயுள்ள மலையடிவாரத்திலும், மத்திய தரைக்கடல் கரையோரம் முழுவதிலும் லெபனோன் வரையும் வாழ்ந்த ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய நாடுகளின் அரசர்கள். இந்த அரசர்கள் ஒன்றுசேர்ந்து யோசுவாவுக்கும், இஸ்ரயேலருக்கும் எதிராகப் போர் தொடுப்பதற்கென வந்தார்கள். ஆயினும் எரிகோ, ஆயிபட்டணங்களுக்கு யோசுவா செய்தவற்றைக் கிபியோனின் மக்கள் கேள்விப்பட்டபோது, கிபியோன் மக்கள் பிரதிநிதிகள்போல தந்திரமாக சென்றார்கள். அவர்கள் கந்தையான சாக்கு மூட்டைகளையும் கிழிந்து தைக்கப்பட்ட பழைய தோல் திராட்சைக் குடுவைகளையும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, தேய்ந்ததும், தைக்கப்பட்டதுமான பழைய காலணிகளையும், பழைய உடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்த பூசணம் பிடித்திருந்த அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர். இவ்வாறான கோலத்துடன் இக்குழுவினர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் சென்றனர். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும் சென்று, “நாங்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வருகிறோம். எனவே எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்” என்றனர். அதற்கு இஸ்ரயேல் மனிதர் அந்த ஏவியரிடம், “ஒருவேளை நீங்கள் எங்களுக்கு அருகில் வாழ்பவர்களாய் இருக்கக்கூடும். அப்படியானால் நாங்கள் உங்களோடு எப்படி உடன்படிக்கை செய்துகொள்ள முடியும்?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் அடிமைகள்” என்றனர். ஆனாலும் யோசுவா அவர்களிடம், “நீங்கள் யார்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் புகழின் நிமித்தம், உங்கள் அடியவர்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வந்திருக்கிறோம். ஏனெனில், அவர் எகிப்திலே செய்த செயல்கள் எல்லாவற்றைப்பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டோம். மேலும், அவர் யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள அஸ்தரோத்தில் ஆட்சி செய்த எமோரியரின் இரண்டு அரசர்களான, எஸ்போனின் அரசனாகிய சீகோனுக்கும், பாசானின் அரசனாகிய ஓகுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். எனவே எங்கள் சபைத்தலைவர்களும், எங்கள் தேசத்தில் வாழும் எல்லோரும் எங்களிடம், ‘உங்கள் பயணத்துக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு இஸ்ரயேலரிடம் போய், நாங்கள் உங்கள் அடிமைகளாயிருப்போம்; எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்கள். உங்களிடம் வருவதற்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, இந்த அப்பங்களைச் சுடச்சுடக் கட்டிக்கொண்டு வந்தோம். இப்பொழுதோ இவைகள் எவ்வளவாய்க் காய்ந்து பூசணம் பிடித்திருக்கின்றன என்று நீங்களே பாருங்கள். இந்தத் திராட்சை தோற்குடுவைகள் நாங்கள் நிரப்பியபோது புதிதாய் இருந்தன. ஆனால் இப்பொழுது எவ்வளவாக கிழிந்துவிட்டன என்று பாருங்கள். மிக நீண்ட பிரயாணத்தினால், எங்கள் உடைகளும் பாதணிகளும் பழசாய்ப்போய்விட்டன” என்றார்கள். இஸ்ரயேலர், அவர்களுடைய உணவுப்பொருளில் கொஞ்சம் எடுத்து ருசிபார்த்தார்கள். ஆனால் யெகோவாவிடம் அவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை. அதன்பின் யோசுவா அவர்களை அங்கு வாழவிடுவதென ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தான். மக்கள் சமுதாயத்தில் இஸ்ரயேலரின் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்று ஆணையிட்டு உறுதிசெய்தனர். இஸ்ரயேலர் கிபியோன் நகரத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மூன்றே நாட்களில், அவர்கள் தமக்கு அருகில் வசிக்கும் அயலகத்தாரெனக் கேள்விப்பட்டார்கள். எனவே மூன்றாம் நாள் இஸ்ரயேலர் புறப்பட்டு ஏவியரின் பட்டணங்களான கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யாரீம் என்னும் பட்டணங்களை அடைந்தார்கள். ஆயினும் மக்கள் சமுதாயத் தலைவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், இஸ்ரயேலர் அந்நகரங்களைத் தாக்கவில்லை. இதனால் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைவர்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.

யோசுவா 9:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோர்தான் நதிக்கு மேற்கு திசையிலுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான மத்திய தரை சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் யுத்தம்செய்ய ஒன்றாகக் கூடினார்கள். எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, ஒரு தந்திரமான யோசனைசெய்து, தங்களைப் தேச பிரதிநிதிகளைப் போலக்காண்பித்து, பழைய சாக்குப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சைரசத் தோல்பைகளையும் தங்களுடைய கழுதைகள்மேல் வைத்து, பழுதுபார்க்கப்பட்ட பழைய காலணிகளைத் தங்களுடைய கால்களில் அணிந்து, பழைய உடைகளை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பங்களெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாக இருந்தது. அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும், அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்கள்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள். யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள். அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள். சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.

யோசுவா 9:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

யோர்தான் நதியின் மேற்கிலுள்ள எல்லா ராஜாக்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டார்கள். அவர்கள் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரின் ராஜாக்கள் ஆவார்கள். அவர்கள் மலைகளிலும், சமவெளிகளிலும் வாழ்ந்தனர். லீபனோன் வரைக்குமுள்ள மத்தியதரைக் கடலோரமாக அவர்கள் வாழ்ந்தனர். இந்த ராஜாக்கள் ஒருமித்துக் கூடி, யோசுவாவோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் போரிடுவதற்குத் திட்டமிட்டனர். எரிகோவையும் ஆயீயையும் யோசுவா தோற்கடித்த வகையை கிபியோனின் ஜனங்கள் கேள்விப்பட்டிருந்தனர். அவர்கள் இஸ்ரவேலரை ஏமாற்ற முடிவெடுத்தனர். இதுவே அவர்கள் திட்டம்: அவர்கள் நைந்துபோன பழைய திராட்சைரசத் தோல் பைகளைச் சேகரித்தனர். அவர்கள் கழுதைகளின் முதுகில் அவற்றை ஏற்றினார்கள். பழைய சாக்குகளை அந்தக் கழுதைகளின் மேல் ஏற்றி, வெகுதுரத்திலிருந்து பயணம் செய்து வருவோரைப் போல் தோற்றம் அளித்தனர். அவர்கள் பழைய செருப்புகளை அணிந்து, பழைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, உலர்ந்து, பூசணம் பூத்திருந்த பழைய அப்பங்களையும் எடுத்துக்கொண்டனர். தொலைவான இடத்திலிருந்து பயணம் செய்து வந்தவர்களைப் போன்றே அவர்கள் தோன்றினர். பின்னர் அம்மனிதர்கள் கில்காலுக்கு அருகே இருந்த இஸ்ரவேலரின் முகாமிற்குச் சென்றனர். அம்மனிதர்கள் யோசுவா மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களிடமும் சென்று, “நாங்கள் மிகவும் தூரத்திலுள்ள ஒரு தேசத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம். உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறோம்” என்றனர். இஸ்ரவேலர் அந்த ஏவியரிடம், “நீங்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், அருகே எங்கேயேனும் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வரைக்கும் உங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்யமாட்டோம்” என்றனர். ஏவியர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உமது பணியாட்கள்” என்றனர். ஆனால் யோசுவா, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அந்த ஆட்கள் அதற்குப் பதிலாக, “நாங்கள் உங்கள் பணியாட்கள். நாங்கள் தூரத்திலுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய மிகுந்த வல்லமையை அறிந்ததால் இங்கு வந்தோம். அவர் செய்த காரியங்களை அறிந்துள்ளோம். அவர் எகிப்தில் செய்தவற்றையும் அறிந்தோம். யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள எமோரியரின் ராஜாக்களான அஸ்தரோத் தேசத்திலுள்ள எஸ்போனின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவர் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டோம். எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள். இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தியுங்கள்.’ அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள். “எங்கள் அப்பத்தைப் பாருங்கள்! நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு உங்களிடம் வரும்படி பயணம் செய்யத் துவங்கியபோது அது சூடாகவும், புதியதாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலர்ந்து பழையதாகப் போய்விட்டது. எங்கள் திராட்சைரசப் பைகளைப் பாருங்கள்! நாங்கள் வீட்டிலிருந்து வந்தபோது அவை புதிதாகவும் திராட்சைரசம் நிரப்பப்பட்டவையாகவும் இருந்தன. இப்போது அவை கிழிந்து, பழையனவாகிவிட்டன. எங்கள் உடைகளையும், பாதரட்சைகளையும் பாருங்கள்! நாங்கள் அணிந்து கொண்டிருப்பவை பயணத்தால் கிழிந்துபோயிருப்பதைக் காண்பீர்கள்” என்றனர். அந்த ஆட்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை அறிய இஸ்ரவேலர் விரும்பினர். எனவே அவர்கள் அப்பத்தை ருசி பார்த்தனர். ஆனால் அவர்கள் செய்யவேண்டியது என்னவென்று கர்த்தரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. யோசுவா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டான். அவர்களை வாழவிடுவதாக ஒப்பந்தம் செய்தான். யோசுவாவின் இந்த வாக்குறுதிக்கு இஸ்ரவேலின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த ஆட்கள் தங்கள் முகாமிற்கு வெகு அருகாமையில் வாழ்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர். எனவே இஸ்ரவேலர் அம்மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் மூன்றாம் நாள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத் யெயாரீம் என்ற நகரங்களை வந்தடைந்தனர். ஆனால் இஸ்ரவேல் படையினர் அந்நகரங்களை எதிர்த்துப் போர் செய்யவில்லை. அந்த ஜனங்களோடு அவர்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். ஏனெனில் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு, முன்பு அவர்கள் ஒரு வாக்குறுதியைச் செய்திருந்தனர். ஒப்பந்தம் செய்த தலைவர்களை எதிர்த்து ஜனங்கள் குற்றம் சாட்டினார்கள்.