யோசுவா 8:1-17

யோசுவா 8:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் யெகோவா யோசுவாவிடம், “நீ பயப்படாதே; மனந்தளர்ந்து விடாதே. முழு இராணுவத்துடனும் சென்று ஆயிபட்டணத்தைத் தாக்கு. ஆயி அரசனையும், அவன் மக்களையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் நான் உன் கைகளில் கொடுத்துவிட்டேன். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்யுங்கள். ஆனால் சூறையாடி கைப்பற்றும் பொருட்களையும், ஆடுமாடுகளையும் நீங்கள் உங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம். பட்டணத்தின் பின்புறத்தில் பதுங்கியிருந்து தாக்குவதற்கென எல்லா ஆயத்தமும் செய்” என்றார். அவ்வாறே யோசுவா முழு இராணுவத்துடனும் ஆயிபட்டணத்தைத் தாக்குவதற்குப் புறப்பட்டான். யோசுவா தங்களுடைய வீரருள் மிகச்சிறந்த முப்பதாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து அன்று இரவில் அனுப்பினான். அவன் அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நகருக்குப் பின்னே பதுங்கியிருந்து பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமாய் இருங்கள். அங்கிருந்து அதிக தூரம் போகவேண்டாம். நீங்கள் எல்லோரும் விழிப்புடன் இருங்கள். நானும் என்னுடன் இருக்கும் அனைவரும் பட்டணத்தை நோக்கி முன்னேறுவோம். எம்மை எதிர்த்து ஆயி மனிதர் முன்போலவே வெளியே வருகிறபோது, நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவோம். இஸ்ரயேலர் முன்போலவே நமக்குப் பயந்து ஓடுகிறார்களென நினைத்து நம்மைப் பின்தொடருவார்கள். நாங்களோ அவர்களை இவ்விதமாய் ஏமாற்றி பட்டணத்திற்கு வெளியே கொண்டுவருவோம். எனவே நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறபோது, நீங்கள் உங்கள் மறைவிடத்திலிருந்து எழுந்து, பட்டணத்தை தாக்கிக் கைப்பற்றுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அதை உங்கள் கைகளில் கொடுப்பார். நீங்கள் பட்டணத்தை கைப்பற்றியவுடன், அதற்கு நெருப்பு வையுங்கள். யெகோவாவின் கட்டளைப்படியே செய்யுங்கள். கவனமாய்ச் செய்யுங்கள். இதுவே எனது உத்தரவு” என்றான். யோசுவா அவர்களை அனுப்பினான். அவர்கள் சென்று ஆயிபட்டணத்திற்கு மேற்கே, ஆயிக்கும் பெத்தேலுக்கும் இடையில் பதுங்கியிருந்தார்கள். யோசுவாவோ முகாமில் மக்களுடன் அன்று இரவைக் கழித்தான். மறுநாள் அதிகாலையில் யோசுவா தனது மனிதர்களை ஒன்றுகூட்டினான். அவனும் இஸ்ரயேலரின் தலைவர்களும் அவர்களுக்கு முன்னே அணிவகுத்து, ஆயிபட்டணத்தை நோக்கிச்சென்றனர். அவனோடிருந்த இராணுவவீரர் அனைவரும் அணிவகுத்துச்சென்று, பட்டணத்தை அணுகி, அதற்கு எதிரே வந்து சேர்ந்தார்கள். ஆயிக்கு வடக்கே அவர்கள் முகாமிட்டார்கள். ஆயிக்கும் அவர்களின் முகாமுக்குமிடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. யோசுவா ஐயாயிரம் இராணுவவீரரை ஆயிபட்டணத்திற்கு மேற்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில், மறைந்திருந்து தாக்குவதற்கென அனுப்பி வைத்திருந்தான். எல்லா இராணுவவீரரையும் தங்கள் நிலைகளில் ஆயத்தமாய் இருக்கச்செய்தான். ஆகவே முகாமில் இருந்தவர்கள் நகருக்கு வடக்கேயும், மறைந்திருந்து தாக்கும் படையினர் நகருக்கு மேற்கேயும் இருந்தனர். அன்றிரவு யோசுவா பள்ளத்தாக்குக்குப் போனான். ஆயி அரசன், இதைக் கண்டவுடன் நகரிலுள்ள எல்லா ஆண்களுடனும் அதிகாலையில் இஸ்ரயேலரைப் போரில் எதிர்கொள்ள விரைந்து வந்தான். அவன் இஸ்ரயேலரை அரபாவுக்கு எதிராக உள்ள இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் தனக்கு எதிராக இஸ்ரயேலர்கள் பட்டணத்திற்குப் பின்னால் தாக்குவதற்கு மறைந்திருப்பதை அவன் அறியாதிருந்தான். யோசுவாவும் எல்லா இஸ்ரயேலரும் அவர்கள் தங்களைத் துரத்த இடங்கொடுத்துப் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆயிபட்டணத்திலுள்ள எல்லா ஆண்களும் அவர்களைத் துரத்துவதற்கு அழைக்கப்படவே அவர்கள் எல்லோரும் யோசுவாவை பின்தொடர்ந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் பட்டணத்திலிருந்து வெளியேற ஏமாற்றப்பட்டார்கள். ஆயிபட்டணத்திலோ அல்லது பெத்தேலிலோ இஸ்ரயேலரைத் துரத்தாமலிருந்த மனிதன் ஒருவனும் இல்லை. அவர்கள் ஆயிபட்டணத்தைக் காவலின்றி விட்டுவிட்டு, எல்லோரும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்தார்கள்.

யோசுவா 8:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த மக்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயீ பட்டணம்வரைக்கும் போ, இதோ, ஆயீயின் ராஜாவையும். அவனுடைய மக்களையும் அவனுடைய பட்டணத்தையும் அவனுடைய நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயீக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்டப் பொருட்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்திற்குப் பின்புறத்திலே இரகசியப்படையை வை என்றார். அப்பொழுது ஆயீயின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி, அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள். நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம். அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார். நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; யெகோவாவுடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி, அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே, ஆயீக்கு மேற்கில் ஒளிந்திருந்தார்கள்; யோசுவா அன்று இரவு மக்களுடன் தங்கினான். அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயீயின் மேல் படையெடுத்தான். அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயீக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப்படையாக வைத்தான். பட்டணத்திற்கு வடக்கே இருந்த எல்லா சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே ஒளிந்திருக்கிறவர்களையும் ஒழுங்குசெய்தபின்பு, யோசுவா அன்று இரவு பள்ளத்தாக்கிற்குப் போயிருந்தான். ஆயீயின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப்படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான். யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள். அப்பொழுது பட்டணத்திற்குள் இருந்த மக்கள் எல்லோரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். ஆயீயிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

யோசுவா 8:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் ராஜாவை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். எரிகோவுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் ராஜாவுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார். யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார். “கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான். யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான். மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர். யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான். யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான். இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் ராஜாவும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் ராஜா நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை. யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர். நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர். ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.

யோசுவா 8:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும். அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார். அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி, அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள். நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். அப்பொழுது அவர்கள்; முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம். அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார். நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி, அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான். அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான். அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான். பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம் பண்ணினபின்பு, யோசுவா அன்று இராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான். ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான். யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள். அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டு அப்புறப்பட்டார்கள். ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்