யோசுவா 6:6-15

யோசுவா 6:6-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து, “யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதற்கு முன்னே ஏழு ஆசாரியர்களை எக்காளத்துடன் போகும்படி செய்யுங்கள்” எனச் சொன்னான். பின்பு மக்களிடம் அவன், “இப்பொழுது நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணிவகுத்து பட்டணத்தைச் சுற்றிவாருங்கள்” என உத்தரவிட்டான். யோசுவா மக்களிடம் பேசி முடிந்ததும், ஏழு எக்காளங்களைக் கொண்டுசென்ற ஏழு ஆசாரியர்கள், யெகோவாவுக்குமுன் எக்காளங்களை ஊதிக்கொண்டு முன்னால் சென்றனர். அவர்களின் பின்னே யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி சென்றது. எக்காளம் ஊதுகின்ற ஆசாரியர்களின் முன் ஆயுதம் தாங்கிய காவலர் அணிவகுத்துச் சென்றனர். பின்னணியில் உள்ள காவலர் பெட்டிக்கு பின்னே சென்றனர். அவ்வேளையிலெல்லாம் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. யோசுவா மக்களிடம், “நான் உங்களைச் சத்தமிடச் சொல்லும் நாள்வரை நீங்கள் போர்முழக்கமோ, கூக்குரலோ எழுப்பவேண்டாம். ஒரு வார்த்தையும் பேசவும்வேண்டாம். நான் கட்டளையிட்டதும் கூக்குரல் எழுப்புங்கள்” என சொல்லியிருந்தான். யெகோவாவின் பெட்டியை ஒருமுறை பட்டணத்தைச் சுற்றிவரச் செய்தான். அதன்பின் மக்கள் முகாமிற்குத் திரும்பிவந்து அவ்விரவைக் கழித்தார்கள். யோசுவா மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தான். ஆசாரியர்கள் திரும்பவும் யெகோவாவின் பெட்டியைத் தூக்கினார்கள். ஏழு எக்காளங்களுடன் சென்ற ஏழு ஆசாரியரும் யெகோவாவின் பெட்டிக்கு முன்னே எக்காளங்களை ஊதிக்கொண்டு அணிவகுத்துச் சென்றனர். ஆயுதம் தாங்கியவர்கள் அவர்களுக்கு முன்னே சென்றனர். பின்னணிக்காவலர் யெகோவாவின் பெட்டிக்குப் பின்சென்றனர். அவ்வேளையில் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. இவ்வாறாக இரண்டாம் நாளும் அவர்கள் பட்டணத்தைச்சுற்றி ஒருமுறை அணிவகுத்துச் சென்றபின் முகாமுக்குத் திரும்பினார்கள். இவ்வாறு ஆறுநாட்கள் செய்தார்கள். ஏழாம்நாள் பொழுது விடியும் வேளையில், அவர்கள் எழுந்து முன்போலவே பட்டணத்தைச் சுற்றிவந்தனர். ஆனால் அன்றுமட்டும் அவர்கள் ஏழுமுறை பட்டணத்தைச் சுற்றினார்கள்.

யோசுவா 6:6-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் யெகோவாவின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான். யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது. எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள். யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். அப்படியே யெகோவாவின் பெட்டியைப் பட்டணத்தைச் சுற்றி ஒருமுறை சுற்றிவரச் செய்தான்; அவர்கள் திரும்பப் முகாமிற்கு வந்து, அங்கே இரவுதங்கினார்கள். யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, யெகோவாவின் பெட்டிக்குப் பின்னே சென்றது. இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருமுறை சுற்றிவந்து, முகாமிற்குத் திரும்பினார்கள்; இவ்விதமாக ஆறுநாட்களும் செய்தார்கள். ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்.

யோசுவா 6:6-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான். பின் யோசுவா ஜனங்களிடம், “இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள்! நகரைச் சுற்றிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக ஆயுதமேந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்” என்றான். யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள். போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான். நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர். மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர். ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள். எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர். ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர்.

யோசுவா 6:6-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான். யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது. எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின் சென்றது. யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள். யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது. இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள். ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்; அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.