யோசுவா 6:20-25
யோசுவா 6:20-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எக்காளங்கள் தொனித்தபோது மக்கள் சத்தமிட்டனர், எக்காளத் தொனியுடன் மக்கள் பெரும் சத்தமிடும்போது, பட்டணத்தின் சுற்றுமதில்கள் இடிந்து விழுந்தன. அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்கு நேராக உள்ளே ஏறி பட்டணத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் எரிகோ பட்டணத்தை யெகோவாவுக்கென அழிக்கப்படுவதற்காக ஒப்புக்கொடுத்தார்கள். அப்பட்டணத்தில் வாழ்ந்த உயிருள்ள அனைத்தையும் வாளால் வெட்டி அழித்தார்கள். ஆண்கள், பெண்கள், பெரியோர், சிறியோர் மற்றும் கால்நடைகள், செம்மறியாடுகள், கழுதைகள் உட்பட யாவும் அழிக்கப்பட்டன. அந்த நாட்டை வேவுபார்த்த அந்த இருவரிடமும் யோசுவா, “நீங்கள் ராகாப் என்னும் வேசியின் வீட்டுக்குள் போய் நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அவளையும், அவளுக்குரியவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே ஒற்றர்களான அந்த வாலிபர்கள் ராகாபின் வீட்டினுள் சென்று, அவளையும் அவளது தாய் தகப்பனையும், சகோதரரையும் அவளுக்குரிய அனைவரையும் வெளியே கொண்டுவந்தார்கள். அவளது முழு குடும்பத்தாரையும் அவர்கள் வெளியே கொண்டுவந்து இஸ்ரயேலரின் முகாமுக்கு வெளியே ஒரு இடத்தில் தங்கவைத்தார்கள். பின்னர் இஸ்ரயேலர்கள் பட்டணம் முழுவதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் எரித்துப்போட்டார்கள். ஆனாலும் வெள்ளியையும், தங்கத்தையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களையும் எடுத்து யெகோவாவின் வீட்டிலுள்ள களஞ்சியத்தில் வைத்தார்கள். யோசுவா வேசி ராகாபுடன் அவளது குடும்பத்தையும், அவளுக்குரிய அனைவரையும் தப்பவிட்டான். ஏனெனில் யோசுவா எரிகோவுக்கு அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள். அவள் இந்நாள்வரை இஸ்ரயேலர் மத்தியில் வாழ்கின்றாள்.
யோசுவா 6:20-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து, பட்டணத்திலிருந்த ஆண்களையும் பெண்களையும் வாலிபர்களையும் வயதானவர்களையும் ஆடுமாடுகளையும் கழுதைகள் அனைத்தையும் கூரான பட்டயத்தினால் அழித்துப்போட்டார்கள். யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள். பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் யெகோவாவின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள்.
யோசுவா 6:20-25 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர். அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர். யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்” என்றான். அவ்விதமே அவ்விருவரும் அவளுடைய வீட்டிற்குள் சென்று ராகாபை அழைத்து வந்தனர். அவளது தந்தை, தாய், சகோதரர், அவள் குடும்பத்தினர், அவளோடிருந்த ஜனங்கள் எல்லோரையும் வெளியே அழைத்து வந்து, இஸ்ரவேலரின் முகாமிற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை வைத்தனர். பின் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர். வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு ஆகியவற்றாலான பொருட்களைத் தவிர பிறவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். அப்பொருட்களை மட்டும் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்ந்தனர். ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள்.
யோசுவா 6:20-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து, பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள். யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும் அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதரர்களையும், அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.