யோசுவா 6:12-27

யோசுவா 6:12-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசுவா மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தான். ஆசாரியர்கள் திரும்பவும் யெகோவாவின் பெட்டியைத் தூக்கினார்கள். ஏழு எக்காளங்களுடன் சென்ற ஏழு ஆசாரியரும் யெகோவாவின் பெட்டிக்கு முன்னே எக்காளங்களை ஊதிக்கொண்டு அணிவகுத்துச் சென்றனர். ஆயுதம் தாங்கியவர்கள் அவர்களுக்கு முன்னே சென்றனர். பின்னணிக்காவலர் யெகோவாவின் பெட்டிக்குப் பின்சென்றனர். அவ்வேளையில் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. இவ்வாறாக இரண்டாம் நாளும் அவர்கள் பட்டணத்தைச்சுற்றி ஒருமுறை அணிவகுத்துச் சென்றபின் முகாமுக்குத் திரும்பினார்கள். இவ்வாறு ஆறுநாட்கள் செய்தார்கள். ஏழாம்நாள் பொழுது விடியும் வேளையில், அவர்கள் எழுந்து முன்போலவே பட்டணத்தைச் சுற்றிவந்தனர். ஆனால் அன்றுமட்டும் அவர்கள் ஏழுமுறை பட்டணத்தைச் சுற்றினார்கள். இப்படியாக ஏழாம்முறை சுற்றிவருகையில் ஆசாரியர்கள் எக்காளத் தொனியை எழுப்பும்போது யோசுவா மக்களிடம், “ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுங்கள்! ஏனெனில் இந்தப் பட்டணத்தை யெகோவா உங்களுக்குத் தந்துவிட்டார். ஆனாலும் இப்பட்டணமும் அதிலுள்ள யாவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியவையாகும். நீங்கள் ராகாப் என்னும் வேசியையும், அவளுடன் வீட்டிலிருப்பவர்களையும் மாத்திரம் தப்பவிட்டு விடுங்கள். ஏனெனில் நாம் அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள். ஆனாலும் யெகோவாவுக்கென்று ஒதுக்கப்பட்ட எதையும் நீங்கள் தொடாதிருங்கள். அப்படி எதையாவது எடுப்பதினால் உங்கள்மீது அழிவைக் கொண்டுவராதீர்கள். இல்லையெனில் இஸ்ரயேலின் முகாமை அழிவுக்குட்படுத்தி அதன்மேல் துன்பத்தைக்கொண்டுவருவீர்கள். எல்லா வெள்ளியும், தங்கமும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களும் யெகோவாவுக்கென ஒதுக்கப்பட்டவை. அவை யெகோவாவின் களஞ்சியத்தில் சேர்க்கப்படவேண்டும்” எனக் கட்டளையிட்டான். எக்காளங்கள் தொனித்தபோது மக்கள் சத்தமிட்டனர், எக்காளத் தொனியுடன் மக்கள் பெரும் சத்தமிடும்போது, பட்டணத்தின் சுற்றுமதில்கள் இடிந்து விழுந்தன. அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்கு நேராக உள்ளே ஏறி பட்டணத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் எரிகோ பட்டணத்தை யெகோவாவுக்கென அழிக்கப்படுவதற்காக ஒப்புக்கொடுத்தார்கள். அப்பட்டணத்தில் வாழ்ந்த உயிருள்ள அனைத்தையும் வாளால் வெட்டி அழித்தார்கள். ஆண்கள், பெண்கள், பெரியோர், சிறியோர் மற்றும் கால்நடைகள், செம்மறியாடுகள், கழுதைகள் உட்பட யாவும் அழிக்கப்பட்டன. அந்த நாட்டை வேவுபார்த்த அந்த இருவரிடமும் யோசுவா, “நீங்கள் ராகாப் என்னும் வேசியின் வீட்டுக்குள் போய் நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அவளையும், அவளுக்குரியவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே ஒற்றர்களான அந்த வாலிபர்கள் ராகாபின் வீட்டினுள் சென்று, அவளையும் அவளது தாய் தகப்பனையும், சகோதரரையும் அவளுக்குரிய அனைவரையும் வெளியே கொண்டுவந்தார்கள். அவளது முழு குடும்பத்தாரையும் அவர்கள் வெளியே கொண்டுவந்து இஸ்ரயேலரின் முகாமுக்கு வெளியே ஒரு இடத்தில் தங்கவைத்தார்கள். பின்னர் இஸ்ரயேலர்கள் பட்டணம் முழுவதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் எரித்துப்போட்டார்கள். ஆனாலும் வெள்ளியையும், தங்கத்தையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களையும் எடுத்து யெகோவாவின் வீட்டிலுள்ள களஞ்சியத்தில் வைத்தார்கள். யோசுவா வேசி ராகாபுடன் அவளது குடும்பத்தையும், அவளுக்குரிய அனைவரையும் தப்பவிட்டான். ஏனெனில் யோசுவா எரிகோவுக்கு அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள். அவள் இந்நாள்வரை இஸ்ரயேலர் மத்தியில் வாழ்கின்றாள். அவ்வேளையில் யோசுவா ஆணையிட்டுச் சொன்னதாவது: “இந்த எரிகோ பட்டணத்தை மீண்டும் கட்டுவதற்குப் பொறுப்பெடுப்பவன் யெகோவாவுக்கு முன்பாக சாபத்திற்குள்ளாவான். “அவன் தன் முதற்பேறான மகனை இழந்தே, அதன் அஸ்திபாரத்தை இடுவான். தன் கடைசி மகனை இழந்தே, அதன் வாசலை அமைப்பான்.” யெகோவா யோசுவாவுடன் இருந்தார்; அவன் புகழ் நாடு முழுவதும் பரவிற்று.

யோசுவா 6:12-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, யெகோவாவின் பெட்டிக்குப் பின்னே சென்றது. இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருமுறை சுற்றிவந்து, முகாமிற்குத் திரும்பினார்கள்; இவ்விதமாக ஆறுநாட்களும் செய்தார்கள். ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள். ஏழாவதுமுறை ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதும்போது, யோசுவா மக்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் யெகோவாவுக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும். சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள். அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் யெகோவாவின் பொக்கிஷத்தில் சேரும் என்றான். எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து, பட்டணத்திலிருந்த ஆண்களையும் பெண்களையும் வாலிபர்களையும் வயதானவர்களையும் ஆடுமாடுகளையும் கழுதைகள் அனைத்தையும் கூரான பட்டயத்தினால் அழித்துப்போட்டார்கள். யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள். பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் யெகோவாவின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள். அந்தக் காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டுவதற்காக எழும்பும் மனிதன் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருப்பான்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கூறினான். இந்தவிதமாகக் யெகோவா யோசுவாவோடு இருந்தார்; அவனுடைய புகழ் தேசமெல்லாம் பரவியது.

யோசுவா 6:12-27 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர். ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள். எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர். ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர். ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்! நகரமும் அதிலுள்ளவை அனைத்தும் கர்த்தருக்குரியவை. ராகாப் என்னும் வேசியும் அவள் வீட்டினரும் மட்டுமே உயிரோடிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனென்றால் ராகாப் இரண்டு ஒற்றர்களுக்கும் உதவினாள். எல்லாவற்றையும் நாம் அழிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். எந்தப் பொருட்களையும் எடுக்காதீர்கள். அவற்றை எடுத்து நமது முகாமிற்குக்கொண்டு வந்தால் நீங்கள் அழிக்கப்படுவதுடன், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லலோருக்கும் தொல்லையை வரவழைப்பீர்கள். எல்லா வெள்ளியும், பொன்னும், வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கர்த்தருக்குரியவை. அப்பொருட்கள் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான். ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர். அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர். யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்” என்றான். அவ்விதமே அவ்விருவரும் அவளுடைய வீட்டிற்குள் சென்று ராகாபை அழைத்து வந்தனர். அவளது தந்தை, தாய், சகோதரர், அவள் குடும்பத்தினர், அவளோடிருந்த ஜனங்கள் எல்லோரையும் வெளியே அழைத்து வந்து, இஸ்ரவேலரின் முகாமிற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை வைத்தனர். பின் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர். வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு ஆகியவற்றாலான பொருட்களைத் தவிர பிறவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். அப்பொருட்களை மட்டும் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்ந்தனர். ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள். அப்போது: “எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும் கர்த்தரால் அழிவைக் காண்பான். இந்த நகரின் அஸ்திபாரத்தை இடுபவன், தன்னுடைய முதலாவதாகப் பிறந்த குமாரனை இழப்பான். நகரவாயிலை அமைப்பவன் தனது கடைசி குமாரனை இழப்பான்” என்ற சாப அறிவிப்பை யோசுவா வெளியிட்டான். கர்த்தர் யோசுவாவோடிருந்தார். நாடு முழுவதும் யோசுவாவின் புகழ் பரவியது.

யோசுவா 6:12-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது. இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள். ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்; அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள். ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் மாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள். சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான். எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து, பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள். யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும் அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதரர்களையும், அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள். அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான். இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.