யோசுவா 4:1-7

யோசுவா 4:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

முழு இஸ்ரயேல் நாடும் யோர்தானைக் கடந்ததும் யெகோவா யோசுவாவிடம், “மக்களிலிருந்து கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்துகொள். நீ அவர்களிடம் யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்கள் நின்ற அதே இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து, அவற்றை உங்களுடன் சுமந்துகொண்டுபோய், நீங்கள் இன்றிரவு தங்கும் இடத்தில் வையுங்கள் என்று சொல்” என்றார். எனவே யோசுவா இஸ்ரயேலரிலிருந்து கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகத் தெரிந்துகொண்டு பன்னிரண்டு பேரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் யோர்தானின் நடுவே போங்கள். இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்துத் தோளில் சுமந்துகொண்டு வரவேண்டும். இந்தக் கற்கள் ஒரு அடையாளமாக உங்கள் மத்தியில் இருக்கும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ எனக் கேட்கும்போது, நீங்கள் அவர்களிடம், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைப்பெட்டி யோர்தானைக் கடந்தபோது, யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டதன் நினைவுச்சின்னமாக இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றென்றைக்கும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றான்.

யோசுவா 4:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்கள் எல்லோரும் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, யெகோவா யோசுவாவை நோக்கி: நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, இங்கே யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாக நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் இடத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் மக்களில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தான் நதியின் நடுவில் உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாக இருக்கும்படிக்கு, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக, உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோங்கள். நாளை இந்தக் கற்கள் என்னவென்று உங்களுடைய பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள்: யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தான் நதியைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் மக்களுக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

யோசுவா 4:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்ததும் கர்த்தர் யோசுவாவை நோக்கி, “பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடு. ஆசாரியர்கள் நின்ற இடத்தில் நதியினுள்ளே தேடி அங்கிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து வருமாறு கூறு. இன்றிரவு தங்குமிடத்தில் அந்தப் பன்னிரண்டு கற்களையும் வை” என்றார். எனவே யோசுவா ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். பின் அவன் பன்னிரண்டு பேரையும் ஒன்றுகூட்டி, அம்மனிதரை நோக்கி, “நதியில் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த பெட்டியிருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். அக்கல்லை உங்கள் தோள்களில் சுமந்து வாருங்கள். இக்கற்கள் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகள், ‘இந்தக் கற்கள் எதற்காக?’ என்று உங்களிடம் கேட்கும்போது, யோர்தான் நதியின் தண்ணீரை கர்த்தர் ஓடாமல் நிறுத்தியதை அவர்களுக்குக் கூறுவீர்கள். கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டி நதியைக் கடந்தபோது, தண்ணீர் அசையாமல் நின்றது. இந்நிகழ்ச்சியை என்றென்றைக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் நினைவுகூருவதற்கு இக்கற்கள் உதவும்” என்றார்.

யோசுவா 4:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள். நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.