யோசுவா 4:1-24

யோசுவா 4:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

முழு இஸ்ரயேல் நாடும் யோர்தானைக் கடந்ததும் யெகோவா யோசுவாவிடம், “மக்களிலிருந்து கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்துகொள். நீ அவர்களிடம் யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்கள் நின்ற அதே இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து, அவற்றை உங்களுடன் சுமந்துகொண்டுபோய், நீங்கள் இன்றிரவு தங்கும் இடத்தில் வையுங்கள் என்று சொல்” என்றார். எனவே யோசுவா இஸ்ரயேலரிலிருந்து கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகத் தெரிந்துகொண்டு பன்னிரண்டு பேரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் யோர்தானின் நடுவே போங்கள். இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்துத் தோளில் சுமந்துகொண்டு வரவேண்டும். இந்தக் கற்கள் ஒரு அடையாளமாக உங்கள் மத்தியில் இருக்கும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ எனக் கேட்கும்போது, நீங்கள் அவர்களிடம், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைப்பெட்டி யோர்தானைக் கடந்தபோது, யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டதன் நினைவுச்சின்னமாக இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றென்றைக்கும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றான். யோசுவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா யோசுவாவிற்குச் சொன்னபடியே, இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பன்னிரண்டு கற்களை யோர்தான் நடுவிலிருந்து எடுத்தார்கள். அவற்றைச் சுமந்துகொண்டுபோய் முகாமிட்டிருந்த இடத்திலே வைத்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த ஆசாரியர்கள் நின்ற இடமான யோர்தானின் நடுப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பன்னிரண்டு கற்களையும் யோசுவா ஒன்றாய் குவித்து நிறுத்திவைத்தான். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் யோர்தானின் நடுவில் நின்றுகொண்டிருந்தார்கள். மோசே யோசுவாவுக்கு அறிவுறுத்தியிருந்தபடியே, யெகோவாவினால் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் மக்கள் செய்து முடிக்கும்வரை அப்படியே நின்றார்கள். மோசே யோசுவாவுக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யாவும் செய்யப்பட்டன. மக்கள் எல்லோரும் விரைவாக நதியைக் கடந்துபோனார்கள். இவ்வாறு அவர்கள் எல்லோரும் நதியைக் கடந்து சென்றவுடன், மக்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியுடன் மறுகரைக்கு வந்தனர். இஸ்ரயேலருக்கு முன்னே ரூபன், காத், மனாசே கோத்திரத்தின் அரைப் பகுதியினரான எல்லா மனிதரும் ஆயுதம் தரித்தவர்களாகக் கடந்து சென்றார்கள். இவ்வாறே மோசே இவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தான். அன்று யுத்த ஆயுதம் தரித்த ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர், யெகோவா முன்பாக யுத்தம் செய்வதற்காக எரிகோவின் சமவெளிக்குக் கடந்துசென்றனர். அந்நாளில் யெகோவா இஸ்ரயேலர் எல்லோருடைய பார்வையிலும் யோசுவாவை மேன்மைப்படுத்தினார்; மக்கள் மோசேயைக் கனம்பண்ணியதுபோல யோசுவாவையும் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் கனம்பண்ணினார்கள். யெகோவா யோசுவாவிடம், “உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களை யோர்தான் நதியைவிட்டு வெளியே வரும்படி கட்டளையிடு” என்றார். அவ்வாறே யோசுவா ஆசாரியர்களை யோர்தானை விட்டு வெளியே வாருங்கள் எனக் கட்டளையிட்டான். ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு, ஆற்றிலிருந்து கரையேறி வெளியே வந்தார்கள். அவர்களுடைய பாதம் வறண்ட நிலத்தை மிதித்தவுடன் யோர்தானின் தண்ணீர் தங்களிடத்திற்குத் திரும்பி முன்போலவே பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. முதலாம் மாதம் பத்தாம் தேதியில் மக்கள் யோர்தானிலிருந்து, எரிகோவின் கிழக்கு எல்லையிலுள்ள கில்காலில் முகாமிட்டார்கள். அவர்கள் யோர்தான் நதியிலிருந்து எடுத்துவந்த பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலில் நிறுத்திவைத்தான். அவ்வேளையில் அவன் இஸ்ரயேல் மக்களிடம் கூறியதாவது, “எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் தங்கள் தந்தையரிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ என கேட்கும்போது, அவர்களிடம், ‘யோர்தானை இஸ்ரயேலர் வறண்டநிலத்தின் வழியாக கடந்தார்கள்.’ யோர்தான் நதியை நீங்கள் கடந்து முடிக்கும்வரை உங்கள் இறைவனாகிய யெகோவா அந்நதியின் தண்ணீரை வற்றச்செய்தார். நாங்கள் கடந்து முடியும்வரை செங்கடலை எங்களுக்கு முன்பாக வற்றச்செய்ததுபோலவே, யோர்தான் நதியையும் வற்றப்பண்ணினார். பூமியின் மக்கள் யாவரும் யெகோவாவினுடைய கரம் வல்லமையானது என அறியவும் எப்பொழுதும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பயந்துநடக்கவுமே அவர் இதைச் செய்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.

யோசுவா 4:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்கள் எல்லோரும் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, யெகோவா யோசுவாவை நோக்கி: நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, இங்கே யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாக நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் இடத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் மக்களில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தான் நதியின் நடுவில் உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாக இருக்கும்படிக்கு, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக, உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோங்கள். நாளை இந்தக் கற்கள் என்னவென்று உங்களுடைய பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள்: யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தான் நதியைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் மக்களுக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, யெகோவா யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தான் நதியின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள். யோர்தான் நதியின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது. மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, யெகோவா யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள். மக்களெல்லோரும் கடந்துபோனபின்பு, யெகோவாவுடைய பெட்டியும் கடந்துபோனது; ஆசாரியர்கள் மக்களுக்கு முன்பாகப் போனார்கள். ரூபன் கோத்திரத்தார்களும் காத் கோத்திரத்தார்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். ஏறக்குறைய 40,000 பேர் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, யெகோவாவுக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள். அந்த நாளிலே யெகோவா யோசுவாவை எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, யோசுவாவிற்கும், அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் பயந்திருந்தார்கள். யெகோவா யோசுவாவை நோக்கி: சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார். யோசுவா: யோர்தான் நதியிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியின் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்திற்குத் திரும்பி, முன்புபோல அதின் கரையெங்கும் புரண்டோடியது. இந்தவிதமாக முதலாம் மாதம் பத்தாம் தேதியிலே மக்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கிழக்கு எல்லையான கில்காலிலே முகாமிட்டார்கள். அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது, நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரை வழியாக இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். பூமியின் எல்லா மக்களும் யெகோவாவுடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் எல்லா நாட்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படும்படிக்கும், உங்களுடைய தேவனாகிய யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்துபோகும்வரைக்கும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய யெகோவா யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்துபோகும்வரைக்கும் வற்றிப்போகச்செய்தார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

யோசுவா 4:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)

எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்ததும் கர்த்தர் யோசுவாவை நோக்கி, “பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடு. ஆசாரியர்கள் நின்ற இடத்தில் நதியினுள்ளே தேடி அங்கிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து வருமாறு கூறு. இன்றிரவு தங்குமிடத்தில் அந்தப் பன்னிரண்டு கற்களையும் வை” என்றார். எனவே யோசுவா ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். பின் அவன் பன்னிரண்டு பேரையும் ஒன்றுகூட்டி, அம்மனிதரை நோக்கி, “நதியில் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த பெட்டியிருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். அக்கல்லை உங்கள் தோள்களில் சுமந்து வாருங்கள். இக்கற்கள் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகள், ‘இந்தக் கற்கள் எதற்காக?’ என்று உங்களிடம் கேட்கும்போது, யோர்தான் நதியின் தண்ணீரை கர்த்தர் ஓடாமல் நிறுத்தியதை அவர்களுக்குக் கூறுவீர்கள். கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டி நதியைக் கடந்தபோது, தண்ணீர் அசையாமல் நின்றது. இந்நிகழ்ச்சியை என்றென்றைக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் நினைவுகூருவதற்கு இக்கற்கள் உதவும்” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்தனர். யோர்தான் நதியின் மத்தியிலிருந்து அவர்கள் பன்னிரண்டு கற்களை எடுத்து வந்தனர். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் ஒவ்வொரு கல் இருந்தது. கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் இதைச் செய்தனர். அம்மனிதர்கள் கற்களைச் சுமந்து வந்து, அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் அக்கற்களை நாட்டினர். (யோசுவா நதியின் மத்தியில் பன்னிரண்டு கற்களை வைத்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர் சுமந்து வந்து நின்ற இடத்தில் அவன் அவற்றை வைத்தான். அக்கற்கள் இன்றைக்கும் அவ்விடத்திலேயே உள்ளன.) ஜனங்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கூறும்படி கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். யோசுவா செய்ய வேண்டியவையாக மோசே யோசுவாவுக்குக் கூறிய காரியங்களே அவையாகும். பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் இக்காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும்வரைக்கும் நதியின் மத்தியிலேயே நின்றுகொண்டிருந்தனர். ஜனங்கள் நதியை வேகமாகத் தாண்டினார்கள். ஜனங்கள் நதியைக் கடந்த பின்னர், ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டியை அவர்களுக்கு முன்பாகச் சுமந்து சென்றனர். ரூபன், காத் கோத்திரத்திலுள்ள ஆண்களும், மனாசே கோத்திரத்தில் பாதி ஆண்களும் மோசே சொல்லியிருந்தபடியே கீழ்ப்படிந்தனர். பிறருக்கு முன்பாக அவர்கள் நதியைக் கடந்தனர். அவர்கள் போருக்கு ஆயத்தமாயினர். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்களித்த தேசத்தைப் பெறுவதற்கு மீதி ஜனங்களுக்கு உதவுவதற்காகச் சென்றனர். ஏறத்தாழ 40,000 பேர், போருக்குத் தயாராகி, எரிகோவின் சமவெளிக்கு நேராக கர்த்தருக்கு முன்பாக அணியணியாய் சென்றார்கள். இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் உயர்ந்தவனாக யோசுவாவை கர்த்தர் அந்த நாளில் மேன்மைப்படுத்தினார். அப்போதிலிருந்து ஜனங்கள் யோசுவாவை மதித்தனர். மோசேயை அவர்கள் மதித்தபடியே, யோசுவாவையும் அவன் வாழ்க்கை முழுவதும் ஜனங்கள் மதித்தனர். பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் நதியில் நின்றுகொண்டிருக்கும்போதே, கர்த்தர் யோசுவாவை நோக்கி, “ஆசாரியர்களை நதியினின்று வெளியே வரும்படிக் கட்டளையிடு” என்றார். எனவே யோசுவா ஆசாரியர்களிடம், “யோர்தான் நதியிலிருந்து வெளியேறுங்கள்” என்று கட்டளையிட்டான். ஆசாரியர்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்து பெட்டியைச் சுமந்தபடி நதியிலிருந்து கரைக்கு வந்தனர். ஆசாரியர்களின் கால்கள் தரையில் பட்டதும், நதியின் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. ஜனங்கள் கடக்கும் முன்னர் இருந்ததுபோலவே தண்ணீர் கரைபுரண்டோடத் தொடங்கிற்று. முதலாம் மாதத்தின் பத்தாவது நாள், ஜனங்கள் யோர்தான் நதியைத் தாண்டினார்கள். எரிகோவின் கிழக்கிலுள்ள கில்காலில், ஜனங்கள் முகாமிட்டனர். யோர்தான் நதியில் எடுத்த பன்னிரண்டு கற்களையும் ஜனங்கள் சுமந்து வந்தனர். கில்காலில் யோசுவா அக்கற்களை நாட்டினான். யோசுவா ஜனங்களை நோக்கி, “வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இக்கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள். நீங்கள் பிள்ளைகளுக்கு, ‘உலர்ந்த நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்ததை இக்கற்கள் நினைவூட்ட உதவுகின்றன. உங்கள் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் போலவே யோர்தான் நதியின் தண்ணீரை ஓடாதவாறு நிறுத்தினார். ஜனங்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்லும் வரைக்கும் செங்கடலின் தண்ணீரைத் தடுத்து நிறுத்தியதை நினைவுகூருங்கள்.’ கர்த்தர் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்பதை இந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் அறிந்துகொள்வதற்காக கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் எப்போதும் அஞ்சுவார்கள் என்று கூறுங்கள்” என்றான்.

யோசுவா 4:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள். நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள். யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது. மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள். ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள். ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்த சன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள். அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார். யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது. இந்தப் பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள். அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.