யோசுவா 3:15-17
யோசுவா 3:15-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோகும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள், சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள்.
யோசுவா 3:15-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வழக்கம்போல் அறுவடை காலத்தில், யோர்தான் நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தானை அடைந்து அவர்கள் பாதங்கள் தண்ணீரில் பட்டதும், மேல் இருந்து பாய்ந்துவந்த நீர் ஓடாமல் நின்றது. அது வெகுதொலைவில், சரேத்தான் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஆதாம் என்னும் பட்டணத்தில் குவிந்துநின்றது. அதேவேளையில் கீழ்நோக்கி ஓடும் நீர் சவக்கடலுக்குள் வழிந்தோடிப்போயிற்று. இவ்வாறு இஸ்ரயேலர் எரிகோவுக்கு நேரே யோர்தானைக் கடந்து சென்றார்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தான் நடுவில் வறண்ட நிலத்தில் உறுதியாய்த் தரித்து நின்றனர். இவ்வாறு இஸ்ரயேலர் அனைவரும் வறண்டநிலத்தின் வழியாக நதியைக் கடந்து முடிக்கும்வரை, ஆசாரியர்கள் அங்கேயே நின்றார்கள்.
யோசுவா 3:15-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.
யோசுவா 3:15-17 பரிசுத்த பைபிள் (TAERV)
(அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனவே நதியில் தண்ணீர் பெருகியிருந்தது.) பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் நதிக்கரையை அடைந்தனர். அவர்கள் கரையோரத்தில் தண்ணீரில் கால் வைத்தனர். உடனே, தண்ணீர் ஓடாமல் நின்று ஒரு அணைப்போல் தேங்கிக்கொண்டது. (யோர்தான் அருகிலுள்ள ஊராகிய) ஆதாம் வரைக்கும் நதியின் தண்ணீர் குவிந்து நின்றது. எரிகோ அருகே ஜனங்கள் நதியைக் கடந்தனர். அவ்விடத்தில் நிலம் வறண்டது, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவாறே நதியின் நடுப்பகுதிவரைக்கும் சென்று அங்கே நின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் யோர்தான் நதியை உலர்ந்த நிலத்தின் வழியாக கடக்கும் மட்டும் ஆசாரியர்கள் அங்கேயே நின்றனர்.