யோசுவா 3:1-17

யோசுவா 3:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதிகாலையில் யோசுவாவும், இஸ்ரயேலரும் சித்தீமிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தனர். அதைக் கடக்குமுன் அவர்கள் அங்கே முகாமிட்டார்கள். மூன்றுநாட்களின்பின் அதிகாரிகள் முகாமெங்கும் போய் மக்களிடம் உத்தரவிட்டு, “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியையும், லேவியர்களான ஆசாரியர்கள் அதைச் சுமந்து செல்வதையும் கண்டவுடன், நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு அதைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும். அப்பொழுது நீங்கள் எவ்வழியால் போகவேண்டும் என அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் முன்னொருபோதும் அவ்வழியாகப் போனதில்லை. உடன்படிக்கைப் பெட்டிக்கும் உங்களுக்கும் இடையில், ஏறக்குறைய இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கவேண்டும். அதனருகே நீங்கள் போகவேண்டாம்” என்று சொன்னார்கள். பின்னர் யோசுவா, “நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்தி அர்ப்பணியுங்கள். ஏனெனில் நாளைக்கு யெகோவா உங்கள் மத்தியில் வியக்கத்தக்க செயல்களைச் செய்வார்” என்று மக்களுக்குச் சொன்னான். அதன்பின் யோசுவா ஆசாரியர்களிடம், “நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு மக்களுக்கு முன்னே கடந்துசெல்லுங்கள்” என்றான். அப்படியே அவர்கள் அதைத் தூக்கிக்கொண்டு மக்களின் முன்னே சென்றார்கள். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இன்று நான் உன்னை இஸ்ரயேலரின் எல்லாருடைய பார்வையிலும் மேன்மைப்படுத்தத் தொடங்குவேன். இதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோலவே, உன்னுடனும் இருக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். மேலும் நீ, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களிடம், ‘நீங்கள் யோர்தான் நதிக்கரை ஓரத்தை அடைந்தவுடன் நதிக்குள்போய் நில்லுங்கள்’ எனச் சொல்” என்றார். அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரிடம், “இங்கே வந்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர்வாழும் இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை இவ்விதமாகவே நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர் நிச்சயமாகக் கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் உங்களுக்கு முன்பாக நாட்டைவிட்டு நிச்சயம் துரத்திவிடுவார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இதோ பாருங்கள். பூமி முழுவதற்கும் கர்த்தராய் இருக்கிறவரின் உடன்படிக்கைப்பெட்டி உங்களுக்கு முன்பாக யோர்தானுக்குச் செல்லும். இப்பொழுது நீங்கள் இஸ்ரயேல் கோத்திரங்களிலிருந்து, கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுங்கள். பூமி முழுவதற்கும் கர்த்தராய் இருக்கிற யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் யோர்தான் நதியில் தம் பாதங்களை வைத்ததும், கீழ்நோக்கிப்பாயும் தண்ணீர், ஓடாமல் குவிந்துநிற்கும்” என்று சொன்னான். அப்படியே மக்கள் யோர்தானைக் கடப்பதற்காக முகாமைவிட்டு புறப்பட்டபோது, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் அவர்களுக்கு முன்பாகச் சென்றார்கள். வழக்கம்போல் அறுவடை காலத்தில், யோர்தான் நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தானை அடைந்து அவர்கள் பாதங்கள் தண்ணீரில் பட்டதும், மேல் இருந்து பாய்ந்துவந்த நீர் ஓடாமல் நின்றது. அது வெகுதொலைவில், சரேத்தான் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஆதாம் என்னும் பட்டணத்தில் குவிந்துநின்றது. அதேவேளையில் கீழ்நோக்கி ஓடும் நீர் சவக்கடலுக்குள் வழிந்தோடிப்போயிற்று. இவ்வாறு இஸ்ரயேலர் எரிகோவுக்கு நேரே யோர்தானைக் கடந்து சென்றார்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தான் நடுவில் வறண்ட நிலத்தில் உறுதியாய்த் தரித்து நின்றனர். இவ்வாறு இஸ்ரயேலர் அனைவரும் வறண்டநிலத்தின் வழியாக நதியைக் கடந்து முடிக்கும்வரை, ஆசாரியர்கள் அங்கேயே நின்றார்கள்.

யோசுவா 3:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதிகாலையிலே யோசுவா எழுந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சித்தீமிலிருந்து பயணம்செய்து, யோர்தான்வரைக்கும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இரவு தங்கினார்கள். மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய், மக்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியர்களாகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்களுடைய இடத்தைவிட்டுப் பயணம்செய்து, அதைப் பின்பற்றிச்செல்லுங்கள். உங்களுக்கும் அதற்கும் 3,000 அடிகள் தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். யோசுவா மக்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளுங்கள்; நாளைக்குக் யெகோவா உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்னே போனார்கள். யெகோவா யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவதற்கு, இன்று அவர்களுடைய கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தான் நதியில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் இங்கே வந்து, உங்களுடைய தேவனாகிய யெகோவாடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியர்களையும், ஏத்தியர்களையும், ஏவியர்களையும், பெரிசியர்களையும், கிர்காசியர்களையும், எமோரியர்களையும், எபூசியர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். மக்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை மக்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்வரைக்கும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டோடும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; சவக்கடல் என்னும் சமவெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடினது; அப்பொழுது மக்கள் எரிகோவிற்கு எதிரே கடந்துபோனார்கள். எல்லா மக்களும் யோர்தான் நதியைக் கடந்துபோகும்வரைக்கும், யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் தண்ணீரில்லாத உலர்ந்த தரைவழியாகக் கடந்துபோனார்கள்.

யோசுவா 3:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் காலையில் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் எழுந்து, அகாசியாவை (சித்தீமை) விட்டு புறப்பட்டு யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்கள். அவர்கள் நதியைக் கடக்கும் முன்னர், அங்கே நதிக்கரையில் முகாமிட்டார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைவர்கள் முகாமிற்குள் சுற்றிப் பார்த்தார்கள். அவர்கள் ஜனங்களிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியரும், லேவியரும் சுமந்து செல்வதைக் காண்பீர்கள். அப்போது, நீங்கள் அவர்களைப் பின்தொடர வேண்டும். ஆனால் மிகவும் நெருங்கிச் செல்லாதீர்கள். 2,000 முழ தூரத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் இவ்வழியாக வந்ததில்லை. ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்தால், எங்கு செல்வதென்பதை அறிவீர்கள்” என்று ஆணைகள் கொடுத்தார்கள். அப்போது யோசுவா ஜனங்களிடம், “நீங்கள் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளை கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்வார்” என்றான். பின் யோசுவா ஆசாரியர்களை நோக்கி, “உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்பாக நதியைக் கடந்து செல்லுங்கள்” என்றான். அவ்வாறே ஆசாரியர்களும் பெட்டியைச் சுமந்தவாறு ஜனங்களுக்கு முன்பாகச் சென்றார்கள். அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக உன்னை உயர்ந்த மனிதனாக்கினேன். அப்போது, நான் மோசேயோடு இருந்ததுபோலவே உன்னோடும் இருக்கிறேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்கிற ஆசாரியர்களிடம், ‘யோர்தான் நதியின் கரைவரைக்கும் நடந்து தண்ணீரினுள் இறங்கும் முன்பாக அங்கு சற்று நில்லுங்கள் என்று சொல்’” என்றார். அப்போது யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை வந்து கேளுங்கள். உயிருள்ள தேவன் உங்களோடிருக்கிறார் என்பதற்கும், அவர் பகைவரைத் தோற்கடிப்பார் என்பதற்கும் சான்றாக கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் அவர் தோற்கடித்து இத்தேசத்தை விட்டுப் போகுமாறு செய்வார். இதுவே அதற்கு சான்று. முழு உலகத்துக்கும் ஆண்டவராயிருப்பவரின் உடன்படிக்கைப் பெட்டி, நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டும்போது, உங்களுக்கு முன்னே செல்லும். இப்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்தும், குழுவுக்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய பெட்டியை ஆசாரியர் சுமந்து செல்வார்கள். உலகத்தின் ஆண்டவர் கர்த்தரே. அவர்கள் அப்பெட்டியை உங்களுக்கு முன்பாக யோர்தான் நதியில் சுமந்து செல்வார்கள். அவர்கள் தண்ணீருக்குள் கால் வைத்ததும், யோர்தான் நதியில் தண்ணீர் ஓடாமல் நின்று, அணைபோல் தேங்கியிருக்கும்” என்றான். உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் சுமந்து சென்றனர். முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ஜனங்கள் புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடக்க ஆரம்பித்தனர். (அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனவே நதியில் தண்ணீர் பெருகியிருந்தது.) பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் நதிக்கரையை அடைந்தனர். அவர்கள் கரையோரத்தில் தண்ணீரில் கால் வைத்தனர். உடனே, தண்ணீர் ஓடாமல் நின்று ஒரு அணைப்போல் தேங்கிக்கொண்டது. (யோர்தான் அருகிலுள்ள ஊராகிய) ஆதாம் வரைக்கும் நதியின் தண்ணீர் குவிந்து நின்றது. எரிகோ அருகே ஜனங்கள் நதியைக் கடந்தனர். அவ்விடத்தில் நிலம் வறண்டது, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவாறே நதியின் நடுப்பகுதிவரைக்கும் சென்று அங்கே நின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் யோர்தான் நதியை உலர்ந்த நிலத்தின் வழியாக கடக்கும் மட்டும் ஆசாரியர்கள் அங்கேயே நின்றனர்.

யோசுவா 3:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள். மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய், ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள். உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும். ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். ஜனங்கள் யோர்தானைக் கடந்து போகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோகும். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள், சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள்.