யோசுவா 23:9-16
யோசுவா 23:9-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இதன் நிமித்தமே யெகோவா பெரிதும் வல்லமையுள்ளதுமான நாடுகளை உங்கள் முன்பாகத் துரத்தியடித்துள்ளார். இன்றுவரை ஒருவராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான். ஆதலால் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூருவதில் மிகக் கவனமாயிருங்கள். “ஆனால் நீங்கள் வழிவிலகி, உங்கள் மத்தியில் வசிக்கும் பிற நாடுகளுக்குள் தப்பியவர்களுடன், நட்புகொண்டு, அவர்களுடன் கலப்புத்திருமணம் செய்யவோ, அவர்களுடன் உறவுகொள்ளவோ வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் இறைவனாகிய யெகோவா இனி ஒருபோதும் இந்த நாடுகளை உங்கள்முன் துரத்திவிடமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையும், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியாகவும், பொறியாகவும், உங்கள் முதுகுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களில் முட்களாகவும் இருப்பார்கள். “இதோ, பூமியின் மனிதர் எல்லோரும் போகும் வழியில் நானும் போகப்போகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றாகிலும் தவறவில்லை என்று நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அறிவீர்கள். அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. ஒன்றாயினும் தவறவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவாவின் நல்வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் உண்மையாய் நிறைவேறியது போலவே, அவர் உங்களுக்கு அளித்த இந்த நல்ல நாட்டிலிருந்து உங்களை அவர் அழித்துப்போடும்வரை, உங்கள்மேல் வருமென அவர் அச்சுறுத்திய தீமைகள் எல்லாவற்றையும் வரப்பண்ணுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறிப்போய் வேறு தெய்வங்களுக்குச் சேவைசெய்து, அவற்றை வணங்கினால், அவை எல்லாம் உங்கள்மேல் வரும். அப்பொழுது யெகோவாவின் கடுங்கோபம் உங்களுக்கு விரோதமாய் பற்றியெரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் விரைவில் அழிந்துபோவீர்கள்” என்றான்.
யோசுவா 23:9-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான தேசங்களைத் துரத்தியிருக்கிறார்; இந்த நாள்வரைக்கும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார். ஆகவே, உங்களுடைய தேவனாகிய யெகோவா விடம் அன்புசெலுத்தும்படி, உங்களுடைய ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால், உங்களுடைய தேவனாகிய யெகோவா இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள். இதோ, இன்று நான் பூலோகத்தார்கள் எல்லோரும் போகிற வழியிலே போகிறேன்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்காகச் சொன்ன நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்களுடைய முழு இருதயத்தாலும், முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறினது, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களிடம் சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களுக்கு எப்படி நிறைவேறியதோ, அப்படியே, உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு, அவைகளைப் பணிந்துகொள்ளும் காலத்தில், உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழிக்கும்வரைக்கும், யெகோவா உங்கள்மேல் எல்லாத் தீமையான காரியங்களையும் வரச்செய்வார்; யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள் என்றான்.
யோசுவா 23:9-16 பரிசுத்த பைபிள் (TAERV)
“பெரிய, வல்லமையான தேசங்களை வெல்வதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவினார். அவர்கள் அங்கிருந்து போகும்படியாக கர்த்தர் துரத்தினார். உங்களைத் தோற்கடிக்க எந்தத் தேசத்தாலும் முடியவில்லை. கர்த்தருடைய உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் 1,000 பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கர்த்தர் உங்களுக்காகப் போர் செய்கிறார். கர்த்தர் இதைச் செய்வதாக வாக்களித்தார். எனவே உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து நேசியுங்கள். “கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்ககள். இஸ்ரவேலரல்லாத ஜனங்களோடு நண்பராகாதீர்கள். அவர்களில் யாரையும் மணந்து கொள்ளாதீர்கள். ஒருவேளை அவர்களோடு நீங்கள் நட்பு கொண்டால், பிறகு பகைவர்களை வெல்லும் முயற்சியில் கர்த்தர் உங்களுக்கு உதவமாட்டார். அந்த ஜனங்கள் உங்களுக்கு கண்ணியாக மாறுவார்கள். அவர்கள் உங்கள் கண்களில் புகையைப் போலவும், தூசியைப் போலவும் அமைந்து வேதனை விளைவிப்பார்கள். நீங்கள் இத்தேசத்தை விட்டுச்செல்ல வற்புறுத்தப்படுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த நல்ல நிலத்தைக் கொடுத்தார். இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் நீங்கள் அதை இழக்கக்கூடும். “இது நான் மரிக்கும் நேரம். கர்த்தர் மிகப் பெரிய காரியங்களைச் செய்தார் என்பதை அறிந்து உண்மையாகவே நம்புகிறீர்கள். தன் வாக்குறுதிகளை அவர் சற்றும்மீறவில்லை. அவர் நமக்கு வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றினார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்களித்த நல்லவை அனைத்தும் நிறைவேறின, நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமென அவர் உறுதியளித்தார். அவர் உங்களுக்குத் தந்த இத்தேசத்தினின்று உங்களைத் துரத்துவார் எனவும் உறுதியாகக் கூறினார். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும். நீங்கள் போய், அந்நிய தெய்வங்களை ஆராதித்தால் உங்கள் நிலத்தை இழப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் உங்கள் மீது கோபமைடைவார். அப்போது அவர் உங்களுக்குத் தந்த இந்த நல்ல இடத்தைவிட்டு விரைவில் துரத்தப்படுவீர்கள்” என்றான்.
யோசுவா 23:9-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங்கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால், உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள். இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.