யோசுவா 2:1-24

யோசுவா 2:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நூனின் மகனாகிய யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு ஒற்றர்களை இரகசியமாக அனுப்பினான். அவன் அவர்களிடம், “நீங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்கப் போங்கள். முக்கியமாக எரிகோ நகரைப் பாருங்கள்” என்று கூறினான். எனவே அவர்கள் எரிகோ நகருக்குச் சென்று ராகாப் என்னும் வேசியின் வீட்டில் தங்கினார்கள். அவ்வேளையில், “நாட்டை உளவுபார்க்க இஸ்ரயேலரில் சிலர் இன்றிரவு இங்கே வந்தார்கள்” என்ற செய்தி எரிகோ அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே எரிகோ அரசன் ராகாப்புக்கு, “உன்னிடம் வந்து, உன் வீட்டில் தங்கியிருக்கிற மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் இந்த நாடு முழுவதையும் உளவுபார்க்க வந்துள்ளார்கள்” என்று செய்தி அனுப்பினான். ஆனால் அந்தப் பெண்ணோ அந்த இரு மனிதரையும் கூட்டிக்கொண்டுபோய் மறைத்துவைத்தாள். அவள், “ஆம், அந்த ஆட்கள் என்னிடம் வந்தார்கள்; ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தவர்களென்று எனக்குத் தெரியாது. நகர வாசல்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டாகும் வேளையில் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டார்கள். எந்த வழியாகப் போனார்களோ எனக்குத் தெரியாது. இப்பொழுதே விரைவாய்ப் பின்தொடர்ந்து போனால், ஒருவேளை நீங்கள் அவர்களைப் பிடிக்கக்கூடும்” என்று கூறினாள். ஆனால் அவள் அவ்விரு ஒற்றர்களையும் வீட்டின் கூரையில் ஏற்றி, அங்கே போட்டிருந்த சணல் தட்டைகளுக்குள் அவர்களை மறைத்து வைத்திருந்தாள். உடனே அந்த மனிதர் யோர்தான் நதியின் துறைகளுக்குச் செல்லும் வீதி வழியே ஒற்றர்களைத் தேடிக்கொண்டு சென்றார்கள். தேடிச்சென்றவர்கள் வெளியே சென்றதும் நகரின் வாசல்கதவு மூடப்பட்டது. ஒற்றர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன், ராகாப் தன் வீட்டின் கூரைமேல் போய், அவர்களிடம் சொன்னதாவது: “இந்த நாட்டை யெகோவா உங்களுக்குக் கொடுத்துவிட்டார் என்று எனக்குத் தெரியும்; நாங்கள் அனைவரும் உங்களுக்கு பயப்படுகிறோம், எனவே இங்குள்ள அனைவரும் உங்கள்முன் நடுங்குகிறார்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யெகோவா உங்களுக்காக எவ்வாறு செங்கடலை வற்றச்செய்தார் என்பதைக் கேள்விப்பட்டோம்; அத்துடன் யோர்தான் நதியின் கிழக்கே வாழ்ந்த எமோரியர்களை நீங்கள் முழுவதும் அழித்தபோது அவர்களின் இரு அரசர்களான, சீகோனுக்கும், ஓகுக்கும் நீங்கள் செய்தவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்டதும் உங்கள் நிமித்தம் நாங்கள் அனைவரும் தைரியத்தை இழந்து, உள்ளம் சோர்ந்துபோனோம்; ஏனெனில் இறைவனாகிய உங்கள் யெகோவாவே மேலே வானத்திற்கும் கீழே பூமிக்கும் இறைவனாயிருக்கிறார். “எனவே இப்பொழுது நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதற்காக நீங்களும் என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவீர்களென யெகோவாவின்மேல் ஆணையிட்டு, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுங்கள். என் தாய் தகப்பனையும், சகோதர சகோதரிகளையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் நீங்கள் மரணத்தினின்று காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு வாக்குறுதி கொடுங்கள்” என்றாள். அதற்கு அந்த ஒற்றர்கள், “எங்கள் உயிர்களை உங்கள் உயிர்களுக்குப் பணையமாக வைக்கிறோம்! நாங்கள் செய்வதை நீ சொல்லாதிருந்தால், யெகோவா இந்த நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உன்னை தயவுடன் நடத்தி உண்மையாய் இருப்போம்” என அவளுக்கு உறுதியளித்தார்கள். ராகாப் வாழ்ந்த வீடு நகர மதிலின் ஒரு பகுதியிலிருந்தது, எனவே அவள் அவர்களை ஒரு கயிற்றினால் தன் வீட்டு ஜன்னல் வழியாக நகரத்திற்கு வெளியே இறக்கிவிட்டாள். கீழே இறக்கிவிடுமுன் அவள் அவர்களிடம், “உங்களைத் தேடுபவர்கள் உங்களைக் கண்டுபிடிக்காதபடி மலைகளுக்குப் போங்கள். அவர்கள் திரும்பி வரும்வரை மூன்று நாட்களுக்கு நீங்கள் மறைந்திருங்கள்; பின்பு உங்கள் வழியே போங்கள்” என்று கூறியிருந்தாள். அந்த மனிதர் அவளிடம், “எங்களை நீ ஆணையிடப்பண்ணிய இந்த வாக்குறுதிக்கு நாங்கள் கட்டுப்படுவதாயின், நாங்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது, நீ எங்களைக் கீழே இறக்கிய ஜன்னலில் இந்த சிவப்புக்கயிறு கட்டப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் உன் தாய் தகப்பனையும், சகோதரர்களையும் அவர்களோடு உன் குடும்பத்தாரையும் கூட்டிவந்து, உன் வீட்டினுள் வைத்திருக்கவேண்டும். எவராவது உன் வீட்டைவிட்டு வெளியேறி, வீதிக்கு வந்தால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலைமேல் இருக்கும். நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகள் அல்ல. ஆனால் உன்னுடன் வீட்டில் இருக்கும் எவராயினும் தாக்கப்பட்டால் அவர்களுடைய இரத்தப்பழி எங்கள்மேல் இருக்கும். ஆயினும் நாங்கள் செய்வதை நீ எவரிடமாவது சொன்னால், நீ எங்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குறுதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்கமாட்டோம்” எனக் கூறினார்கள். அதற்கு அவள், “நான் ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்” எனப் பதிலளித்தாள். அப்படியே அவள் அவர்களை அனுப்பிவைக்க, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவளும் சிவப்புக்கயிற்றை ஜன்னலில் கட்டி வைத்தாள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மலைகளுக்குப் போய் மூன்று நாட்கள் அங்கே தங்கினார்கள். அவர்களைத் தேடுகிறவர்கள் பாதைகளிலெல்லாம் தேடி அவர்களைக் காணாமல் திரும்பிப் போகும்வரை அங்கே இருந்தார்கள். அதன்பின்பு அவ்விரு மனிதர்களும் திரும்பினார்கள். அவர்கள் குன்றிலிருந்து இறங்கி யோர்தான் நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். அவர்கள் யோசுவாவிடம், “யெகோவா நிச்சயமாக இந்த நாடு முழுவதையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அந்த மக்கள் எல்லோரும் பயத்தினால் சோர்ந்து போயிருக்கிறார்கள்” என்றார்கள்.

யோசுவா 2:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நூனின் மகனாகிய யோசுவா சித்தீம் பாளையத்திலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபிடத்திற்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டிற்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்ப்பதற்காக வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். ராஜாவின் ஆட்கள் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைமுகம்வரை அவர்களைத் தேடிப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசற்கதவு அடைக்கப்பட்டது. அந்த மனிதர்கள் படுத்துக்கொள்வதற்குமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிச்சென்று, யெகோவா உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, யெகோவா உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகச்செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் அழித்துப்போட்ட எமோரியர்களின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்களுடைய இருதயம் கரைந்துபோனது, உங்களாலே எல்லோருடைய தைரியமும் அற்றுப்போனது; உங்களுடைய தேவனாகிய யெகோவாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். இப்போதும், நான் உங்களுக்கு தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்திற்கு தயவுசெய்வோம் என்று யெகோவாவுடைய நாமத்தில் எனக்கு சத்தியம் செய்து, நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரர்களையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடு வைத்து, எங்களுடைய ஜீவனை சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள். அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: எங்களுடைய ஜீவன் உங்களுடைய ஜீவனுக்கு சமம்; நீங்கள் எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்தாமலிருந்தால், யெகோவா எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் உங்களிடம் தயவாகவும் உண்மையாகவும் இருப்போம் என்றார்கள். அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாக இறக்கிவிட்டாள்; அவள் வீடு பட்டணத்தின் மதில்மேல் இருந்தது; பட்டணத்திலே அவள் குடியிருந்தாள். அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைப் பார்க்காதபடி, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவரும்வரைக்கும் அங்கே மூன்றுநாட்கள் ஒளிந்திருந்து, பின்பு உங்களுடைய வழியிலே போங்கள் என்றாள். அப்பொழுது அந்த மனிதர்கள் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல்கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டிலே சேர்த்துக்கொள். இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம். எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடு வீட்டில் இருக்கிற எவன்மீதாவது கைபோடப்பட்டதானால், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும். நீ எங்களுடைய காரியத்தை வெளிப்படுத்துவாயானால், நீ எங்கள் கையில் வாங்கின சத்தியத்திற்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள். அதற்கு அவள்: உங்களுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்த சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள். அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவரும்வரைக்கும், மூன்றுநாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழிகளிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணமுடியாமல்போனார்கள். அந்த இரண்டு மனிதர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு சம்பவித்த எல்லாவற்றையும் அவனுக்குத் தெரிவித்து; யெகோவா தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் மக்களெல்லோரும் நமக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனிடம் சொன்னார்கள்.

யோசுவா 2:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)

அகாசியாவில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், ஜனங்கள் அனைவரும் முகாமிட்டிருந்தனர். யோசுவா இரண்டு ஒற்றர்களை அனுப்பினான். அம்மனிதர்களை யோசுவா அனுப்பிய விவரம் யாருக்கும் தெரியாது. யோசுவா அவர்களிடம், “போய் தேசத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தைப் பார்த்து வாருங்கள்” என்றான். எனவே அவர்கள் எரிகோ நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்று, அங்கே இரவில் தங்கினர். அப்பெண்ணின் பெயர் ராகாப். சிலர் எரிகோவின் ராஜாவிடம் சென்று, “நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்” என்றனர். எனவே எரிகோவின் ராஜா ராகாபுக்கு, “உனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிற மனிதர்களை ஒளித்து வைக்காதே. அவர்களை வெளியே அழைத்து வா. அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க வந்துள்ளனர்” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினான். அப்பெண் அவ்விருவரையும் மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவள், “அவ்விருவரும் இங்கு வந்திருந்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்கிற விவரம் எனக்குத் தெரியாது. மாலையில், நகர வாயிலை அடைக்கும் சமயத்தில், அவ்விருவரும் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் விரைந்து சென்றால், அவர்களைப் பிடிக்கக் கூடும்” என்றாள். (ராகாப், அவள் இப்படி கூறினாலும், உண்மையில் அவ்விருவரையும், கூரையின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே அவள் குவித்து வைத்திருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.) எனவே ராஜாவால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி ராஜாவின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள். ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம், “உங்கள் ஜனங்களுக்கு கர்த்தர் இத்தேசத்தைக் கொடுத்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களுக்கு அச்சமூட்டுகிறீர்கள். இத்தேசத்தில் வாழும் ஜனங்கள் உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய ராஜாக்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த ராஜாக்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம். அந்தக் காரியங்களை நாங்கள் அறிந்து மிகவும் அஞ்சினோம். இப்போது, எங்களில் எந்த மனிதனுக்கும் உங்களை எதிர்க்கும் துணிவு இல்லை. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலே வானத்தையும், கீழே பூமியையும் ஆளுகிறார்! எனவே நீங்கள், இப்போது எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் இரக்கம் காட்டி, உங்களுக்கு உதவினேன். எனவே என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதாக கர்த்தருக்கு முன்னால் வாக்களியுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களென்று எனக்கு உறுதி கூறுங்கள். நீங்கள் எனது தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர் உட்பட, எனது குடும்பத்தார் அனைவரையும் உயிரோடு வாழ அனுமதிப்பதாக எனக்குக் கூறுங்கள். எங்களை மரணத்தினின்று விடுவிப்பதாக எனக்கு வாக்குறுதி அளியுங்கள்” என்றாள். அவ்விருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள், “உங்கள் உயிருக்கு எங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம். நாங்கள் செய்வதை யாருக்கும் சொல்லாதே. கர்த்தர், எங்களுக்குரிய நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உனக்கு இரக்கம் காட்டுவோம். நீ எங்களை நம்பலாம்” என்றனர். நகரத்தின் மதிலில் அப்பெண்ணின் வீடுகட்டப்பட்டிருந்தது. அது சுவரின் ஒரு பாகமாக அமைந்திருந்தது. எனவே அப்பெண் ஜன்னல் வழியே ஒரு கயிற்றின் மூலமாக அவ்விருவரையும் கீழே இறக்கினாள். அப்போது அப்பெண் அம்மனிதரை நோக்கி: “ராஜாவின் ஆட்கள் உங்களைக் காணாதபடிக்கு மேற்குத் திசையில் மலைகளின் உள்ளே சென்றுவிடுங்கள். அங்கு மூன்று நாட்கள் ஒளிந்திருங்கள். ராஜாவின் ஆட்கள் திரும்பி வந்தபின் நீங்கள் திரும்பிப் போகலாம்” என்றாள். அம்மனிதர்கள் அவளைப் பார்த்து, “நாங்கள் உனக்கு ஒரு வாக்குறுதி அளித்தோம். ஆனால் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். நாங்கள் தப்பிச்செல்ல உதவுவதற்கு நீ இந்தச் சிவப்புக் கயிற்றைப் பயன்படுத்துகிறாய். நாங்கள் இத்தேசத்திற்குத் திரும்பவும் வருவோம். அப்போது உன் வீட்டு ஜன்னலில் இந்தக் கயிற்றை நீ கட்ட வேண்டும். உன் தந்தை, தாய், குடும்பத்தினர் எல்லோரையும் உன்னோடு வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளவேண்டும். இவ்வீட்டில் இருக்கிற எல்லோரையும் நாங்கள் காப்போம். உன் வீட்லுள்ள யாரேனும் காயமுற்றால், நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகளாவோம். ஆனால் உன் வீட்டிலிருந்து ஒருவன் வெளியே போனால் அவன் கொல்லப்படக்கூடும். அவனுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம். அது அவனுடைய குற்றமாகும். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை உன்னோடு செய்கிறோம். ஆனால் நாங்கள் செய்கிறதை நீ யாருக்காவது கூறினால், இந்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் நீங்கலாயிருப்போம்” என்றனர். அதற்கு அப்பெண், “நீங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்வேன்” என்று கூறி அவர்களை வழியனுப்பினாள். அம்மனிதர்கள் அவள் வீட்டைவிட்டுச் சென்றனர். அப்பெண் ஜன்னலில் அச்சிவப்பு கயிற்றைக் கட்டினாள். அவ்விருவரும் அவள் வீட்டிலிருந்து மலைகளுக்குச் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். ராஜாவின் ஆட்கள் பாதைகளில் எல்லாம் தேடினார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நகருக்குத் திரும்பினார்கள். ஒற்றர்கள் இருவரும் மலைகளைவிட்டு நீங்கி, நதியைக் கடந்து நூனின் குமாரனாகிய யோசுவாவிடம் சென்றார்கள். தாங்கள் அறிந்து வந்த எல்லாவற்றையும் அவர்கள் யோசுவாவுக்குக் கூறினார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி, “கர்த்தர் நமக்கு உண்மையாகவே அத்தேசம் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் நமக்கு அஞ்சுகிறார்கள்” என்றார்கள்.

யோசுவா 2:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்றாள். அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள்மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய், கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு, நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள். அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்கு தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள். அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள். அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள். அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள். இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம். எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடே வீட்டில் இருக்கிற எவன்மேலாகிலும் கைபோடப்பட்டதேயாகில், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும். நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள். அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக்கயிற்றை ஜன்னலிலே கட்டி­வைத்தாள். அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்றுநாள் அங்கே தரித்திருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழியிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள். அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து; கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்கு முன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.