யோசுவா 2:1-10

யோசுவா 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நூனின் மகனாகிய யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு ஒற்றர்களை இரகசியமாக அனுப்பினான். அவன் அவர்களிடம், “நீங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்கப் போங்கள். முக்கியமாக எரிகோ நகரைப் பாருங்கள்” என்று கூறினான். எனவே அவர்கள் எரிகோ நகருக்குச் சென்று ராகாப் என்னும் வேசியின் வீட்டில் தங்கினார்கள். அவ்வேளையில், “நாட்டை உளவுபார்க்க இஸ்ரயேலரில் சிலர் இன்றிரவு இங்கே வந்தார்கள்” என்ற செய்தி எரிகோ அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே எரிகோ அரசன் ராகாப்புக்கு, “உன்னிடம் வந்து, உன் வீட்டில் தங்கியிருக்கிற மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் இந்த நாடு முழுவதையும் உளவுபார்க்க வந்துள்ளார்கள்” என்று செய்தி அனுப்பினான். ஆனால் அந்தப் பெண்ணோ அந்த இரு மனிதரையும் கூட்டிக்கொண்டுபோய் மறைத்துவைத்தாள். அவள், “ஆம், அந்த ஆட்கள் என்னிடம் வந்தார்கள்; ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தவர்களென்று எனக்குத் தெரியாது. நகர வாசல்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டாகும் வேளையில் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டார்கள். எந்த வழியாகப் போனார்களோ எனக்குத் தெரியாது. இப்பொழுதே விரைவாய்ப் பின்தொடர்ந்து போனால், ஒருவேளை நீங்கள் அவர்களைப் பிடிக்கக்கூடும்” என்று கூறினாள். ஆனால் அவள் அவ்விரு ஒற்றர்களையும் வீட்டின் கூரையில் ஏற்றி, அங்கே போட்டிருந்த சணல் தட்டைகளுக்குள் அவர்களை மறைத்து வைத்திருந்தாள். உடனே அந்த மனிதர் யோர்தான் நதியின் துறைகளுக்குச் செல்லும் வீதி வழியே ஒற்றர்களைத் தேடிக்கொண்டு சென்றார்கள். தேடிச்சென்றவர்கள் வெளியே சென்றதும் நகரின் வாசல்கதவு மூடப்பட்டது. ஒற்றர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன், ராகாப் தன் வீட்டின் கூரைமேல் போய், அவர்களிடம் சொன்னதாவது: “இந்த நாட்டை யெகோவா உங்களுக்குக் கொடுத்துவிட்டார் என்று எனக்குத் தெரியும்; நாங்கள் அனைவரும் உங்களுக்கு பயப்படுகிறோம், எனவே இங்குள்ள அனைவரும் உங்கள்முன் நடுங்குகிறார்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யெகோவா உங்களுக்காக எவ்வாறு செங்கடலை வற்றச்செய்தார் என்பதைக் கேள்விப்பட்டோம்; அத்துடன் யோர்தான் நதியின் கிழக்கே வாழ்ந்த எமோரியர்களை நீங்கள் முழுவதும் அழித்தபோது அவர்களின் இரு அரசர்களான, சீகோனுக்கும், ஓகுக்கும் நீங்கள் செய்தவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.

யோசுவா 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நூனின் மகனாகிய யோசுவா சித்தீம் பாளையத்திலிருந்து வேவுபார்க்கிறவர்களாகிய இரண்டு மனிதர்களை இரகசியமாக வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயருடைய விலைமாதுவின் வீட்டிற்குச் சென்று, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்ப்பதற்காக, இஸ்ரவேல் மக்களில் சில மனிதர்கள் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபிடத்திற்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டிற்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்ப்பதற்காக வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். அந்தப் பெண் அந்த இரண்டு மனிதர்களையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: உண்மைதான், என்னிடத்தில் மனிதர்கள் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எந்த ஊரைச்சார்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. பட்டணத்தின் வாசற்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டும்வேளையிலே, அந்த மனிதர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கு போனார்கள் என்று எனக்குத் தெரியாது; சீக்கிரமாகப் போய் அவர்களைத் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறச்செய்து, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் நார்களுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். ராஜாவின் ஆட்கள் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைமுகம்வரை அவர்களைத் தேடிப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசற்கதவு அடைக்கப்பட்டது. அந்த மனிதர்கள் படுத்துக்கொள்வதற்குமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிச்சென்று, யெகோவா உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, யெகோவா உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகச்செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் அழித்துப்போட்ட எமோரியர்களின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

யோசுவா 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

அகாசியாவில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், ஜனங்கள் அனைவரும் முகாமிட்டிருந்தனர். யோசுவா இரண்டு ஒற்றர்களை அனுப்பினான். அம்மனிதர்களை யோசுவா அனுப்பிய விவரம் யாருக்கும் தெரியாது. யோசுவா அவர்களிடம், “போய் தேசத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தைப் பார்த்து வாருங்கள்” என்றான். எனவே அவர்கள் எரிகோ நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்று, அங்கே இரவில் தங்கினர். அப்பெண்ணின் பெயர் ராகாப். சிலர் எரிகோவின் ராஜாவிடம் சென்று, “நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்” என்றனர். எனவே எரிகோவின் ராஜா ராகாபுக்கு, “உனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிற மனிதர்களை ஒளித்து வைக்காதே. அவர்களை வெளியே அழைத்து வா. அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க வந்துள்ளனர்” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினான். அப்பெண் அவ்விருவரையும் மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவள், “அவ்விருவரும் இங்கு வந்திருந்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்கிற விவரம் எனக்குத் தெரியாது. மாலையில், நகர வாயிலை அடைக்கும் சமயத்தில், அவ்விருவரும் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் விரைந்து சென்றால், அவர்களைப் பிடிக்கக் கூடும்” என்றாள். (ராகாப், அவள் இப்படி கூறினாலும், உண்மையில் அவ்விருவரையும், கூரையின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே அவள் குவித்து வைத்திருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.) எனவே ராஜாவால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி ராஜாவின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள். ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம், “உங்கள் ஜனங்களுக்கு கர்த்தர் இத்தேசத்தைக் கொடுத்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களுக்கு அச்சமூட்டுகிறீர்கள். இத்தேசத்தில் வாழும் ஜனங்கள் உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய ராஜாக்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த ராஜாக்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம்.

யோசுவா 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்றாள். அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள்மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய், கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.