யோசுவா 17:1-17
யோசுவா 17:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசே கோத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட நிலப்பங்கு இதுவே. இது மனாசேயின் மூத்த மகன் மாகீருக்கே கொடுக்கப்பட்டது. மாகீர் என்பவன் கீலேயாத் மக்களின் முற்பிதா. மாகீர் மக்கள் சிறந்த போர் வீரராயிருந்தபடியால் கீலேயாத், பாசான் ஆகிய பிரதேசங்கள் அவர்களுக்குக் கிடைத்தன. இந்த நிலப்பங்கு மனாசேயின் மீதியாயிருந்த மக்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், சீகேம், எப்பேர், செமிதா ஆகியோரின் வம்சங்களுக்குச் சொத்துரிமையாகக் கிடைத்தது. இவர்களே வம்சங்களின்படி யோசேப்பின் மகனாகிய மனாசேயின் மற்ற ஆண் மக்கள். செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லை, மகள்களே இருந்தனர், இவன் கீலேயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன், கீலேயாத் மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன், செலொப்பியாத்தின் மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும். அவர்கள் ஆசாரியனான எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், மற்றும் தலைவர்களிடமும் சென்று, “எங்கள் சகோதரர்கள் இடையே எங்களுக்கும் சொத்துரிமையாக நிலம் கொடுக்கப்படவேண்டும் என்று யெகோவா மோசேயிடம் கட்டளையிட்டார்” என்று கூறினார்கள். எனவே யோசுவா யெகோவாவின் கட்டளைப்படி அவர்களுக்கும், அவர்களின் தகப்பனின் சகோதரர்களுடன் சொத்துரிமை நிலத்தை வழங்கினான். எனவே யோர்தானின் கிழக்கே கீலேயாத், பாசான் என்னும் இடங்களுடன் இன்னும் பத்து நிலத்துண்டுகளை மனாசேயின் சந்ததியினர் பெற்றனர். ஏனெனில் மனாசேயின் மகள்கள், அவனுடைய மகன்களோடு சொத்துரிமைப் பங்கைப் பெற்றனர். கீலேயாத் நாடு மனாசேயின் வழித்தோன்றல்களின் மிகுதியானோருக்கு சொத்துரிமையாயிற்று. மனாசேயினருக்குரிய நிலப்பரப்பு ஆசேரிலிருந்து சீகேமின் கிழக்கே உள்ள மிக்மேத்தா வரையும் பரந்திருந்தது. எல்லையானது அங்கிருந்து தெற்கு நோக்கி என் தப்புவாவின் நீரூற்றண்டை மக்கள் குடியிருந்த மலைகளையும் உள்ளடக்கிச்சென்றது. தப்புவாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமானது. ஆனால் மனாசேயின் எல்லையில் இருந்த தபுவாவின் நகரோ எப்பிராயீம் கோத்திரத்திற்குச் சொந்தமானது. அங்கிருந்து எல்லை தென்திசையாகப் போய் கானா கணவாயை அடைந்தது. எப்பிராயீமுக்குச் சொந்தமான பட்டணங்களும் மனாசேக்குச் சொந்தமான பட்டணங்களும் அருகேயிருந்தன. ஆனால் மனாசேக்குச் சொந்தமான நிலத்தின் எல்லை கணவாயின் வடக்கேபோய் மத்திய தரைக்கடலில் முடிவுற்றது. தென்புறத்தில் உள்ள நிலம் எப்பிராயீமுக்கும் வடபுறத்தில் உள்ள நிலம் மனாசேயிக்கும் சொந்தமானது. மனாசேயின் பிரதேசம் மத்திய தரைக்கடல்வரை இருந்தது. வடக்கே ஆசேரும் கிழக்கே இசக்காரும் அதன் எல்லைகளாய் இருந்தன. இசக்கார், ஆசேரின் நிலப்பகுதிக்குள் பெத்ஷியான், இப்லேயாம் என்னும் இடங்களும், தோர், எந்தோர், தானாக், மெகிதோ பட்டணங்களின் மக்களும், அத்துடன் சுற்றுப்புறக் குடிருப்புகளும் மனாசேக்குச் சொந்தமானவை. மூன்றாவது பட்டணம் நாபோத் என அழைக்கப்பட்டது. ஆயினும் மனாசேயின் சந்ததியினர் இந்த நகரங்களில் குடியேற முடியவில்லை. ஏனெனில் அங்கு வசித்த கானானியர் அவ்விடத்தில் தொடர்ந்து வசிக்க உறுதிபூண்டிருந்ததால், அவர்களால் இவர்களைத் துரத்த முடியவில்லை. ஆனாலும் இஸ்ரயேலர் வலிமையில் பெருகியபோது கானானியரை நாட்டைவிட்டு முற்றிலும் விரட்டாமல் அவர்களை வற்புறுத்தி கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்கள். யோசேப்பின் மக்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குச் சொத்துரிமையான நிலத்தில் ஒரே ஒரு பங்கை மட்டும் சொத்துரிமையாக ஏன் தந்தீர்? யெகோவா எங்களை நிறைவாக ஆசீர்வதித்ததினால், நாங்கள் எண்ணிக்கையில் பெருந்தொகையாயிருக்கிறோம்” என்றார்கள். அதற்கு யோசுவா, “உங்கள் மக்களின் எண்ணிக்கை அதிகமெனின் எப்பிராயீமுக்கு அளிக்கப்பட்ட மலைநாடு உங்களுக்கு போதாததாய் இருப்பின், பெரிசியரும், ரெப்பாயீமியரும் வாழும் நாட்டில் உள்ள காடுகளை அழித்து, உங்களுக்குத் தேவையான நிலத்தை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றான். அதற்கு யோசேப்பின் மக்கள், “மலைநாடு எங்களுக்குப் போதாது. சமவெளியிலும், பெத்ஷியானிலும், அதின் குடியேற்றப் பகுதிகளிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் வாழும் கானானியர் எல்லோரிடமும் இரும்பு இரதங்கள் உண்டு” என்றனர். யோசுவா யோசேப்பின் பிள்ளைகளான எப்பிராயீம், மனாசே கோத்திரத்தாரிடம், “நீங்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்களாயும், அதிக வல்லமையுடையவர்களாயும் இருக்கிறீர்கள். உங்களுக்கு நிலத்தில் ஒரு பங்கு மாத்திரம் அல்ல.
யோசுவா 17:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்குத் தலைப்பிள்ளையானவன்; மனாசேயின் மூத்தமகனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனிதனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது. அபியேசரின் கோத்திரத்தார்களும், ஏலேக்கின் கோத்திரத்தார்களும், அஸ்ரியேலின் கோத்திரத்தார்களும், செகேமின் கோத்திரத்தார்களும், எப்பேரின் கோத்திரத்தார்களும், செமீதாவின் கோத்திரத்தார்களுமான மனாசேயினுடைய மற்ற மகன்களின் கோத்திரத்தார்களாகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தகுந்த பங்குகள் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்பின் மகனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாக இருந்தார்கள். மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு மகள்கள் தவிர மகன்கள் இல்லை; மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் மகனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்களுடைய சகோதரர்கள் நடுவே எங்களுக்குப் பங்குகள் கொடுக்கும்படி யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகவே அவர்களுடைய தகப்பனுடைய சகோதரர்களின் நடுவே, யெகோவாவுடைய கட்டளையின்படி, அவர்களுக்குப் பங்குகளைக் கொடுத்தான். யோர்தான் நதிக்கு கிழக்கு திசையில் இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்கள் அல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாகும். மனாசேயின் மகள்கள் அவனுடைய மகன்களோடு பங்குகளைப் பெற்றார்கள்; மனாசேயின் மற்றக் கோத்திரத்தார்களுக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது. மனாசேயின் எல்லை, ஆசேர் துவங்கி சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாக என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது. தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடு இருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் கோத்திரத்தின் வசமானது. பிறகு அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவில் இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து மத்திய தரைக்கடலில் போய் முடியும். தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; மத்திய தரைக் கடல் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது. இசக்காரிலும் ஆசேரிலும் இருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் கிராமங்களும், இப்லேயாமும் அதின் கிராமங்களும், தோரின் குடிகளும் அதின் கிராமங்களும் எந்தோரின் குடிகளும் அதின் கிராமங்களும், தானாகின் குடிகளும் அதின் கிராமங்களும் மெகிதோவின் குடிகளும் அதின் கிராமங்களும் மனாசேயினுடையவைகள். மனாசேயின் கோத்திரத்தார்கள் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிட முடியாமல்போனது; கானானியர்கள் அந்தப் பகுதியிலே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் பலத்து பெருகினபோதும், கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல், அவர்களைக் கட்டாய வேலைக்காரர்களாக்கிக்கொண்டார்கள். யோசேப்பின் சந்ததியினர் யோசுவாவை நோக்கி: யெகோவா எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாக இருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சொந்தமாக ஒரே அளவையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு யோசுவா: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்களாகவும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாகவும் இருந்தால், பெரிசியர்கள் ரெப்பாயீமியர்கள் குடியிருக்கிற மலைதேசத்திற்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு யோசேப்பின் சந்ததியினர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் கிராமங்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியர்களிடமும் இரும்பு இரதங்கள் உண்டு என்றார்கள். யோசுவா, யோசேப்பு வம்சத்தார்களாகிய எப்பிராயீமியர்களையும் மனாசேயர்களையும் நோக்கி: நீங்கள் எண்ணிக்கையில் பெருகினவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமட்டும் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.
யோசுவா 17:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு மனாசேயின் கோத்திரத்தினருக்கு நிலம் வழங்கப்பட்டது. மனாசே யோசேப்பின் முதல் குமாரன், கிலேயாத்தின் தந்தையாகிய மாகீர் மனாசேயின் முதல் குமாரன். மாகீர் சிறந்த வீரன், எனவே கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகள் அவனுக்குத் தரப்பட்டன. மனாசே கோத்திரத்தின் பிற குடும்பங்களுக்கும் தேசம் கொடுக்கப்பட்டது. அவை அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், செகேம், எப்பேர், செமீதா ஆகியோரின் குடும்பங்கள் ஆகும். இவர்கள் மனாசேயின் பிற குமாரர்கள். இவர்களின் குடும்பங்கள் தேசத்தில் பங்கைப் பெற்றன. எப்பேரின் குமாரன் செலொப்பியாத். கிலேயாத்தின் குமாரன் எப்பேர். மாகீரின் குமாரன் கிலேயாத், மனாசேயின் குமாரன் மாகீர், செலோப்பியாத்திற்கு குமாரர்கள் இருக்கவில்லை, அவனுக்கு ஐந்து பெண்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியவை ஆகும். ஆசாரியனாகிய எலெயாசாரிடமும் நூனின் குமாரனாகிய யோசுவாவிடமும், எல்லாத் தலைவர்களிடமும் அப்பெண்கள் சென்று, “ஆண்களைப் போலவே எங்களுக்கும் நிலத்தைத் தரும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். எலெயாசார் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அப்பெண்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுத்தான். எனவே ஆண்களைப் போன்றே இந்த குமாரத்திகளும் நிலத்தைப் பெற்றார்கள். யோர்தான் நதிக்கு மேற்கே பத்துப் பகுதிகளையும், யோர்தான் நதிக்கு மறுகரையில் கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகளையும் மனாசே கோத்திரத்தினர் பெற்றனர். மனாசேயின் குமாரத்திகளும், குமாரர்களைப் போன்றே நிலத்தில் பங்கைப் பெற்றனர். கீலேயாத் தேசம் மனாசேயின் பிற குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆசேருக்கும் மிக்மேத்தாத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மனாசேயின் நிலங்கள் இருந்தன. அது சீகேமுக்கு அருகில் இருந்தது. என்தப்புவாவின் தெற்கே எல்லை சென்றது. தப்புவாவைச் சூழ்ந்த பகுதி மனாசேக்கு உரியதாயிற்று. ஆனால் அவ்வூர் அவனுக்கு உரியதாகவில்லை. மனசேயின் தேசத்து எல்லையில் தப்புவா என்ற ஊர் இருந்தது. அது எப்பிராயீம் ஜனங்களுக்கு உரியதாக இருந்தது. மனாசேயின் எல்லை தெற்கே கானா நதிவரைக்கும் தொடர்ந்தது. இப்பகுதி மனசே கோத்திரத்தினருக்கு உரியதாக இருந்தும், நகரங்கள் எப்பிராயீமுக்குச் சொந்தமாயின. நதிக்கு வடக்கே மனாசேயின் எல்லை அமைந்தது. அது மத்தியத்தரைக் கடல்வரை எட்டியது. தெற்கேயுள்ள தேசம் எப்பிராயீமுக்குச் சொந்தமானது. வடக்கேயுள்ள தேசம் மனாசேக்குச் சொந்தமானது. மத்தியத்தரைக் கடல் மேற்கு எல்லையாக இருந்தது. அதன் எல்லை வடக்கில் ஆசேரின் தேசத்தையும், கிழக்கில் இசக்காரின் தேசத்தையும் தொட்டது. இசக்கார், ஆசேர் ஆகியோரின் பகுதிகளிலும் மனாசே ஜனங்களின் ஊர்கள் இருந்தன. பெத்செயான், இப்லெயாம், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட சிற்றூர்கள் எல்லாம் மனாசே ஜனங்களுக்குச் சேர்ந்தன. தோர், எந்தோர், தானாக், மெகிதோ மற்றும் அவைகளைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நாபோத்தின் மூன்று ஊர்களிலும் அவர்கள் வாழ்ந்தனர். மனாசே கோத்திரத்து ஜனங்கள் அந்நகரங்களை முறியடிக்க முடியவில்லை. கானானியர்கள் அங்கு தொடர்ந்து வாழ்ந்தபோதிலும் இஸ்ரவேலர் வலியோராயினர். அப்போது கானானியரைத் தங்களுக்காக உழைக்கும்படி இஸ்ரவேலர் செய்தனர். ஆனால் அவர்கள் தேசத்தை விட்டுப் போகும்படியாக கானானியரை வற்புறுத்தவில்லை. யோசேப்பின் கோத்திரத்தினர் யோசுவாவிடம், “எங்களுக்கு ஒரு பகுதி நிலம் மாத்திரமே நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் நாங்களோ எண்ணிக்கையில் மிகுதியான அளவில் உள்ளோம். தம் ஜனங்களுக்காக கர்த்தர் கொடுத்த தேசத்தில் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் ஏன் எங்களுக்குக் கொடுத்தீர்கள்?” என்றனர். யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தீர்களேயானால் மலை நாட்டுக்குச் சென்று, அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலம் இப்போது பெரிசியருக்கும், ரெப்பாயீமீயருக்கும் உரியதாக உள்ளது. எப்பிராயீமின் மலை நாடு உங்களுக்கு அளவில் மிகவும் சிறியதாக இருந்தால் மட்டுமே அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான். யோசேப்பின் ஜனங்கள், “எங்களுக்கு எப்பிராயீமின் மலைநாடு போதுமான அளவு பெரியது அல்ல. ஆனால் அங்கு வாழும் கானானியரிடம் ஆற்றல் வாய்ந்த போர்க்கருவிகள் உள்ளன. அவர்களிடம் இரும்பாலாகிய தேர்கள் இருக்கின்றன! அந்த ஜனங்களே பள்ளத்தாக்கிலும் அதிகாரம் செலுத்துகின்றனர்! யெஸ்ரேயேல் பள்ளத்தாக்கு, பெத்செயான், அங்குள்ள சிறிய ஊர்கள் ஆகியவற்றின் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது” என்றார்கள். எப்பிராயீம், மனாசே, யோசேப்பின் ஜனங்களிடம் யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் பலராயிருக்கிறீர்கள். வல்லமை மிக்கவர்கள். நிலத்தில் ஒரு பகுதியைக் காட்டிலும் அதிகம் உங்களுக்குத் தரப்பட வேண்டும்.
யோசுவா 17:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது. அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்ற குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள். மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை; அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான். யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம். மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்ற புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது. மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது. தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று. அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும். தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது. இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள். மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள். யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டு தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இரும்புரதங்கள் உண்டு என்றார்கள். யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைதேசமும் உங்களுடையதாகும்.