யோசுவா 1:5-9

யோசுவா 1:5-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உன் வாழ்நாளெல்லாம் உன்னை எதிர்த்து வெற்றிபெற எவனாலும் முடியாதிருக்கும். நான் மோசேயுடன் இருந்ததுபோல, உன்னுடனும் இருப்பேன்; நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலகவுமாட்டேன்; உன்னைக் கைவிடவுமாட்டேன். நீ பலங்கொண்டு தைரியமாய் இரு; ஏனெனில் நான் இந்த மக்களின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்ட நாட்டை அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி, நீ அவர்களை வழிநடத்துவாய். “பலங்கொண்டு மிகத்தைரியமாயிரு. என் ஊழியன் மோசே உனக்கு அளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியக் கவனமாயிரு; அவற்றைவிட்டு வலதுபுறமோ இடதுபுறமோ நீ விலகாதே; அப்பொழுது நீ செல்லுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய். இந்த சட்டத்தின் புத்தகத்தை உன் வாயிலிருந்து விலக்காமல் தொடர்ந்துபடி; அதில் எழுதியிருக்கிற யாவற்றையும் செய்யக் கவனமாயிருக்கும்படி, அதில் இரவும் பகலும் தியானமாய் இரு. அப்பொழுது நீ செய்யும் எல்லாவற்றிலும் செழித்து வெற்றிபெறுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்.”

யோசுவா 1:5-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பெலன்கொண்டு திடமனதாக இரு; இந்த மக்களின் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் ஊழியக்காரனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாக இருப்பதற்கு மிகவும் பெலன்கொண்டு திடமனதாக இரு; நீ போகும் இடங்களெல்லாம் புத்திமானாக நடந்துகொள்ளும்படி, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாமல் இருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கச்செய்வாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.

யோசுவா 1:5-9 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் மோசேயோடு இருந்தது போல் உன்னோடும் இருப்பேன். உன் ஆயுள் உள்ளமட்டும் உன்னை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது. நான், உன்னைக் கைவிடமாட்டேன். ஒருபோதும் உன்னைவிட்டு விலகமாட்டேன். “யோசுவா, நீ வல்லமையும், தைரியமும் உள்ளவனாக இருக்கவேண்டும்! இந்த ஜனங்கள் தமக்குரிய தேசத்தைப் பெறும்படி நீ அவர்களை வழிநடத்த வேண்டும். இந்நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக நான் அவர்கள் முன்னோர்களுக்கு வாக்களித்தேன். ஆனால் நீயும் மற்றொரு காரியத்தில் உறுதியோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். எனது ஊழியனாகிய மோசே உனக்குக் கொடுத்த கட்டளைகளுக்குக் கண்டிப்பாக நீ கீழ்ப்படியவேண்டும். நீ அவற்றைச் சரியாகப் பின்பற்றினால், நீ செய்கிற எல்லாவற்றிலும் வெற்றி அடைவாய். சட்ட புத்தகத்தில் எழுதியிருப்பவற்றை எப்போதும் நினைவுகூர்ந்து, இரவும் பகலும் அதைப்படி. அப்போது அப்புத்தகத்தில் எழுதியிருப்பவைகளுக்கு நீ கீழ்ப்படிய முடியும். இதைச் செய்தால், நீ செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் ஞானமுள்ளவனாய் வெற்றி காண்பாய். நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார்.

யோசுவா 1:5-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.