யோனா 4:2-11

யோனா 4:2-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவன் யெகோவாவிடம், “யெகோவாவே இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன். கோபிக்கத் தாமதிப்பவர், அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனமிரங்குகிற இறைவன் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுதும், யெகோவாவே, என் உயிரை எடுத்துவிடும், நான் வாழ்வதைவிட சாவது மேலானது. ஏனெனில் நான் நினிவேயின் அழிவைக்குறித்து இறைவாக்குரைத்திருக்கிறேன்” என மன்றாடினான். ஆனால் யெகோவா அவனிடம், “நீ கோபமடைவது சரியானதோ?” எனக் கேட்டார். யோனா வெளியே போய் பட்டணத்தின் கிழக்கே ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் தனக்கென ஒரு குடிசையைப் போட்டு, அதன் நிழலில் அமர்ந்து அந்தப் பட்டணத்திற்குச் சம்பவிக்கப் போகிறதைப் பார்ப்பதற்காக அங்கு காத்திருந்தான். அப்பொழுது யெகோவாவாகிய இறைவன், யோனாவுக்கு மேலாக ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கப்பண்ணி, அதை வளரச்செய்தார். அது யோனாவுக்கு மேலாக வளர்ந்து, படர்ந்து அவனுக்கு நிழல் கொடுத்து, அவனுடைய கஷ்டத்தை நீக்கியது. யோனா அந்த ஆமணக்குச்செடியைக் குறித்து மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் மறுநாள் அதிகாலையில் இறைவன் ஒரு புழுவை அனுப்பினார், அது அந்த ஆமணக்குச்செடி முழுவதையும் அரித்ததினால் அது வாடிப்போயிற்று. சூரியன் உதித்து மேலே எழும்பியபோதோ, இறைவன் கடுஞ்சூடான கொண்டற்காற்றை அனுப்பினார், உச்சிவெயில் யோனாவின் தலையைச் சுட்டதினால், அவன் மிகவும் சோர்வுற்றுத் தளர்ந்துபோனான். “வாழ்வதைவிட எனக்கு சாவதே மேல்” எனக் கூறினான். ஆனால் இறைவன் யோனாவிடம், “இந்த ஆமணக்குச்செடிக்கு ஏற்பட்டதைப் பற்றி நீ கோபமடைவது சரியானதோ?” என்றார். அதற்கு அவன், “ஆம், சாகுமளவுக்கு எனக்குக் கோபம் உண்டு” என்றான். அதற்கு யெகோவா, “நீ அந்த ஆமணக்குச்செடியைப் பராமரிக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை. ஒரே இரவில் தானாகவே முளைத்து, ஒரே இரவில் அது செத்துப்போயிற்று. அதைக்குறித்து நீ கவலைப்படுகிறாயே. ஆனால் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசங்கூட தெரியாத, இலட்சத்து இருபதாயிரம்பேருக்கும் அதிகமான மக்கள் நினிவேயில் இருக்கிறார்கள். ஏராளமான வளர்ப்பு மிருகங்களும் அங்கு இருக்கின்றன. அந்த பெரிய பட்டணத்தைக் குறித்து நான் அக்கறைகொள்ள வேண்டாமோ?” என்று கேட்டார்.

யோனா 4:2-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன். இப்போதும் யெகோவாவே, என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான். அதற்குக் யெகோவா: நீ எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார். பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்திற்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்திற்கு நடக்கப்போகிறதைத் தான் பார்க்கும்வரைக்கும் அதின் கீழே நிழலில் உட்கார்ந்திருந்தான். யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனவருத்தத்திற்கு நீங்கலாக்கவும் தேவனாகிய யெகோவா ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரச்செய்தார்; அந்த ஆமணக்குச் செடியினால் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது. சூரியன் உதித்தபோது தேவன் வெப்பமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடிக்காக எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் சாகும்வரைக்கும் எரிச்சலாக இருக்கிறது நல்லதுதான் என்றான். அதற்குக் யெகோவா: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இரவிலே முளைத்ததும், ஒரு இரவிலே அழிந்துபோனதுமான ஆமணக்குச் செடிக்காக மனதுருகுகிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனிதர்களும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற பெரிய நகரமாகிய நினிவேக்காக நான் மனதுருகாமல் இருப்பேனோ என்றார்.

யோனா 4:2-11 பரிசுத்த பைபிள் (TAERV)

யோனா கர்த்தரிடம் முறையிட்டு, “நான் இது நடக்குமென்று அறிவேன்! நான் எனது சொந்த நாட்டில் இருந்தேன். நீர் என்னை இங்கு வரச்சொன்னீர். அந்த நேரத்தில், இப்பாவ நகரத்திலுள்ள மக்களை நீர் மன்னிப்பீர் என்பதை நான் அறிவேன். எனவே நான் தர்ஷிசுக்கு ஓடிப்போக முடிவுசெய்தேன். நீர் இரக்கமுள்ள தேவன் என்பது எனக்குத் தெரியும்! நீர் இரக்கங்காட்டி மக்களைத் தண்டிக்கமாட்டீர் என்பதை நான் அறிவேன்! நீர் கருணை நிறைந்தவர் என்பதை அறிவேன். இம்மக்கள் பாவம் செய்வதை நிறுத்தினால், நீர் அவர்களை அழிக்கவேண்டும் என்னும் திட்டத்தை மாற்றிக்கொள்வீர் என்றும் நான் அறிவேன். எனவே நான் இப்பொழுது உம்மை வேண்டுகிறேன், கர்த்தாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடும், நான் உயிரோடு இருப்பதைவிட மரித்துப் போவது நல்லது!” என்றான். பிறகு, கர்த்தர், “நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். யோனா இவை எல்லாவற்றுக்காகவும் கோபத்தோடு இருந்தான். எனவே அவன் நகரத்தை விட்டுப்போனான். யோனா, நகரத்திற்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்று, தனக்கென்று ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். பிறகு அவன் அங்கே நிழலில் உட்கார்ந்து, நகரத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கக் காத்துக்கொண்டிருந்தான். கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை யோனாவுக்கு மேல் வேகமாக வளரச் செய்தார். இது யோனா உட்காருவதற்குரிய நல்ல குளிர்ந்த நிழலைத் தந்தது. இது யோனவிற்கு மேலும் வசதியாக இருக்க உதவியது. யோனா அந்தச் செடிக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் காலையில், தேவன் அச்செடியைத் தின்பதற்கு ஒரு புழுவை அனுப்பினார். அப்புழு செடியைத் தின்னத் தொடங்கியது, செடி செத்துப்போனது. சூரியன் வானத்தில் உயரமாக வந்தபோது, தேவன் சூடான கிழக்குக் காற்று வீசச் செய்தார். சூரியன் யோனாவின் தலையை மிகச் சூடாக்கியது. யோனா மிகமிகப் பலவீனமானான், யோனா தன்னை மரிக்கவிடும்படி தேவனிடம் வேண்டினான். யோனா, “நான் உயிர் வாழ்வதைவிட மரிப்பதே நல்லது” என்றான். ஆனால் தேவன் யோனாவிடம், “இந்தச் செடி செத்ததற்காக நீ என் மீது கோபப்படுவது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். யோனா, “ஆம், நான் கோபப்படுவது சரிதான், நான் சாகிற அளவிற்குக் கோபமாக இருக்கிறேன்!” என்றார். கர்த்தர், “நீ அச்செடிக்காக எதுவும் செய்யவில்லை! நீ அதனை வளரச்செய்யவில்லை. அது இரவில் வளர்ந்தது, மறுநாள் அது செத்தது. இப்பொழுது நீ அச்செடியைப்பற்றி துக்கப்படுகிறாய். நீ ஒரு செடிக்காகக் கவலைப்படுவதானால், நிச்சயமாக நான் நினிவே போன்ற பெரிய நகரத்திற்காக வருத்தப்படலாம். நகரத்தில் ஏராளமான மனிதர்களும் மிருகங்களும் இருக்கிறார்கள். அந்த நகரத்தில் தாங்கள் தீமை செய்து கொண்டிருந்ததை அறியாத 1,20,000 க்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள்!” என்றார்.

யோனா 4:2-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார். பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான். யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று. சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.