யோனா 3:1-10

யோனா 3:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை யோனாவுக்கு வந்தது: “நீ பெரிய நகரமான நினிவேக்குப் போய், நான் உனக்குக் கொடுக்கும் செய்தியை அங்கே அறிவி” என்றார். யோனா யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து நினிவேக்குப் போனான். நினிவே ஒரு மாபெரும் நகராயிருந்தது; அதைச் சுற்றி நடக்க மூன்று நாட்கள் எடுக்கும். முதலாம் நாள் யோனா பட்டணத்துக்குள்ளே நடக்கத்தொடங்கி, “நினிவே இன்னும் நாற்பது நாட்களில் கவிழ்க்கப்படும்” என அறிவித்தான். நினிவேயின் மக்களோ இறைவனின் செய்தியை விசுவாசித்தார்கள். அவர்கள் எல்லோரும் உபவாச நாளை அறிவித்து சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லோரும் துக்கவுடை உடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் அரசனுக்கு எட்டியவுடனே, அவன் தன் அரியணையைவிட்டு எழுந்து, தன் அரச உடையைக் களைந்து, துக்கவுடை உடுத்தி புழுதியில் உட்கார்ந்தான். அதன்பின் அரசன் நினிவேயில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தான். “அரசனும், அவருடைய உயர்குடி மக்களும் பிறப்பித்த ஆணையாவது: “மனிதர் யாவரும், அத்துடன் மிருகமோ, மாட்டு மந்தையோ, ஆட்டு மந்தையோ எவையும் ஒன்றையும் சுவைத்துப் பார்க்கக்கூடாது. சாப்பிடவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் மிருகங்களும் துக்கவுடைகளினால் மூடப்படவேண்டும். ஒவ்வொருவரும் அவசரமாய் இறைவனைக் கூப்பிடட்டும். அவர்கள் தங்களுடைய தீமையான வழிகளையும் வன்முறையையும் விட்டுத் திரும்பட்டும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை, நாம் அழிந்துபோகாதபடி இறைவன் மனமிரங்கி, கருணைகொண்டு, தம்முடைய கடுங்கோபத்தை விட்டு திரும்பக்கூடும்.” இறைவன் அவர்கள் செய்தவற்றையும், எப்படி அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு விலகினார்கள் என்பதையும் கண்டார். அப்பொழுது அவர் கருணைகொண்டு, அவர்கள்மேல் கொண்டுவரப் பயமுறுத்திய அந்த அழிவை, அவர்கள்மேல் கொண்டுவரவில்லை.

யோனா 3:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இரண்டாவதுமுறை யெகோவாவுடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார். யோனா எழுந்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்று நாட்கள் நடை பிரயாண தூரமும் விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது. யோனா நகரத்தில் நுழைந்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான். அப்பொழுது நினிவேயிலுள்ள மக்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் சாக்கு உடையை அணிந்துகொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த அங்கியைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன்னுடைய ஆலோசகர்களும் தீர்மானித்த கட்டளையாக, நினிவே எங்கும் மனிதர்களும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபார்க்காமலிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருக்கவும், மனிதர்களும் மிருகங்களும் சணலினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி அதிக சத்தமாகக் கூப்பிடவும், அவரவர்கள் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும்விட்டுத் திரும்பவும்வேண்டும். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனமிரங்கி, தம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று சொல்லச்சொன்னான். அவர்கள் தங்களுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய செயல்களைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனமிரங்கி, அதைச் செய்யாமல் இருந்தார்.

யோனா 3:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார். எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும். யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார். நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள். நினிவேயின் ராஜா இவற்றைக் கேள்விப்பட்டான், ராஜாவும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே ராஜா தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். ராஜா தனது ராஜாவுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு ராஜா சாம்பல்மேல் உட்கார்ந்தான், ராஜா ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான். ராஜாவிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை: கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம். தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.

யோனா 3:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது. யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒரு நாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான். அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.